தமிழோவியம்
திரைவிமர்சனம் : தாம் தூம்
- மீனா

மறைந்த இயக்குனர் ஜீவாவின் கனவுக் கவிதை தாம்தூம். அவரே முழுப்படத்தையும் இயக்கியிருந்தால் / கதை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இக்கவிதை இன்னும் ரசிக்கக்கூடியதாய் அமைந்திருக்கும். 

Ravi, Kanganaஇளம் மருத்துவரான ஜெயம்ரவி பொள்ளாச்சிக்கு அக்கா அனுஹாசனை பார்க்க வருகிறார். வந்த இடத்தில் கங்கனாவுடன் சின்ன மோதலுக்குப் பிறகு காதல் மலர - பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்தம் நல்லபடியாக முடிகிறது. காதலியைக் கைபிடிக்க சில நாட்களே பாக்கியிருக்கும் நிலையில் ஒரு மெடிக்கல் கான்பரன்ஸூக்காக ரஷ்யா செல்கிறார் ஜெயம்ரவி. அங்கே அவர் சந்திக்கும் அழகியும், அவரால் வந்த பிரச்சனையும் ரவியை ஜெயில் வரைக்கும் கொண்டு போக, காப்பாற்ற வருகிறார் வக்கீல் லட்சுமிராய். தான் நிரபராதி என நிருபிக்க சட்டப்பூர்வமாக சந்தர்ப்பம் கிடைக்காததால் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார். ஒரு பக்கம் ரஷ்ய தாதாக்களின் துரத்தல், இன்னொரு பக்கம் ரஷ்ய போலீஸ் தேடல் என மத்தளத்திற்கு இருபக்க அடியாக ரவியைத் துன்பம் துரத்துகிறது. தான் நிரபராதி என்பதை ரவி எப்படி நிரூபிக்கிறார்? கங்கணாவுடன் அவரது கல்யாணம் நிச்சயித்தபடி நடந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

முந்தைய படங்களைக் காட்டிலும் ரவி இதில் நடிப்பு, ஆக்ஷன், காதல் என அனைத்து விதங்களிலும் அசத்துகிறார். போலீஸ், போதை கும்பல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவர் தவிப்பதும், ஆவேசத்தில் அவர்களை ஏறி மிதிப்பதும் அருமை. ஒல்லிக்குச்சி கதாநாயகர்கள் பறந்து பறந்து அடிப்பதையே வாயைப்பிளந்து கொண்டும் பார்க்கும் நமக்கு கட்டுமஸ்தான ரவியின் சண்டைக்காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நாயகி கங்கணாவிற்கு முதல் படம் - ஆனாலும் முதல் படத்திலேயே தனக்கு நடிக்க வரும் என்பதை நிரூபிக்கிறார். வாண்டுகளுடன் சிறுபிள்ளையாட்டம் போடுவது, ஜெயம்ரவியை சீட்டாட்டத்தில் கவிழ்ப்பதுமாக ரசிக்கவைக்கிறார். ஆனாலும் கிராமத்துப் பெண்ணாக அவரை முழுமையாக ஏற்க முடியாதபடி செய்கிறது அவரது அல்ட்ரா மார்டன் முகம்.

ரவிக்கு மாஸ்கோவில் உதவி செய்யும் வக்கீலாக லஷ்மிராய் அசத்துகிறார். கண்களில் காதல், அதிர்ச்சி, பயம் எல்லாவற்றையும் ஒரு சேர காட்டி அதிர வைக்கிறார்.

இந்திய தூதரக அதிகாரியாக ஜெயராம். அமைதியான வில்லன். ஆனாலும் இவர்தான் வில்லனாக இருப்பார் என முன்கூட்டியே ஓரளவிற்கு தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் கம்மியாகிறது.

ஒளிப்பதிவும் இசையும் படத்தின் பெரும் பலம் என்றால் மிகையில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஜீவாவின் இழப்பை நினைவூட்டுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

ஆனாலும் கதையில் பல ஓட்டைகள். முக்கியமாக தூதரக அதிகாரியாக வரும் ஜெயராம். நேர்மையான நபர்கள்தான் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் இதில் லோக்கல் போதை கும்பலுடன் ஜெயராமிற்கு தொடர்பிருப்பதாக காட்டப்படுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது. அதிலும் அவர் ரவியைக் கொல்ல முயற்சிப்பது அபத்தமாக உள்ளது. போதைப்பொருள் அடங்கிய கோட், சம்பந்தப்பட்டவர்களின் கைகளுக்கே வந்துவிட்ட பின்பும் ரவியை வில்லன்கள் தொடர்வது ஏன் என்று சரியாக விளங்கவில்லை.

யதார்தத்தை மீறிய பல விஷயங்கள் இருந்தாலும் இப்படத்தை ரசிக்க வைப்பது ஹாரிஸின் இசையும், ஜீவாவின் ஒளிப்பதிவும் ஜெயம்ரவியின் நடிப்பும் தான்..

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors