தமிழோவியம்
தராசு : எங்கே அழைத்துச்செல்லும் இந்த இலவசங்கள்?
- மீனா

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மக்களுக்கு 2 ஏக்கர் நிலம், கலர் டீவி, கேஸ் அடுப்பு, அவற்றுக்கான எரிவாயு இணைப்பு, மகளிர் திருமணத்திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை என்று ஏகப்பட்ட இலவசத் திட்டங்களை அள்ளி விட்டுதான் ஜெயித்தார். தற்போது தான் வழங்கிய வாக்குறுதிகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். நல்ல விஷயம்தான். ஆனாலும் இதில் எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் முக்கிய முணுமுணுப்பு என்னவென்றால் இந்தத் திட்டங்கள் நிஜமாகவே தொடர்ந்து செயல்படுமா? அல்லது உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து காட்டப்படும் குறளிவித்தையா? மேலும் இந்தத் திட்டத்தினால் பயன்பெறப்போவது பொதுமக்களா? அல்லது கழக உடன்பிறப்புகளா? ஒதுக்கித்தள்ள முடியாத கேள்விகள்.....

இத்தகைய இலவசத்திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகிறது. திட்டங்களின் பயன்பாடுகள் நிஜமாஜவே பொதுமக்களுக்குப் போய்ச் சேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் இவை யாவும் வெறும் கண்துடைப்பாக இருந்துவிட்டால் வீணாய் வீணர்களின் வாயில் போகப்போகும் மக்களின் வரிப்பணத்திற்கு யார் பொறுப்பு? மேலும் இத்தனை இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் முனைப்பாய் இருப்பதால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்திடம் பணம் இல்லாத நிலை ஏற்படும் நிலைக்கும் யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்?

கிராமங்களில் சிக்குன் குனியா நோயால் மக்கள் அதிக அளவில் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி ஆரம்ப சுகாதார மையங்களின் அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்ற வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் இதற்கு 250 கோடி செலவாகும் என்கிறார். ஆனால் மறுநாளே இதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்திற்கு 250 கோடி ஒதுக்கப்படும் என்கிறார் முதல்வர். ஆக மக்களின் வரிப்பணம் அவர்களுக்கு தேவையான நேரத்தின் பயன்படாமல் ஏதோ ஒரு வகையில் செலவாகப்போவதை சொல்லாமல் சொல்லிவிட்டார் முதல்வர்.

இலவசத் திட்டங்கள் வேண்டியதுதான்.. அதற்காக தொட்டதெல்லாம் இலவசம் என்பது மக்களுக்கு அரசாங்கம் செய்யும் நல்லது என்று யாராவது வாதிட்டால் அது தவறு. இத்திட்டங்களின் மூலமாக பயன்பெறப்போகும் பொதுஜனம் 2 பேர் என்றால், கட்சிக்காரர்கள் 10 பேர் என்பது அப்பட்டமான உண்மை. ரோடு போடுவதிலிருந்து, தூர் வாருவது வரை மக்களின் வரிப்பணத்தை சுரண்டிச் சுரண்டியே பொழுதைப் போக்கும் இத்தகைய அரசியல்வாதிகளிடம் லட்டு மாதிரி இத்தகைய திட்டங்கள் கிடைத்தால் விளைவு என்ன ஆகும் என்பதைப் பற்றி அறிய ரொம்பவும் சிந்திக்க வேண்டாம்.

மக்களின் வரிப்பணத்தை சரியாகத் திட்டமிட்டுதான் நாங்கள் இத்தகைய இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று முதல்வரும் அவருக்கு ஆமாம் சாமி போட மத்திய அமைச்சர்களும் முன்வரலாம்.. ஆனால் இந்த சரியானத் திட்டமிடுதலை நீங்கள் இலவசத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் நாட்டின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தினால் எத்தனை உபயோகமாக இருக்கும்? இலவசங்களை நம்பும் அளவிற்கு நீங்கள் உங்கள் இன்ன பிற சாதனைகளை நம்பாதது ஏன்? அடுத்த தேர்தலிலாவது அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றிபெற இலவசத் திட்டங்களை மட்டுமே நம்பாமல் உருப்படியாக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து அதன் மூலமாக ஓட்டு கேட்க முன்வரவேண்டும். சிந்திப்பார்களா நம் அரசியல்வாதிகள்??

 


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors