தமிழோவியம்
திரையோவியம் : கனகவேல் காக்க - இசை வெளியீடு விழா
-

கரண் கதாநாயகனாக நடிக்கும் ஆறாவது படம் கனகவேல் காக்க. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமல்ஹாசன் இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டதனால் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.

ஆகர்ஷினி தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘கனகவேல் காக்க’, இயக்குநர் கவின் பாலாவுக்கு முதல் படம். இவர் இயக்குநர் சரணிடம் பல்லாண்டு காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அதற்கு முன்னால் கவிஞர் வைரமுத்துவிடம் பணியாற்றியிருக்கிறார்.

ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை அடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவிஞர் சிநேகன், ஒரு முக்கியமான விவரத்தைத் தெரிவித்தார்.

‘நானும் கவின்பாலாவும் ஒன்றாக வளர்ந்தோம். ஒரே தட்டில் சாப்பிட்டோம். ஒன்றாக கவிஞர் வைரமுத்துவிடம் வேலை செய்தோம். ஆனால் நான் சினிமாவில் கவிஞனாக அறிமுகமானபோது அவர் ஒரு வாழ்த்து கூடசொல்லவில்லை. இன்றுவரை அவர் என்னை ஒரு கவிஞனாக அங்கீகரிக்கவேயில்லை. ஒருவேளை அவரது துறையிலேயே நான் வந்துவிட்ட காரணமாக இருக்கலாம். ஆனால் கவின்பாலா கவிதை எழுதக்கூடியவராக இருந்தாலும், நல்லவேளையாக சினிமாவில் கவிஞனாக அறிமுகமாகவில்லை. பதிலாக, இயக்குநராகியிருக்கிறார். அவரையாவது வைரமுத்து வாழ்த்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் கவிஞர் சிநேகன்.

கூடியிருந்தவர்கள் மத்தியில் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், கரணின் உருக்கமான பேச்சு அனைவரையும் நெகிழவைத்தது. தனது கேரியரில் இது மிக முக்கியமானப் படம் என்று சொன்ன கரண், முதல் முதலாக கனகவேல் காக்கதான் தன்னை ஏ,பி,சி என எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற கதாநாயகனாக கொண்டு நிறுத்தப்போகிறது என்று குறிப்பிட்டார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, வசனகர்த்தா பா. ராகவன் இருவரையும் மனமாரப் புகழ்ந்த கரண், ‘சிறந்த டெக்னீஷியன்கள் அமைவதுதான் ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்யும். இந்தப் படத்தில் எனக்கு அப்படி அமைந்துவிட்டது’ என்றார்.

பொதுவாக யாராவது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்தான் இம்மாதிரி விழாக்களைத் தொகுத்து வழங்குவார்கள். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை இயக்குநர் கவின்பாலாவே தொகுத்து வழங்கியது வித்தியாசம். தெளிவாக, அடக்கமாக படக்குழுவினர் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி, பேச அழைத்த அவர், இறுதிவரை தான் தனியாக ஏதும் பேசாமல் இருந்துவிட்டார்.

படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுள் நான்கைப் பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். இந்தக் காதல் வந்த பிறகு என்னும் பாடலும், சுத்துகிற பூமி என்னும் பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவை நிச்சயம் ஹிட் ஆகும் என்று பத்திரிகையாளர்கள் பேசிச் சென்றார்கள்.

டிசம்பர் வெளியீடாக வரவிருக்கும் கனகவேல் காக்க படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஷாஜி. இவர் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர். இசை விஜய் ஆண்டனி. எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். சண்டைப் பயிற்சி கனல் கண்ணன். பா. ராகவன் வசனம் எழுதியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் கவின் பாலா.

சென்னையிலிருந்து: ஆர். கனகராஜ்

Copyright © 2005 Tamiloviam.com - Authors