தமிழோவியம்
தராசு : எப்போது இணையும் இந்தக் கைகள்?
- மீனா

சென்னையில் சணிக்கிழமை பிரதமர் கலந்து கொண்ட விழாவைப் புறக்கணித்ததுடன் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா செல்லவில்லை என்பதே இரண்டு நாட்களாக பத்திரிக்கைகளில் வெளியாகும் முக்கிய செய்தியாக உள்ளது. பிரதமர், முதல்வரைத் தவிர மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், அண்புமணி போன்றவர்களும் இந்நிகழ்சியில் கலந்து கொள்கிறார்கள் என்று முதலில் செய்திகள் வெளியாயின. பிறகு முதல்வரின் மனநிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டதோ - கடவுளுக்குத் தான் வெளிச்சம். நிகழ்சியிலும் கலந்து கொள்ளவில்லை, ஒரு சம்பிரதாய முறைக்காக பிரதமரை வரவேற்கவும் செல்லவில்லை. நம் முதல்வருக்கு டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆளும் மத்திய அரசுடன் இப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் முதல்வரைப் பற்றி என்ன சொல்வது?

ஆளும் மத்திய அரசில் தன்னுடைய பிரதான எதிரிக்கட்சியான தி.மு.க முக்கிய அங்கம் வகிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே பிரதமரின் சமீபத்திய தமிழக விஜயங்களில் தொடர்ந்து பாராமுகம் காட்டிவருகிறார் ஜெ. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்துவரும் உதவிகளைச் சரிவரப் பெற்றும்கொள்வதிலும், எம்.பி.க்கள் தொகுதி நிதிமூலமாக மக்கள் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் முதல்வர் மெத்தனம் காட்டிவருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலான அளவில் காணப்படுகின்றன. பிரதமர் பங்கேற்கும் பொது விழாக்களில் சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களும் பங்கேற்கவேண்டும் என்று சட்டம் இயற்றினால் தான் ஒரு வேளை விழாக்களுக்கு வருவாரோ?

கர்நாடகா கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் எல்லாம் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறவு சுமூகமான நிலையில் இல்லை. இந்த மாநிலங்கள் என்றில்லை. அனைத்து மாநிலங்களிலும் - மத்திய அரசில் கூட ஆளும்கட்சி எதிர்கட்சி உறவு கீரிக்கும் பாம்பிற்குமான உறவாகவே இருந்து வருகிறது. ஆனாலும் தங்கள் மாநிலத்திற்கான பொதுப்பிரச்சனை என்று வந்துவிட்டால் கர்நாடக, கேரளாவில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் தோளோடு தோள் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரிப் பிரச்சனையை கர்நாடக அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி கையாண்ட விதம் நாம் கண்கூடாக கண்ட ஒன்று.

ஆனால் பாவப்பட்ட நம் தமிழகத்தில் எதிர்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்கும் மன நிலையால் நாம் ஒன்று கூடி ஒரு தீர்மானமும் இயற்ற வக்கற்றவர்களாக ஆகிவிட்டோம். அந்தந்த அரசியல் கட்சி சார்பாக காவிரி நீர் கேட்டு ஒரு சின்னப் போராட்டம் நடத்துகிறார்களே தவிர அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி ஒருநாளாவது இதுகுறித்து ஏதாவது முடிவு செய்திருப்பார்களா? காவிரிப் பிரச்சனை என்றில்லாமல் மக்கள் சம்மந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இத்தகைய மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றன. எங்கே அடுத்த கட்சி ஏதாவது நல்லது செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுமோ என்ற பயத்திலேயே யாராவது ஏதாவது நன்மை செய்யவந்தால் அதை அடுத்தவர் தடுத்துவிடுகிறார். ஆக தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சியாலும் மக்களுக்கு நல்லது நடப்பதாகத் தெரியவில்லை.

முதல்வர் உள்ளிட்ட ஆளும் கட்சியினருக்கும், கருணாநிதி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களுக்கும் நம் வேண்டுகோள் ஒன்றுதான். உங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக பரஸ்பரம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அடித்துக்கொள்ளுங்கள். ஆனால் மக்கள் பிரச்சனை என்று வந்துவிட்டால் பக்கத்து மாநில அரசியல் தலைவர்களைப் போல உங்கள் மனமாச்சர்யங்களை களைந்து ஒன்று கூடி போராடி மக்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுத்தர முன்வாருங்கள். எங்களால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors