தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : மக்கள் மன்றம்
- ஜெ. ரஜினி ராம்கி

போன மாதம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லி ஒரு மத்திய அமைச்சரை நாடே தேடிக்கொண்டிருந்தது. போன வாரம் ஜாமீனின் வெளிவரமுடியாத பிடிவாரண்டுக்கு பதில் சொல்ல மத்தியப் பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டியிருந்து. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற புறக்கணிப்பு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்த்தோமே தவிர நடவடிக்கைகள் பாதிக்கப்படும்படி என்றைக்கும் நடந்து கொண்டேதேயில்லை என்கிற வியாக்கினம் வேறு.

சட்டமன்ற கலாட்டாக்களை பற்றி திரில்லர் நாவலே எழுதிவிடலாம். தமிழ்நாட்டில் மைக்கை பிடுங்கிக் கொண்டு அடிப்பதெல்லாம் சர்வசாதாரண விஷயம்.  ஆட்சிக் கலைப்பு, அணி மாறுவது எப்படின்னு லெக்சர் கொடுக்குமளவுக்கு ஆந்திரா எம்.எல்.ஏக்களுக்கு கெட்டிகாரத்தனம் ஜாஸ்தி. எல்லாரையும் மிஞ்சிய ஒரு அண்ணன் ஒருத்தர்னா அவர் உத்திரப்பிரதேசத்து எம்.எல்.ஏதான்! உள்ளாட்சி அமைப்புகளெல்லாம் இன்னிக்கு குட்டி சட்டமன்றம் மாதிரிதான் நடந்துகொள்கின்றன. மைக்கை உடைப்பது, நாற்காலியை வீசி எறிவது, வேஷ்டியை மடித்து கட்டி டேபிளின் மீது காபரா டான்ஸ் ஆடுவது இதெல்லாம் சகஜமான விஷயங்கள்.  நாட்டிலேயே பெண்களுக்கு பூரண சமத்துவம் கிடைக்கிற ஒரே இடம் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டம்தான்.

தேர்தல் மட்டுமல்ல, மக்கள் மன்றக் கூட்டங்களும் மக்களின் வரிப்பணத்தில்தான் கூட்டப்படுகின்றன என்பது நிறைய பேருக்கு தெரிந்தாலும் கேள்வி கேட்பாரில்லை. மக்கள் மன்றங்களில் நடைபெறும் விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் அரசியலை விலக்கிவிட்டு பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே இருக்காது. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கான இடம்தான் அது என்பதை யாருமே புரிந்துகொள்வதில்லை. உண்மையில் மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை சொல்வதற்கு கூட ஆளில்லை. மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லி ஊக்கப்படுத்த காந்திஜிக்கு பின்னர் இப்போதுதான் அப்துல் கலாம் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

காந்திஜி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த நேரம். இந்திய அரசியல் ஏகப்பட்ட குழப்பத்துடன் தாறுமாறாக கிடந்த நேரம். வந்தவுடன் அவர் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்துவிடவில்லை. முதலில் நாடுமுழுவதும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நாடு சுதந்திரமடைந்து இந்தியா என்கிற ஜனநாயக நாடு உருவாகும் பட்சத்தில் மக்களின் கடமை என்ன, ஆளுபவர்களின் சித்தாந்தங்கள், செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதை பற்றியெல்லாம் அவர் சொல்ல ஆரம்பித்தார். 

'சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் பணிவடக்கமும், தேசப்பற்றும், மனஉறுதியும், அச்சமின்மையும் நிறைந்தவர்களாகவும் கையாள வேண்டிய விவகாரங்களை பற்றி நன்கு உணர்ந்தவர்களாவும் இருந்தால்தான் நமக்கு நன்மை'  (யங் இந்தியா, 19.5.1920)

ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பேற்கும் அமைச்சர்கள் அந்தந்த துறையில் ஸ்பெஷலிஸ்டுகளாக இருக்கவேண்டும் என்கிற வாய்வழி விதி சொற்பமான அளவிலேயே இதுவரை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தியா போன்ற நூறு கோடி பேர் வாழும் நாட்டில் புரொபஷனல்களுக்கா பஞ்சமென்று கேட்டால் நிச்சயமாக இல்லையென்று சொல்லலாம். அப்படிப்பட்ட புரபொஷனல்களுக்கு அரசியல் தெரியாத காரணம்தான் பிரச்னை.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் யாருக்கு தூக்கம் போகிறதோ இல்லையோ வியாபார காந்தங்களுக்கு (Business Magnet) நிச்சயம் தூக்கம் இருக்காது. எந்த கட்சியிலிருந்து எத்தனைப் பெட்டிக்கு தூது வரப்போகிறதோ என்கிற கவலைதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை தீர்மானிக்க முடியாத பட்சத்தில் எல்லாக் கட்சியையும் அனுசரித்தாகவேண்டும்.

'தேர்தல்களுக்காக பணம் செலவிடும் தேவை காங்கிரசுக்கு ஏற்படக்கூடாது. மக்களின் பாராட்டுக்குரிய ஒரு ஸ்தாபனம் நியமிக்கும் வேட்பாளர்கள், அந்த ஸ்தாபனத்தின் முயற்சிகள், உதவிகள் எதுவுமின்றி தேர்ந்தெடுக்கப்படவேண்டும்'  (ஹரிஜன், 17.2.1946)

அரசியல் பக்காவான தொழிலாக மாறிவிட்ட காலத்தில் காந்திஜி சொன்னது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறிதான். ஆனால், காந்திஜி தேர்தல் செலவுகளை குறைப்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். உலகிலேயே ஏழ்மையான நாடான நம்நாட்டில் தேர்தல் செலவை குறைப்பதும் அடிக்கடி தேர்தல் வராமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அடிக்கடி தேர்தல் வராமல் பார்த்துக்கொள்வது மக்களின் கையில் இல்லை அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை

'மேலவை, கீழவை என்று இரு சட்டமன்றங்கள் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. சொல்லப்போனால் அதற்கு அவசியம் இல்லை என்பேன் ' (Gandhian Constitution for Free India)

இது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், அரசியல் லாபங்களுக்காக சில வட இந்திய மாநிலங்களில் மேலவை இன்றும் தொடருவதாகவும் ஒரு செய்தி.

சில வருஷங்களுக்கு முன்னால் பி.ஏ சங்மா சபாநாயகராக இருந்தார். கூட்டணி ஆட்சி இருக்கும் ஜனநாயக நாட்டில் பிரச்னைகளுக்கா பஞ்சம்? ஆனாலும், சங்மா பாராளுமன்றத்தில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் சிரித்தே சமாளித்துவிடுவார். அதற்கு பின்னர் வந்த சபாநாயகர்களுக்கோ எம்.பிக்களை கட்டி மேய்ப்பது அவ்வளவு கஷ்டமான காரியமாக இருந்தது. அந்த காலத்திலேயே ஒரு சபாநாயகர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை காந்திஜி அழகாக சொல்லியிருக்கிறார்.

'சபாநாயகரின் நிலை, பிரதம மந்திரியினுடைய காட்டிலும் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவைத் தலைவர் தமது இருக்கையில் அமரும்போது ஒரு நீதிபதியை போன்று செயலாற்றக் கடைமைப்பட்டுள்ளார். நடுநிலை தவறாத நியாயமான தீர்வு முடிவுகள் தரவேண்டியவர் அவர். அவையின் கண்ணியத்தை காத்து, உறுப்பினர்கக்கிடையே நல்லுறவும் நயநாகரிய நடத்தையும் நிலவ வழிகாட்டுவதும், ஒழுங்கு முறை விதிகளை அமல் செய்வதும் அவரது பொறுப்பேயாகும். புயல் வீச்சுகளுக்கு நடுவே அன்னார் அமைதியே உருவாய் செயல்படவேண்டும். எதிர்க்கட்சியாளரின் நன்மதிப்பை பெறவும் நியாயத்தை எடுத்துரைக்கவும் அவருக்குள்ள வாய்ப்பு வழிகள் வேறெந்த உறுப்பினர்க்கும் கிட்டுவதில்லை'  (ஹரிஜன், 16.7.1938)

காந்திஜி சொல்லியிருப்பது சட்டமன்ற சபாநாயகருக்கும் பொருந்தும். பொருந்தவேண்டும் என்றுதான் நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors