தமிழோவியம்
கட்டுரை : ரேஷன் அரிசி கடத்தல்
- திருமலை கோளுந்து

நாள்தோறும் செய்தித் தாள்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் விபத்து, கொலை, கொள்ளை போன்ற செய்திகளின் வரிசையில் ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் அரிசி பிடிபட்டது என்ற செய்தியும் பிரதான இடத்தைப் பிடித்து வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது  மக்களுக்கு  வழங்கப்படுகின்ற இந்த அரிசியை, முறைகேடாக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் அதிகரித்து வருவதாகவும், எந்த நோக்கத்திற்காக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கமே வீழ்ச்சிப் பாதையை நோக்கி போய்க் கொண்டு இருப்பதாகவும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

Ration Rice News2006ம் ஆண்டு  மே மாதம் ஆட்சியை பிடித்த கருணாநிதி, பதவியேற்ற கையோடு இரண்டு ரூபாய்க்கு அரிசி உத்தரவில்  கையெழுத்துப் போட்டு பரவசத்தை ஏற்படுத்தினார். 2006ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இத்திட்டம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் ஜூலை மாதக் கணக்குபடி மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அதில் ஒரு கோடியே 78 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இரண்டு ரூபாய்கான அரிசியை வாங்க தகுதியானவர்கள். இவர்களுக்கு அரிசி உட்பட இதர அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழகம் முழுவதும் 27,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 26,000 ரேஷன் கடைகள் தமிழக கூட்டுறவு துறை கட்டுப்பாட்டிலும், 1,100 கடைகள் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பிலும், 300க்கும் மேற்பட்ட கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பிலும் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் 300 பங்க்களில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்கிறார்கள். இவர்களில் பெரும்பானவர்கள் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் அரசாங்கத்திடம் ஊதியம் பெறுபவர்கள். இவை தான் ரேஷன் கடைகள் பற்றிய விவரங்கள் என்று சொல்லும் வட்டல் வழங்கல் துறையின் முன்னாள் இணை இயக்குனரான சிவசங்கர் மேலும் தொடர்ந்து சொல்கிறார்.

குண்டர் சட்டம் பாயும் என அரசு எச்சரித்தும் தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி ஏன்? எதற்காக, எங்கு கடத்தப்படுகிறது என்றால் அரசியல்வாதிகளுக்காக, அதிகாரிகளுக்காக, ரேஷன் கடை ஊழியர்களுக்காக என்று தான் பதில் சொல்ல முடியும். ஒரு விஷயத்தை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2001 முதல் 2003ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழகத்தில் இருந்து எந்த விதமான அரிசி கடத்தலும் இல்லை. அதற்கு காரணம் யார் யார் அரிசி வாங்க தகுதி பெற்றவர்கள் என்று இனம் கண்டு அவர்களுக்கு மட்டுமே அரிசி என்று சொல்லி அதற்கான டோக்கனை ஒரு வருடத்திற்கு கொடுத்து விட்டனர். இதனால் அளவுக்கு அதிகமான அரிசி கடைகளுக்கு அனுப்பப்படவில்லை. அதனால் அரசாங்கத்திற்கு செலவுகள் குறைந்தது. இந்த முறை தொடர்ந்திருக்க வேண்டும். அதன் பின் நடந்த நாடாளுமன்றத் தோதலில் அ.தி.மு.க. அடைந்த தேர்தல் தோல்வியால் ஜெயலலிதா பின் வாங்கி விட்டார். அதற்கு பின் ஆட்சியை பிடித்த கருணாநிதி மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஆறு ரூபாய் ஜம்பது காசுக்கு அரிசி வாங்கி அதனை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இரண்டு ரூபாய்க்கு மாதம் 20 கிலோ அரிசி வாங்கிச் செல்லும் பொது மக்கள் உண்மையில் மகிழ்ச்சியாக வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இவர்களை விட அரிசி கடத்தல்காரர்கள் அதிகமான மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி வாங்க தகுதி பெற்றவர்கள் என்று அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற ஒரு கோடியே 78 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் அரிசி வாங்குவார்களா என்பது கேளவிக்குறி தான். ஆனால் அவர்களுக்கு அரிசி வழங்கியதாக பொய் கணக்கு காட்டி அரிசியை கடத்துகிறார்கள். இது தான் அரிசி கடத்தலின் ஆணி வேர். இது தவிர ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் பொது மக்களே அந்த அரிசியை வெளி மார்க்கட்டில் விற்பனை செய்யும் வேலையும் இங்கு நடக்கிறது இந்த அரிசி தான் பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கு கடத்தப் படுகிறது. இரண்டு ரூபாய்க்கு விற்றதாக அரசிடம் கணக்கு காட்டிவிட்டு, கள்ள மார்க்கெட்டில் 5 ருபாய் வரை ரேஷன் கடை ஊழியர்கள் விற்கிறார்கள். இப்படி வாங்கிய அரிசியை அன்டை மாநிலங்களுக்கு கடத்துகின்றனர். அங்கு கிலோ அரிசி 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். இவர்களை கைது செய்ய வேண்டிய உணவு கடத்தல் பிரிவு, வருவாய் துறையினர், பறக்கும் படையினர் அரிசிக் கடத்தலுக்கு பச்சைக் கொடி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்.


அரிசி கள்ளச்சந்தையில் அன்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது என்று சொல்லும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் முன்பை விட புட்செல் பிரிவு தீவிரமாக செயல்படுகிறது என்கிறார்கள். பொதுவாக தமிழக ரேஷன் அரிசிக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதனை கடத்துகிறார்கள். இங்கு குறைந்த விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனை தடுக்கவும், அப்படி கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. இதுவரை 20 பேருக்கு மேல் குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறோம். இனியும்  கைது தொடரும். முன்பை விட புட்செல் பிரிவு, வட்டல் வழங்கல் பிரிவு, வருவாய் துறையினர், பறக்கும் படையினர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். அப்படி கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்து வருகிறோம். ரேஷன் கடை என்றவுடன் வெறும் அரிசி மட்டும் வழங்கப்படுவதில்லை. அங்கு அரிசி, சக்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, ரவை போன்றவைகள் நடுத்தர, ஏழை மக்களுக்காக அத்தியாவசியமாக விநியோகம் செய்யப்படுகிறது. இத்துறையில் நடக்கும் சிறு குறைகளைக் கூட பெரிதாக மீடியாக்கள் கிளப்புவதால் தான் அரிசி கடத்தல் பெரிதாக பார்க்கப்படுகிறது. ஏப்படி ரேஷன் அரிசி கடத்தப்டுகிறது என்றால் ரேஷன் அரிசி வாங்க விரும்பாதவர்களின் கார்டுகளுக்கும் சேர்த்து ஒதுக்கீடு செய்யப்படும் அரிசி தான் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவுகளில் சிலர் தவறு செய்வதால் இத்துறையில் உள்ள அனைவரையும் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.    

பொதுவாக இந்திய அளவில் தமிழகத்தில் தான் ரேஷன் அரிசி விலை மிகக் குறைவான விலையில் விற்கப்படுகிறது. அதனால் தான் அரிசி கடத்தல் இங்கு ஒரு தொழிலாகவே மாறி விட்டது. பொதுமக்களின் நன்மைக்காக இரண்டு ரூபாய்க்கி அரிசி வழங்க அரசு 1,950 கோடி ரூபாய் உணவு மானியமாக நிதி ஒதுக்கியுள்ளது. இரண்டு ரூபாய்க்கு அரிசி போடுவதால் அரசுக்கு மாதம் தோறும் 53.4 கோடி கூடுதல் செலவு ஆவதாக உணவுத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார். இப்படி செலவு செய்யப்படும் அரசாங்கத்தின் பணம் முழுமையாக மக்களுக்கு போய் சேருவதில்லை என்பது தான் பெரிய குறைபாடு. மக்கள் உண்பதற்கு போடப்படுகின்ற அரிசியை தேனி மாவட்டத்தில் மாடுகளுக்கும,; நாமக்கல் பகுதிகளில் கோழித் தீவனமாக போடப்படுவதாக வருகின்ற செய்திகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை அரசும், அதிகாரிகளும் உணர வில்லை. தமிழக அரசின் மொத்த வெளிக்கடன் 57,000 கோடி. இ;ந்தப் பணத்திற்கு நாள் ஒன்றுக்கு வட்டியாக 16. 53 கோடி செலுத்தி வருவாதாக அரசே சொல்கிறது. இப்படி இருக்கும் பொழுது அரசின் பணத்தை கொள்ளையர்கள், அரசியல்வாதிகள் வேறு சாப்பிடுகிறார்கள். ஆண்டு தோறும் வெளியிடப்படும் தணிக்கை அறிக்கையில் அரசுகளின் பணம் எப்படி எல்லாம் நாசமாக போகிறது என்பதை சுட்டிக்காட்டியும் இந்த ஆட்சியாளர்கள் திருந்துவதாக இல்லை. தமிழகத்தில் உள்ள மொத்த ரேஷன் அட்டைகளில் 20 சதவீதம் போலி என்று உணவு அமைச்சரே சட்டமன்றத்தில் கூறி இருக்கிறார். ஆனால் அதனை தடுக்க, கண்டுபிடிக்க உறுதியான திட்டத்தை முன்வைக்க வில்லை. இப்படி இந்த 20 சதவீதம் அட்டை மூலம் அரிசிகள் கள்ளச் சந்தையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தல் நடக்கிறது. மற்றொரு பக்கம் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு அதனை அவர்கள் பாலிஸ் செய்து மார்க்கெட்டில் அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் தடுக்க முடியவில்லை.இதற்கு ஒரே தீர்வு ரேஷன் உணவு வழங்கல் துறையை தனி அமைப்பாக மாற்ற வேண்டும். யார் யார் எல்லாம் ரேஷன் அரிசி வாங்க உள்ளவர்கள், தகுதி அற்றவர்கள் என்பதை தனியார் அமைப்புக்களின் மூலம் கணக்கு எடுத்து அதனை முறைப்படுத்த வேண்டும். இதனை செய்யா விட்டால் யார் ஆட்சி செய்தாலும் அரிசி கடத்தல் நடக்கத் தான் செய்யும் என்கிறார்கள் பொது நல அமைப்பினர்.   
 
ஒரு ரேஷன் கடையை 33 பிரிவு அதிகாரிகளால் ஆய்வு செய்யும் அதிகாரத்தை அரசாங்கம் அளித்திருக்கிறது. அதாவது கூட்டுறவுத் துறை, வட்டல் வழங்கல் துறை அதிகாரிகள், அலுவலர்கள், பறக்கும் படை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளுர் கவுன்சிலர், ஆளும் கட்சி எதிர் கட்சியின் என்று பலர் ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது. இப்படி இவர்கள் வரும் பொழுது பெரும் பாலனவர்கள் லஞ்சம் எதிர்பார்க்கிறார்கள். அப்படி கொடுக்காவிட்டால் ஊழியர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் பழி வாங்குகிறார்கள். இப்படி இவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றால் அளவை குறைத்து போட வேண்டும். அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தே ஆக வேண்டிய நிலை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் தான் ரேஷன் கடைகளில் அளவு குறைந்து கொடுக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் 300 பங்க்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அப்படி வரும் மண்ணெண்ணையும் அளவு சரியாக வருவதில்லை. அதனை சரிகட்ட பொதுமக்களுக்கு வழங்கும் பொழுது அளவை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இத்தனைக்கும் ரேஷன் கடைகளில் பணி புரியும் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் தொகுப்பு ஊதியம் வாங்குபவர்கள். இவர்களுக்கு அரசாங்க ஊழியர்களின் எந்த விதமான சலுகைகளும் கிடையாது. இவர்களுக்கு அரசாங்கம் தரும் மாத ஊதியம் ஆயிரத்து முன்னூற்று ஜம்பது மட்டுமே. தமிழகத்தில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீனாட்சிபுரம் செக் போஸ்ட், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீவாடி செக் போஸ்ட், நெல்லை மாவட்டம் செங்கோட்டை பார்டர் செக் போஸ்ட் வழியாகத் தான் கடத்தப்படுகிறது. இவை தவிர தென்காசி வரை ரெயில்களில் கடத்தப்பட்டு பின் லாரிகளில் கடத்தப்டுகிறது.

அதே போல இந்த இரண்டு ரூபாய் அரிசி திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது உள்ளாட்சி அமைப்புக்கள் தான். அதாவது மத்திய அரசின் வேலைக்கு உணவு திட்டத்தில் சம்பூர்ணா கிராம வேலை வாய்ப்பு திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் இணைப்புச் சாலைகள், அங்கன்வாடி கட்டடங்கள், வரத்து கால்வாய், வெள்ளத்தடுப்பு போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் 80 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் 5 கிலோ அரிசிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இப்படி பிடித்தம் போக 51.75 பைசா ஊதியமாக வழங்கப்படுகிறது. இங்கு ஒரு கிலோ ரேஷன் அரிசி ரூபாய் 5.65 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசியை வாங்க தொழிலாளர்கள் மறுக்கின்றனர். மாறாக இரண்டு ரூபாய் அரிசியை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் இதே அரிசி ஜந்து ரூபாய் அறுபத்து ஜந்து பைசாவுக்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியை தொழிலாளர்கள் வாங்க மறுப்பதால் இந்த அரிசி தேக்கம் அடைகிறது. இதனால் மத்திய அரசிற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி தேங்கும் அரிசியை மத்திய அரசு திருப்பி வாங்க மறுப்பதால் தேங்கும் அரிசியை வைத்து என்ன செய்வது என்று உள்ளாட்சி அமைப்புக்கள் தவித்து வருகின்றன.

மொத்தத்தில் இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி ஏழை குடும்பங்களுக்கு வரப்பிரசாதம் தான். ஆனால் நெல்லுக்கு செல்ல வேண்டிய நீர் புல்லுக்கு பெரும் அளவு செல்கிறது என்பதைப் போல இந்த அரிசி ஏழைகளையும் சேர்த்து, அரிசி கடத்தல்காரர்களுக்குத் தான் பெருத்த லாபமாக இருக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors