தமிழோவியம்
கோடம்பாக்கம் : ராஸ்கல்
- என்.டி. ராஜன்

ராஸ்கல்

லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ராஸ்கல் படத்திற்காக 10 லட்சம் ரூபாய் செலவில் பிரும்மாண்டமான தேர் ஒன்று சென்னையில் தயார் செய்யப்பட்டு, பொள்ளாச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 500 க்கும் மேற்பட்ட தச்சு வேலைக்காரர்களின் கடின உழைப்பில் இந்த 51 அடி பிரும்மாண்டத் தேர் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், இத்தேர் படத்திற்கு மிகவும் அவசியம் என்று கருதியதால் சென்னையில் இத்தேரை உருவாக்கி, பொள்ளாச்சிக்கு எடுத்துச்சென்றுள்ளார்கள். படத்தின் நாயகன் ஜெயம் ரவி - நாயகி ரேணுகா ஆகியோர் திருவிழாவின் போது தேரை இழுப்பதைப் போல காட்சி அமைத்துள்ளார் இயக்குனர். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்ததற்கான நினைவுச்சின்னமாக அந்த ஊர் பொன் முத்து மாரியம்மன் கோவில் வாசலில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது இந்த அழகியத் தேர்.

வடிவேல், முத்துக்காளை, சீதா, சண்முகராஜா, சந்தான பாரதி மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன்சங்கர்ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் மற்றும் வி.சுவாமிநாதன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

கிச்சா வயது 16

விஜயா சினி எண்டர்பிரைஸ் நிறுவனம் தயாரிக்கும் "கிச்சா வயது 16" திரைப்படம் செப்.1 தேதியிலிருந்து துவங்குகிறது. இப்படத்தின் கதை ஒரு முக்கோணக் காதல் கதை என்று இப்படத்தின் இயக்குனரும், கதை வசனகர்தாவுமான ஏ.என்.ராஜகோபால் தெரிவித்தார். சிம்ரன், ஜெய் ஆகாஷ் மற்றும் பாய்ஸ் பட நாயகர்களில் ஒருவரான மணிகண்டன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சிம்ரன் நடிக்கவே மாட்டார் என்ற எண்ணம் பரவலாக திரையுலகில் இருந்தது. ஆனால் ஏ.என்.ராஜகோபால் இத்திரைப்படத்தின் கதை, மற்றும் சிம்ரனின் கதாபாத்திரத்தை விளக்கிச் சொன்ன போது உடனே நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாரம் சிம்ரன். அவர் லின்னும் சில மாதங்களில் தாயாகப் போவதால் படப்பிடிப்பை மூன்று மாதங்களில் முடித்துக்கொள்ளுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் படத்திற்காக தீனா இசையமைக்கிறார். டி.பி.கஜேந்திரன், பாண்டு, வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 

விவேக் நடிக்கும் சர்வர் சுப்பு

தொழிலாளர் கலைக்கூடம் நிறுவனம் விவேக் இருவேடங்களில் நடிக்கும் சர்வர் சுப்பு என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. பல்வேறு தொழிலாளர் அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் கலைக்கூடம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். வி.சி.குகநாதன் இப்படத்திற்கான கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அனுஷா இப்படத்தின் ஒரு நாயகி.

இரண்டாவது நாயகிக்கான தேடுதல் இன்னமும் நடந்துகொண்டிருந்க்கிறது. முழு நீள நகைச்சுவைப் படமாக இருந்தாலும், காதல், டூயட், சண்டை போன்ற வழக்கமான சினிமா மசாலாக்கள் இப்படத்தில் தாராளமாக உண்டு என்கிறார் இயக்குனர். அனு மோகன், ஜூனியர் பாலைய்யா, பயில்வான் ரங்கநாதன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தைத் தயாரிக்கும் 300 தொழிலாளர்களும், "தற்போது சினிமாத் தொழில் சற்று மந்தமாக உள்ளது. எங்களைப் போன்ற சக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவே இத்திரைப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம். " என்று கூறியுள்ளார்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors