தமிழோவியம்
தராசு : என்ன செய்கிறது இந்த அரசு?
- மீனா

 

சென்னை - தமிழகத்தின் தலைநகரம். சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குவோம் என்று கூறிக் கொண்டு அதற்கான நிதி உதவியை பாபாவிடமிருந்து பெற ஸ்டாலினும் துரைமுருகனும் புட்டபர்த்தி சென்று வந்துள்ளார்கள். ஆனால் சிங்காரச் சென்னை என்ற பெயருக்கு நேரெதிராக கடந்த சில நாட்களாக நகரமே நாறிக் கொண்டிருக்கிறது.

குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் எடுத்த புது ஒப்பந்தக்காரர்களிடம் போதுமான ஆட்களோ - வாகனங்களோ இல்லாததுதான் இந்த நெருக்கடிக்கு காரணம் என்று விளக்கம் தருகிறது அரசும் மாநகராட்சியும். சுமார் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னைப் பெருநகரத்தில் குப்பைகள் தேங்கினால் என்னவாகும் என்பதை முன்கூட்டியே யோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா அரசும் மாநகராட்சியும். மேலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நிறுவனத்திற்கு எவ்வாறு குப்பை அள்ளும் ஒப்பந்தம் கிடைத்தது? யார் தலையீட்டால் இது நடந்தது?

ஏற்கனவே தொலைபேசித்துறை, குடிநீர் வழங்கும் துறை, மின்சாரத் துறை என்று ஒவ்வொரு துறையாக ரோட்டில் ஏகப்பட்ட பள்ளங்களை வெட்டி வைத்துவிட அதில் குழந்தைகளும் பெரியவர்களும் விழுந்து பலியாகும் அவலம் நகர் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் மலை மலையாக தேங்கும் குப்பைகளும் அவற்றின் மூலமாகப் பரவும் சுகாதாரக் கேடுகளும்.. நரகத்தைக் காணவேண்டும் என்றால் வாருங்கள் சென்னைக்கு என்ற ரீதியில் இருக்கிறது தலைநகரத்தின் அழகுக் கோலம்.

நல்ல வேளை தே.மு.தி.க தலைவர் நானே குப்பை அள்ளுவேன் என்று அறிக்கை விட்டார். போலீசைக் கொண்டு நகரைச் சுத்தம் செய்தது அரசு. நகரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தங்கள் கடமையை ஒழிங்காகச் செய்யாமல் கண்ணியமான காவல் துறையினரை குப்பை அள்ளும் நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு சென்னைத் தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ள காவல் துறை கவனத்திற்கு வந்த அளவிற்கு கழகக் கண்மணிகள் கவனத்திற்கு வராமல் போனது ஆச்சரியம்..

மொத்தத்தில் மாநகராட்சி சென்னையை அழகுபடுத்துகிறதோ இல்லையோ, இருக்கிற கொஞ்ச நஞ்ச அழகையும் மக்களின் ஆரோக்கியத்தையும் தப்பான - திறமையற்ற ஆட்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கி குலைத்துவிடாமல் இருந்தால் நல்லது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors