தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : விதியை மீறிய சோழன்
- என். சொக்கன்

பாடல் 37

ஒரு நாட்டை ஆளுகின்ற அரசனோ அல்லது அதிகாரியோ, தங்களின் சேவைக்குச் சம்பளமாக, அந்த நாட்டில் உள்ளவர்களிடமிருந்து வரி வசூலிக்கிறார்கள் - அந்த நாட்டின் பிரஜைகள் சம்பாதிக்கும் செல்வத்தில், ஆறில் ஒரு பங்கை இப்படி வரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, நீங்கள் ஆறாயிரம் பொன் சம்பாதித்தால், அதில் ஆயிரம் பொன் அரசனுக்குச் சொந்தம், அறுபது மூட்டை நெல் விளைவித்தால், அதில் பத்து மூட்டை அரசனுக்குச் சொந்தம்.

இந்தப் பழைய விதிமுறைதான், காலப்போக்கில் மேலும் வலுப்பெற்று, வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி என்று, மக்களின் மார்ச் மாதங்களைக் கலவரமாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்த விதிப்படி, ஆறில் ஒரு பங்கைமட்டுமே வரியாகப் பெறவேண்டிய ஒரு அரசன், தனது பிரஜைகளிடம் அதற்குமேல் வரி கேட்டால், அதிகப்படியான இந்த வரிச்சுமை, மக்களைச் சிரமப்படுத்தும் - ஆகவே, 'நல்ல' அரசர்கள், அந்தப் பாவத்தைச் செய்யமாட்டார்கள்.

ஆனால், காவிரி நீர் சூழ்ந்த நாட்டின் தலைவனாகிய சோழன், இந்த விதியை மீறிவிட்டான் என்று குற்றம் சாட்டுகிறாள் ஒரு பெண்.

இதென்ன கலாட்டா ? சோழனாவது, விதியை மீறுவதாவது ?

நம்பமுடியாத விநோதமாய்த் தோன்றுகின்ற இந்த விஷயத்தில், நாம் மேலும் விபரம் அறிய விரும்பினால், சோழனின்மீது காதல் மயக்கம் கொண்டிருக்கிற அந்தப் பெண், தன் தோழியிடம் பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக்கேட்கவேண்டும்.

'தோழி, அந்தச் சோழன், என்னுடைய நெஞ்சையும், நாணத்தையும், நலனையும் மொத்தமாய்க் கொள்ளையடித்துப்போய்விட்டான்.', என்கிறாள் அவள், 'நியாயப்படி, குடிமக்களின் சொத்தில் ஆறில் ஒரு பங்கைதானே அவன் வரியாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் ? ஆனால் இவன், எல்லாவற்றையும் இப்படி அள்ளிக்கொண்டு ஓடிவிட்டானே, இந்த அநியாயத்தை நான் யாரிடம் சொல்வேன் ?'


என்நெஞ்சும், நாணும், நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான் என்னே
அரவுஅகல் அல்குலாய் ஆறில்ஒன்று அன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்.

(நாண் - நாணம் / வெட்கம்,
புனல் - தண்ணீர்
புனல்நாடன் - தண்ணீர் வளம் நிறைந்த சோழ நாட்டு அரசன்
வௌவினான் - கைப்பற்றினான் / கவர்ந்துகொண்டான்
அரவு - பாம்பு
அகல்வு - விரிந்த
அல்குல் - பெண் குறி
புரவலர் - ஆட்சியாளர் / அரசர்)


பாடல் 38

அறிவுமதியின் திரைக் கவிதையொன்றில், 'கனவில் உனை நான் தீண்டிட, இமையே தடை', என்கிறது ஒரு காதல் நெஞ்சம்.

மாயத்தோற்றங்களாகிய இந்தக் கனவுகள், காதலில் விழுந்தவர்களுக்கு, ஒரே நேரத்தில் தோழனாகவும், எதிரியாகவும் இருக்கின்றன - எங்கோ இருக்கின்ற அவனை / அவளைக் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்துவதால், அந்தக் கனவுகளை நெகிழ்ந்து பாராட்டத் தோன்றுகிறது, ஆனால், அதேசமயம், மனதுக்குள் நிறைந்த அந்த உருவத்தைக் கண் திறந்து பார்க்கமுடியாது - கண்ணைத் திறந்தால், கனவு கலைந்துவிடுமே.

உயரமாய் எழும்பித் துள்ளும் பிரம்மாண்டமான அலைகளும், கூட்டமான மரக்கலங்களும் நிறைந்த பூம்புகார் நகரத்தின் அரசன் சோழன் - செங்கோல் வளையாமல் நல்லாட்சி நடத்துகிற அந்தச் சோழனின்மீது காதல் கொண்டவள் இந்தப் பெண். தினந்தோறும், அவனைக் கனவில் சந்தித்து மகிழ்கிறாள்.

ஆனால், அவளுக்கு ஒரு நீங்காத குறை, 'இமைகள் இறுக மூடியிருப்பதால், கனவில், என் காதலனைப் பார்க்கமுடியவில்லை.'

சரி, நேரில் பார்த்துக்கொண்டால் ஆச்சு.

'அதுவும்தான் முடியவில்லை.', என்கிறாள் அவள், 'அவன் நேரில் வரும்போது, வெட்கத்தால் தலை குனிந்துகொள்கிறேன். பின்னர், ஒருவழியாக தைரியம் சேர்த்துக்கொண்டு நான் நிமிர்ந்து பார்த்தால், அதற்குள், அவன் என்னைக் கடந்துபோய்விடுகிறான்.'

இப்படிக் கனவிலும், நனவிலும் சோழனைப் பார்க்கமுடியாமல், ஏங்கித் தவிக்கிறாள் இந்தக் காதலி.


கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன்விலக்கும் நாணும் இனவங்கம்
பொங்குஓதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று.

(காண்கொடா - பார்க்கமுடியாமல்
கலந்த - இணைந்த / மூடிக்கொண்ட
நாண் - வெட்கம்
வங்கம் - மரக்கலம்
பொங்கு ஓதம் - உயர்ந்து எழும் கடல் அலைகள்
போழும் - பிளக்கும் / கிழிக்கும்
புகாஅர் - புகார் நகரம்
வடுப்படுப்ப - குற்றம் ஏற்படுத்த / தவறு செய்ய)

Copyright © 2005 Tamiloviam.com - Authors