தமிழோவியம்
கட்டுரை : என்ன நடக்கப் போகுதோ??
- மீனா

அமெரிகக் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்ஷின் அமைச்சரவையிலிருந்து கடந்த 10 நாட்களுக்குள்ளாகவே முக்கியமான பல நபர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். காலின் பவுல், ராட் பைகே, ஜான் ஆஷ்கிரா·ப்ட் போன்ற பலரது ராஜினாமாவிற்கான காரணங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் வேறு வழியின்றி கையைப் பிசைந்துகொண்டு நடப்பதைப் பார்க்க அவர்கள் தயாராகிவிட்டார்கள்.

நிற்க ஈராக் போரின் விளைவுகளையே முழுமையாக சரிசெய்யாத இன்றைய நிலையில் ஈரான் மீதான தாக்குதலுக்கான காரணங்களை அடுக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்கு முதற்படியாக பாக்கிஸ்தான் விஞ்ஞானியிடமிருந்து யுரேனிய உதவியைத் திருட்டுத் தனமாக ஈரான் பெற்றது என்றும் உலக அளவில் சட்டவிரோதமாக யுரேனியத்தைச் செறிவூட்டும் வேலைகளில் ஈரான் ஈடுபட்டதென்றும் ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை ஈரான் மறுத்தாலும் விஷமத்தனமாக அதை ஏறக்வே மறுத்து தான் சொன்னதையே சொல்லிவருகிறது

ஈராக் மீது எதற்காக அமெரிக்கா அவசர அவசரமாகப் படையெடுத்தது என்பது ஐ.நா உள்ளிட்ட உலக அமைப்புகள் - நாடுகள் அனைத்திற்கும் தெரியும் என்றாலும் வாய் மூடி மவுனமாகவே அனைவரும் இருந்தார்கள். இதோ ஆரம்பிக்கப் போகிறது அமெரிக்காவின் அடுத்த யுத்தம். இஸ்ரேல் - பாலஸ்தீனியப் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாகவும் பாலஸ்தீனிய மக்களுக்கு 100 கோடி ரூபாய் அளிக்க முன்வருவதாகவும் ஜனவரியில் நடக்க இருக்கும் தேர்தலுக்கும் நிதி உதவி செய்வதாக புஷ் கூறினாலும் அவரது பேச்சை உற்று கவனித்தால் அடுத்த பாலஸ்தீனியத் தலைவரை புஷ் தான் மறைமுகமாகத் தேர்வு செய்யப்போகிறார் என்ற உண்மை புலப்படும்.

ஆக ஒருகாலத்தில் இங்கிலாந்து உலக நாடுகளில் பாதிக்கும் மேலாக தனது ஆதிக்கத்தில் வைத்திருந்ததைப் போல தற்போது அமெரிக்க ஆதிக்கத்தை உலகெங்கும் பரப்ப புஷ் ஆசைப்படுகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? கடவுளுக்கே வெளிச்சம்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors