தமிழோவியம்
வானவில் : எட்டுப் பணியாளர்கள்
-

 

ராமுவும் மணியும் எட்டாம் வகுப்பு மாணவர்கள். இருவரும் ஒரே தெருவில் தான் குடியிருந்தார்கள். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் தான் படித்து வந்தார்கள். ஆனாலும் ஒன்றாக வந்து போக மாட்டார்கள். ஏனெனில் ராமு பணக்கார வீட்டுப் பையன். அவன் பெரிய பங்களாவில் வசித்து வந்தான். மணி ஏழை வீட்டுப் பையன். சிறிய வீட்டில் ஒண்டிக்குடித்தனம் தான்.!!

ராமுவின் தந்தை அவனுக்காகப் பணிபுரிய நிறைய ஆட்களை நியமித்திருந்தார். நல்ல புஷ்டியான ஆகாரம் கொடுப்பார். அவனுக்கு விளையாடுவதற்குக் கூடச் சோம்பல். குனிந்து, நிமிர்ந்து ஒரு வேலை கூடச் செய்யமாட்டான். எப்போதும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து முணுமுணுத்துக்கொண்டே இருப்பான்.

மணி சுறுசுறுப்பான பையன். தினமும் காலையில் எழுந்ததும் தேகப்பயிற்சி செய்வான். குளித்துவிட்டுப் படிப்பான். எளிய ஆகாரமானாலும் அதை அளவோடு நேரத்தில் சாப்பிடுவான். வீட்டுவேலைகளைச் செய்யத் தயங்கமாட்டான். மணியுடன் கூடப் பிறந்தவர்கள் 8 பேர். ஆகவே அனைவரும் வேலைகளைப் பங்குபோட்டுக்கொண்டு சரியாகச் செய்வார்கள். மணி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருந்தான்.

மணி எப்போதும் உண்மையைத் தான் பேசுவான். தன் கடமைகளைப் பொறுப்புடன் உரிய காலத்தில் செய்து முடிப்பான். படிப்பிலும் அவனை மிஞ்ச ஆளில்லை. ஆகவே ஆசிரியர்கள் அனைவருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். அவனையே வகுப்புத் தலைவனாக நியமித்திருந்தார்கள். அதனால் அவன் சில சமயங்களில் பிற மாணவர்களிடம் வேலை வாங்கும்படியாக இருந்தது. இது ராமுவுக்குப் பிடிக்கவில்லை. ஏழைப் பையனான மணியிடம் தான் பணிந்து வேலை செய்வதா என்ற எண்ணம் அவன் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் வகுப்பில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் சோம்பலுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். மற்ற பையன்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த ஆசிரியர் மணியைக் கூப்பிட்டு " ராமு ஏன் இப்படி இருக்கிறான்? விசாரித்துச் சொல்! " என்று சொல்லிவிட்டு வகுப்பினுள்ளேச் சென்றுவிட்டார்.

மணி ராமுவிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டதும் ராமுவிற்கு கோபம் வந்துவிட்டது. மிகுந்த சலிப்புடன், " ஓ! உனக்கு என் சலிப்பைப் பற்றி எப்படி புரியவைப்பேன்? வீட்டில் என்னுடைய வேலைகளைக் கவனிக்கும் ஆட்கள் இன்று வரவில்லை. அதனால் என்னுடைய வேலைகளை நானே கவனிக்கும்படி ஆகிவிட்டது. அதனால் தான் நான் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறே. மணி! உன்னுடைய உதவிக்கு ஆட்கள் வராத போது நீ எப்படிச் சமாளிக்கிறாய்? " என்று கேட்டான்.

மணி ஏழை என்பதும், அவனுடைய வீட்டில் வேலைகளைச் செய்வதற்கு வேலையாட்கள் யாரும் கிடையாது என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தும் மணியைக் கிண்டல் செய்வதற்காகவே அப்படிக் கேட்டான். மணிக்கும் இது புரிந்தது. அவன் மனம் வேதனைப்பட்டது. ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை. புன்சிரிப்புடன் " எனக்கு அந்தக் கவலையே கிடையாது ராமு! என்னுடைய உதவிக்கு, நான் நினைத்தவுடன் காரியத்தைச் செய்ய எட்டுப் பேர் தயாராக இருக்கிறார்கள்!! " என்றான் மணி. இதைக் கேட்ட ராமு அசந்து போய்விட்டான். பக்கத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. தலையைக் குனிந்துகொண்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.

வகுப்பினுள்ளே அமர்ந்திருந்த ஆசிரியர் காதில் இவை எல்லாம் விழுந்தது. ராமுவை மணி மடக்கிப்பேசியதை அவர் உள்ளூரப் பாராட்டினாலும், அவன் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பது அவருக்குப் புரியவில்லை. மணி பொய் சொல்லமாட்டான் என்பதும் அவருக்குத் தெரியும். உண்மையை அறிந்துகொள்ள மணியை உள்ளே கூப்பிட்டு விசாரித்தார்.

" வேலையைச் செய்ய எட்டுப் பேர் காத்திருப்பதாகச் சொன்னாயே? உன் சகோதர, சகோதரிகளைத் தானே குறிப்பிட்டாய்? " என்று கனிவாகக் கேட்டார்.

" இல்லை ஐயா! நான் அவர்களைக் குறிப்பிடவில்லை. " என்றான் மணி.

" அப்போது நீ இந்தச் சின்ன விஷயத்திற்காக பொய் சொன்னாயா? " என்று வருத்தத்துடன் கேட்டார்.

" ஐயா! நான் பொய் சொல்லவில்லை. என்னுடைய இரு கால்கள், இரு கைகள், வாய், மூக்கு, கண், காது ஆகியவைத் தான் அந்தப் பணியாளர்கள். அவை நான் சொன்னவுடன் அந்தந்த உறுப்பின் கடமையை நிறைவேற்றக் காத்திருக்கின்றன. என்னுடைய நல்ல பழக்கவழக்கங்கள், பயிற்சிகளின் மூலம் நான் அவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். அவைகளும் கடமையுடன் வேலை செய்கின்றன! " என்றான் மணி.

" உண்மைதான் மணி!! இந்த எட்டுப் பணியாளர்களும் நம்மை விட்டு போகமுடியாது. அவைகள் தமது பணிகளைச் செய்ய மறுப்பேதும் தெரிவிப்பதில்லை. நீ சொல்வது சரிதான்! " என்று அவனைப் பாராட்டினார் ஆசிரியர்.

ஆண்டவன் நமது வேலைகளை நாமே செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்குப் பயன்படக்கூடிய உறுதியான உடல் உறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றை நாம் நல்ல நிலையில் வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். நம்முடையக் காரியங்களைப் பிறர் தான் செய்து கொடுக்கவேண்டும் என்று எண்ணினால், ஆண்டவன் நமக்குக் கொடுத்துள்ள அந்த இயற்கை சக்தி வீணாகிவிடும்....

Copyright © 2005 Tamiloviam.com - Authors