தமிழோவியம்
கட்டுரை : 'விஜய'காந்த் தலைமை
- திருமலை கோளுந்து

Vijayakanth Partylநான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்  என்று சொல்லி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் தற்பொழுது தமிழகத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனித்துப் போட்டியிட்ட தங்கள் கட்சி தி.மு.க. அ.தி.மு.க.வை விட மக்கள் மனதில் நம்பர் ஒன்றாக இருக்கும் கட்சி என்று அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறி இருக்கிறார். உண்மையில் தே.மு.தி.க. தமிழகத்தில் பெரிய கட்சியாக வளர வாய்ப்பு இருக்கிறதா என்று கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், நடுநிலைவாதிகளிடம் கேட்டோம்.

பாராட்ட வேண்டிய முன்னேற்றம்  என்று தமிழக முதல்வர் கருணாநிதி என்று தனது வாயால் சொன்னாரோ அது ஒன்றே தே.மு.தி..க.விற்கு கிடைத்த பெரிய வெற்றி. அவர் எந்த ஒரு கட்சியையும் மட்டம் தட்டித் தான் பேசி வந்திருக்கிறார். 600 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு கட்சியை முதல்வர் கருணாநிதி பாராட்டியிருப்பது இதுவே முதல் முறை. தி.மு.க., அ.தி.மு.க., விற்கு மாற்று சக்தியாக தே.மு.தி.க., வந்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. தே.மு.தி.க. ஏன் வெற்றி பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது? அதன் வளர்ச்சிக்கு என்ன காரணம்? ஒரே காரணம் தான் தே.மு.தி.க. தனித்து நிற்கிறது. கூட்டணி என்ற பெயரில் தி.மு.க. அணியிலும், அ.தி.மு.க. அணியிலும் பிற கட்சிகள் சேர்ந்து கொண்டு அவர்கள் செய்யும் லஞ்சம், சுயநலம், முறைகேடு, மிரட்டல், உருட்டல்களை ஆதரித்து போகின்றனர். அதனை தட்டிக் கேட்க மறுக்கிறார்கள். இதனை எல்லாம் தட்டிக் கேட்க யாராவது ஒருவர் வரமாட்டாரா என நடுநிலையாளர்கள் ஏங்கினார்கள். விஜயகாந்த் வந்தார், தட்டிக் கேட்டார், வளர்ச்சி அடைந்து வருகிறார். எங்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுது விஜயகாந்த் சொன்னார், இளைஞர்கள் எனது கட்சிக்கு அதிகமாக வர வேண்டும் என்றார். அதன் படித் தான் நடக்கிறது. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிப்பதோடு, அர்ப்பாட்டமாக வரவேற்கிறார்கள். தே.மு.தி.க. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும்  தனித்துப் போட்டியிட்டாலும் கட்சி வளர்ந்து வருகிறது. இனியும் வளர்வோம். 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆடசியைப் பிடிப்போம். அதற்காக எங்கள் கட்சியை மேலும் பலப்படுத்துவோம். கட்சியைப் பலப்படுத்த தி.மு.க. அ.தி.மு.க.வை நாடி போக மாட்டோம், மாறாக மக்களிடம் செல்வோம். நடுநிலையான செயல்பாடு தான் தே.மு.தி.க.வை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்கப் போகிறது என்கிறார் தே.மு.தி.க.வின் ஒன்றியச் செயலாளர் பட்டுராஜன்.

Vijayakanthநடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வின் வளர்ச்சி பிரமிப்பாகவே இருக்கிறது. தமிழ் நாட்டில் சினிமா கவர்ச்சி இருந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தை வளரும் தலைமுறைக்கு விஜயகாந்த் உணர்த்தி வருகிறார். இதற்கு முன்பு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அந்த எண்ணத்தை உரம் போட்டு வளர்த்தும் விட்டனர். எம்.ஜி.ஆர் இப்படித் தான் ஆர்ப்பாட்டமாக வளர்ச்சி அடைந்து வந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்க அப்பொழுது சாதகமான சூழல் நிலவியது. ஆனால் விஜயகாந்தால் அது சாத்தியமா என்பது கேள்விக் குறி தான். திரையில் மாயஜாலம் காட்டும் நடிகர்களை தமிழ் மக்கள் நம்பியதால் தான் இன்று தமிழ்நாடே ராஜாஜி, ஜீவானந்தம், அண்ணா, கக்கன்  போன்ற தலைவர்களின் அரசியல் பாதைகளை மறந்து மோசமான பாதையில் போய்கொண்டு இருக்கிறது.

விஜயகாந்த் தே.மு.தி..க.,வை ஆரம்பித்து 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் விஜயகாந்த் மட்டும் தான் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். ஆனால் டெபாசிட் இழந்தவர்கள் மொத்தம் பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 64 ஆயிரத்து 232. இவை 8. 38 சதவீதம் என்று பத்திரிக்கைகள் சொல்லின. தற்பொழுது நடைபெற்ற மதுரை சட்டமன்றத் இடைத் தேர்தலில் 17,394 ஓட்டுக்களை வாங்கியது. இது கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற ஓட்டுக்களை விட 5300 ஓட்டுக்கள் அதிகம். அதே போல உள்ளாட்சித் தேர்தலில் எந்த சிற்றுறாட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியையும் தே.மு.தி.க.வினர் கைபற்றா விட்டாலும், அதன் வார்டு தேர்தல்களில் பிரதான கட்சிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவை எல்லாம் தே.மு.தி.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. அதில் மாற்றமே இல்லை.

தே.மு.தி.க.வின் முக்கிய சாதனை அக்கட்சியை சரியாக வழி நடத்திச் செல்வது. கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து அதில் தோல்வி கண்டாலும், உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியினர் எழுந்து நிற்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று யார் என்ற கேள்விக்கு நான் இருக்கிறேன் என விஜயகாந்த் மார் தட்டுகிறார். இது உண்மையில் யாருக்கு கிடைத்த அடி என்றால் ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட்கள் போன்ற இதர கட்சிகளுக்கு கிடைத்த அடி. யோசித்துப் பாருங்கள் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு மாற்று யார் என்ற கேள்வியை வைக்கும் பொழுது விஜயகாந்த் என்று உடனே பொது மக்களிடம் இருந்து பதில் கிடைக்கும். இது ஒரு மகத்தான சாதனையே. ஆனால் விஜயகாந்தின் தே.மு.தி.க., ஆட்சியை பிடித்து தமிழகத்தை விஜயகாந்த் ஆட்சி செய்வார் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது. நான் பார்த்த அரசியல் வரலாற்றில் விஜயகாந்தைப் போல பலர் வந்தனர். ஆனால் அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் வளரமுடியவில்லை. பா.ம.க., ம.தி.மு.க. தலித் கட்சிகள் போன்ற கட்சிகளை இதற்கு உதாரணம் சொல்லலாம் என்கிறார் பொது நிர்வாக துறை போராசிரியர் அன்னபூரணி.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க., வளர்ச்சி அடைந்து வருகிறது உண்மை தான். ஆனால் இந்த வளர்ச்சி நீண்ட காலம் நிலைத்து இருக்காது. மதுரை இடைத்தேர்தலில் அவரது கட்சி அதிகமாக வெற்றி பெற்றதற்கு காரணம் அவர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அத்தொகுதியில் வாழும் மெஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர். அதே போல் அ.தி.மு.க., கூட்டணி ஓட்டை விஜயகாந்த் பிரிக்கிறார் என்ற கருத்தை நாங்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறோம். தமிழக அரசியலை கொஞ்சம் ஆழமாகப் பாருங்கள். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியமான கட்சிகள் எல்லாம் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் ஒண்டிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் அவர்களால் 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மட்டும் மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதே வேலையில் அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க, கூட்டணியை சமாளித்ததோடு, விஜயகாந்தையும் சமாளித்தோம். தமிழக அரசியலில் எந்த எதிர்கட்சியும் பெறாத அளவு அதிக சட்டமன்ற உறுப்பினர்களை இன்று அ.தி.மு.க. வைத்திருக்கிறது. அதே போல் மதுரை மத்திய தொகுதி, உள்ளாட்சி தேர்தலிலும் சமாளித்தோம். தேர்தல் களத்தில் ஒவ்வொரு அ.தி.மு.க., தொண்டனும் தூக்கம், உணவு, உறவுகளை மறந்து உழைத்ததால் வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தயவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதே விஜயகாந்த் எங்களோடு சேர்ந்திருந்தால் தி.மு.க., கூட்டணி அம்பேல் தான். தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் எங்களோடு விரைவில் இணைய உள்ளது. அந்த மாற்றங்களுக்கு பின் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம். விஜயகாந்த் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பது எல்லாம் இங்கு நடக்காத காரியம்.. அவரும் எங்கள் அ.தி.மு.க. அணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. சென்னையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியினர் செய்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அக்கட்சியினர் எங்களோடு இணக்கமாக இருக்கிறார்கள். விரைவில் அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி அமையத் தான் போகிறது. அப்பொழுது கிளம்பும் வெற்றி பட்டாசுகளின் ஒலியை, இன்று அ.தி.மு.க.,வை குறை சொல்பவர்கள் பார்க்கத் தான் போகிறார்கள் என்கிறார் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினரான சந்திரா.

Copyright © 2005 Tamiloviam.com - Authors