தமிழோவியம்
திரையோவியம் : இசையமைப்பாளர்கள் அரவிந்த் மற்றும் ஜெய் சங்கருடன் ஒரு சந்திப்பு
- என்.டி. ராஜன்

'காதல் எப்.எம்' , 'ஊருக்கு நூறு பேரு' படங்களின் இசையமைப்பாளர்கள் அரவிந்த் மற்றும் ஜெய் சங்கருடன் ஒரு நேர்முக சந்திப்புShankar - Arvindhநீங்கள் இசைத் துறைக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

நான் பிட்ஸ் பிலானியில் மேனேஜ்மெண்ட் துறையில் மேற்படிப்பு படித்தேன். அதில் பட்டம் பெற்ற பிறகு, ரியல் இமேஜ் நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாத காலம் அங்கே பணிபுரிந்தேன்.

என் சக இசையமைப்பாளரான ஜெய் ஷங்கர், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். எங்கள் இருவருக்கும் பொதுவில் இருந்த இசை ஆர்வம் தான் எங்களைச் சேர்த்தது.

 

ஷங்கர் நீங்கள் உங்களுடைய இசை அறிவை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

1979 ஆம் ஆண்டு, ஒரு நாள் இரவு நேரத்தில் என்னுடைய வீட்டுப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அந்த இரவு தான் என் மாமா எனக்கு ஹார்மோனியம் வாசிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். அந்த நிகழ்ச்சி தான் என்னுடைய இசைப் பயணத்திற்காக முதல் படி.


அரவிந்த் நீங்கள் உங்கள் இசை ஆர்வத்தை எவ்விதம் வளர்த்துக்கொண்டீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி விழாக்கள் அனைத்திலும் கிடார் வாசிப்பேன். இசை மீதிருந்த ஈடுபாட்டால் குரு என்று யாரும் இல்லாமல் என்னுடைய முயற்சியால் நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் இருவரும் படித்ததும் வெவ்வேறு கல்லூரிகளில். பிறகு எப்படி உங்களுக்குள் நட்பு உதயமாயிற்று?

நாங்கள் இருவரும் அபிராமபுரத்தில் வசித்துவந்தோம். அப்போது தான் இந்த நட்பு உருவானது. இருவரது விறுப்பு வெறுப்புகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. முதலில் ஏதோ இசையமைக்கிறோம் என்று சொல்லும் நிலையிலிருந்து விடாம்யற்சியின் பலனாக இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

ஊருக்கு நூறு பேர் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

நாங்கள் முதலில் விளப்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தோம். இயக்குனர் லெலின் எங்களுடைய நண்பர். அந்த முறையில் அவரை அணுகி, இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்பை எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் எங்களுடைய இசையை வேறு எங்கேயோ கேட்டு இருக்கிறார். அது அவருக்குப் பிடித்துப்போகவே இந்தப் படத்திற்கான இசையமைக்கும் வாய்பை எங்களுக்கே கொடுத்துவிட்டார். இதற்காக அவருக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைபட்டிருக்கிறோம்.

நீங்கள் தற்போது என்ன படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

ஜயபிரகாஷ் இயக்கும் காதல் எப்.எம் படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டோம். படம் இனிமேல் தான் வெளிவரப்போகிறது. இந்தப் படத்தின் மூலம் எங்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதுவரையில் கர்நாடக இசையில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.


புதுமுகங்கள் யாரையாவது உங்கள் இசையில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா?

இந்தப் படத்தில் சுதீப் என்பவரை அறிமுகம் செய்துள்ளோம். அவருக்கு பாராட்டுகள் குவியும் என்று நிச்சயம் எதிர்பார்க்கிறோம். இவரைத் தவிர கார்த்திக், டிம்மி, சின்மயி, சுனிதா உள்ளிட்டப் பலரும் இந்தப் படத்திற்காகப் பாடியுள்ளார்கள். அடுத்தப் படத்திலிருந்து இன்னும் நிறைய புதுமுகங்களை அறிமுகம் செய்வோம்.

தற்போது பாடகர்களின் குரலைவிட இசை அதிக அளவில் கேட்கிறது என்பதே பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இதைப் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன?

சில பாடல்கள் அவ்வாறு உள்ளன. ஆனாலும் மேற்கத்திய இசையுடன் நம் இசையை ஒப்பிடும்போது, நம்முடையது எவ்வளவோ தேவலை என்ற எண்ணம் தோன்றுகிறது. குறைந்த பட்சம் பாடுவர்களுடைய குரலைக் கொஞ்சமாவது நம்மால் கேட்கமுடிகிறதே!


உங்களுடைய இசையின் தனித்தன்மை என்ன?

நாங்கள் இப்போது செய்துவருவது எங்களுக்குத் தெரிந்ததைத் தான். எங்கள் இசையைக் கேட்கும் மக்களிடமே  இதற்கான தீர்ப்பை விட்டுவிடுகிறோம். எங்களுக்கான சரியான இடத்தைத் தேர்வு செய்து அதில் காலைப் பதிக்கவேண்டும் என்பதே ஆசை. அதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors