தமிழோவியம்
சிறுகதை : பின்தொடரும் பூனைகள்
- ஹரன்பிரசன்னா

மூன்றாம் பூனை


பூனைகளுக்கும் எனக்கும் ஒத்துவராதென்பதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். எழாவது வயதிலும் பதினைந்தாம் வயதிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் மறக்கவில்லை. எப்போதும் என்னைப் பூனைகளின் கரும்பச்சைக் கண்கள் துரத்திக்கொண்டேயிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

மூன்றாவது பூனையின் வரவு உஷாவின் மூலம் வந்தது. நான் அவளை எதிர்க்கவே முடியாத ஒரு அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்டேன்.

பார்க்கும்போதெல்லாம் சிரித்த உஷாவின் அழகில் மிக எளிதில் வீழ்ந்ததை இப்போது என்னால் மடத்தனம் என்று ஒப்புக்கொள்ள முடிகிறது. அன்று இயலவில்லை. அன்று எப்படி அவள் கண்களை ஆழமாகப் பார்க்காமல் போனேன்?

அறியாமல் மோதிக்கொண்டபோது நான் சொன்ன "ஸாரி"களைப் புறக்கணித்து நாணத்துடன் சிரித்த நாளின் பின்பகலில் மீண்டும் இருமுறை வேண்டுமென்றே மோதினேன். அதுவரை நான் அறிந்திருக்காத என்னை அறிந்தேன். பஞ்சைக்கொண்டு செய்த அவள் உடலில் என் கைகள் எல்லையில்லாத வேகத்தில் எல்லையில்லாத சுதந்திரத்தோடு நீந்தின. பாதி மூடியிருந்த கதவின் இடையில் தள்ளி மிகுந்த வெறியுடன் அவளை முத்தமிட்டேன். மெலிதான உரோமங்கள் பரவியிருக்கும் கைகளை அழுந்தப் பிடித்தபோது அந்த ஸ்பரிசம் எனக்கு ஏற்கனவே பரிட்சயமான மாதிரி இருந்தது. அவளின் உடலெங்கும் என் மீது சரிந்திருக்க இருவரும் தன்னை மறக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் எதிர்பாராத ஒரு கணத்தில் மிகக்குறைந்த இடைவெளியில் அவள் கண்களின் ஆழத்தை என் கண்கள் சந்தித்து மீண்டன. அன்று எல்லாம் அடங்கிய ஒரு நிசப்தம் என்னுள் பரவியதை இப்போதும் உணர்கிறேன். உஷா, "என்னாச்சு.. என்னாச்சு?" என்றாள். கரும்பச்சைக் கண்கள். மிக ஆழத்தில் மானசீகமாக நான் உணர்ந்தேன். அவை பூனையின் கண்கள். அதிக நெருக்கத்தில் மட்டுமே அறிய முடிந்தது. அவளுடன் எனக்கு உண்டான ஸ்பரிசத்தின் தன்மை கூட பூனையை என் கைகள் வருடும்போது உண்டானதை ஒத்ததுதான். அன்று அம்மா என்னிடம் "உஷாவை பிடிச்சிருக்கா?" என்றாள். அவளின் கண்கள் ஏதோ ஒரு கலக்கத்தைத் தருகின்றன என்றேன். "அவ கண்ணுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகு!" என்று சொன்னாள். அம்மாவிற்கு அவளின் கண்களை அதிக நெருக்கத்தில் பார்க்கும் அவசியம் நேராது.

நான் திடமாக நம்புகிறேன். என்னைப் பூனையின் கண்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மறுதினம் உஷா பூனை ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். என்னுள் கலவரம் எழுந்து அடங்கியது. முதல்நாள் எதிர்பாராமல் (அல்லது எதிர்பார்த்து) கொடுத்த முத்தத்தின் ஈரத்திலிருந்து நான் எழுந்திருக்காததால் மிகுந்த உத்வேகத்துடன் பூனையின் வரவை எதிர்க்கமுடியாமல் போனது.

பிறந்து பதினைந்து நாள்களே ஆன குட்டி அது. முழுக்க முழுக்க வெண்ணிறத்தில் இருந்த அதைக் காதைப்பிடித்துத் தூக்கி "ரொம்ப சொரணையுள்ளது இந்தக் குட்டிதான்" என்றாள் உஷா. அந்தப் பூனைக்குட்டி வீல் வீல் என்று அலறிக்கொண்டே இருந்தது. முதலிலிருந்தே அந்தப் பூனையிடம் வெகு கவனமாக இருக்கத் தீர்மானித்திருந்தேன். வீட்டில் அம்மாவும் அக்காவும் உஷாவும் அதற்கு ராஜ உபசாரம் அளித்தார்கள். அக்காவின் பையன் பூனையின் ஒவ்வொரு அசைவையும் இரசித்தான். அவனது இருபத்தி ஏழாவது வயதில் பூனைகளைப் பற்றி முழுதும் அறிவான். கழிவிரக்கத்துடன் கூடிய கவிகள் வரைவான்.

பொதுவாகவே பூனைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சில தினங்களில் தாயை மறந்துவிட்டு சகஜமாகத் தொடங்கிவிடும். இந்தப் பூனை விதிவிலக்காய் இருந்தது. பாலைக் குடிக்கவே மறுத்துவிட்டது. அதன் உடல் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருவதைப் பார்த்துப் பயந்துபோனாள் என் பாட்டி. "பூனை செத்தா பாவம். ரொம்ப குட்டியா இருக்கும்போதே தூக்கிட்டு வந்திருக்கக்கூடாது. கொண்டு போய் கொடுத்திரலாம். ஒரு மாசம் கழிச்சு திருப்பித் தூக்கிட்டு வரலாம்" என்றாள். உஷா நிறைய அழுதாள். அவளைவிட என் அக்கா பையன் கதறி கதறி அழுதான். "நான் செத்தா கூட இப்படி அழமாட்டான் போல இருக்கே" என்ற பாட்டியின் கேலிப்பேச்சு அவனை மேலும் சீண்ட கூடுதலாக அழத் தொடங்கினான்.  பூனையைக் கொண்டு போய் விடுவதை மாபாதகச் செயலாக நினைத்த உஷா அவளால் அதைச் செய்யமுடியாது என்று மறுக்கவும் அந்த வேலை எனக்கு வந்தது. நானும் மிகுந்த வருத்தப்படுவது போல காட்டிக்கொண்டு உள்ளூர மிகுந்த சந்தோஷத்துடன் பூனையைக் கொண்டுபோய் விடச் சம்மதித்தேன்.

எட்டு வீடுகள் அடங்கிய வளைவு அது. குறுகலாகச் செல்லும் சிறிய பாதை இரண்டு பக்கங்களிலும் நான்கு நான்கு வீடுகளுடன் விரிந்தது.கையில் நான் வைத்திருந்த பூனைக்குட்டி கத்திக்கொண்டே இருந்தது. பூனையின் வீடு எந்த வீடாக இருக்கும் என்று  யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பூனையின் தொண்டை கிழியும் சத்தத்தைக் கேட்டேன். அது தாய்ப்பூனையின் கோபக்குரலாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததும் எனக்குள் பீதி ஏற்பட்டது. கையிலிருந்த குட்டியைக் கீழே போட்டுவிட்டேன். லேசாகத் திறந்திருந்த சன்னலின் வழியே தலையை நுழைத்து, பின் முழு உடலையும் நுழைத்து வெளி வந்தது தாய்ப்பூனை. அதன் கரும்பச்சை நிறக்கண்களைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. எந்தவொரு யோசனையுமில்லாமல் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தது தவறு எனத் தெரிந்துகொண்டு, திரும்பி வேகமாக நடந்தேன். பூனையின் கண்கள் முதுகில் உறுத்த, திரும்பிப் பார்த்தேன். தாய்ப்பூனை நால் கால் பாய்ச்சலில் ஓடி வந்து என் காலைப் பிராண்டியது. காலை உதறிவிட்டு ஓடினேன். அடிக்குரலில் கத்திக்கொண்டு பின் தொடர்ந்து வந்து காலின் கட்டை விரலைக் கவ்வியது. மீண்டுமொருமுறை பலம் கொண்ட மட்டும் காலை உதறினேன். தூரத்தில் போய் விழுந்தது பூனை. விழுந்த வேகத்தில் எழுந்து என்னை நோக்கி வருவதைப் பார்த்து, இனியும் தாமதிக்ககூடாது என்று நினைத்து குறுகிய சந்தின் வழியே வெளியே ஓடினேன். அதற்குள் வளைவின் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பூனையை விரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தப் பூனையினமும் எனக்கெதிரான வன்மத்துடன் இருக்கின்றன. அதன் கரும்பச்சை நிறக்கண்கள் எப்போதும் ஒருவிதக் குரோதத்துடன் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.


புனைகள் இல்லாத வீட்டில் காற்றில் அலைகிறது
அது உதிர்த்துவிட்டுப் போன அதன் ரோமமும்
அது கடித்த தடத்தில் மொய்க்க விரும்பும் ஈயும்

(வெங்கட், பூனை கடித்த இரவு)

 

<< இரண்டாம் பூனை

நான்காவது பூனை >>

Copyright © 2005 Tamiloviam.com - Authors