தமிழோவியம்
கட்டுரை : சதாம் மாவீரர்?
- பாபுடி


நினைத்ததை சாதித்து விட்டது அமெரிக்கா. ஈராக் மாஜி அதிபர் சதாம் உசேனின் கதையை  எஜமானரின் (அமெரிக்கா) விருப்பப்படி ஈராக்கிய அரசு முடித்து விட்டது. சதாமிடம் நடத்தப்பட்ட விசாரணையும் , தீர்ப்பும், அவரை  தூக்கிலிட காண்பிக்கப்பட்ட அவசரமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரை  முஸ்லீம் சமுதாயத்தின் பாதுக்காவலனாகவும் மாவீரனாகவும் பரவலாக ஒரு இமேஜையும் உருவாக்கி விட்டுள்ளது. உண்மையில் அது நிஜம் தானா? மறுக்கிறது அவருக்கு எதிரான தரப்பு.

' முஸ்லீம் மதத்தில் ஒரு பிரிவான சன்னி பிரிவைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இன்னொருப் பிரிவான ஷியா பிரிவினர் மீது தீராத கடும் பகையுணர்வு அவருக்கு. ஈராக்கில் குறிப்பாக தென் பகுதியில் ஷியா பிரிவினர் வளர்ந்து வருவதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 1979ல் ஈராக் அதிபரானதும்  ஷியா பிரிவினரையும் அதே போல் குர்த் பழங்குடியின மக்களையும் கொடுமைப்படுத்தி சுகம் கண்டார் சதாம். அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கி கொன்று குவித்தார். சொந்த நாட்டிலேயே எதிரி நாட்டு ஜனங்களைப் போல அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடந்தார்கள்.

Saddamஅதிபரான அடுத்தாண்டே  சக முஸ்லீம் நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். ஒன்றல்ல..இரண்டல்ல 8 ஆண்டுகள் போரை நடத்தி விபரீத ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து லட்சக்கணக்கான அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்படவும் பலியாகவும் காரணமாக இருந்தவர் சர்வாதிகாரி சதாம் . அதற்கிடையில் 1982ல் ஈராக்கில் துஜைல் நகரில் தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக ஷியா பிரிவு முஸ்லீம்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டார் சதாம். அங்குள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த அப்பாவி முஸ்லீம்கள் 148 பேர் சதாமின் கொலை வெறிக்கு பலியானார்கள். ஷியா பிரிவு மதத் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவரது கொடுங்கோன்மை தாளாமல் ஈராக்கில் ஷியா பிரிவைச் சேர்ந்த பல தலைவர்கள் சொந்த நாட்டை விட்டு ஓடி ஈரானில் தஞ்சம் புக வேண்டியதாயிற்று.

அத்தோடு நிற்காமல் குவைத்தையும் ஆக்ரமித்து அட்டூழியம் செய்தவர் அதே சதாம் தான். அவரது சர்வாதிகார ஆட்சியில் அவரின் உறவினர்களும் ஆட்டம் போட்டனர். சதாமைப் போலவே அவரது மகன்கள் ஹ¤தாய், குவாஸி ஆகியோரும் அரசியல் எதிரிகளை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றும் பெண்களை வக்கிரமாக அனுபவித்து பாழ்படுத்தியும் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை என்று சதாம் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. தனது ஆட்சி அதிகாரத்துக்காக சொந்த முஸ்லீம் இன மக்களையே பாதிப்புக்குள்ளாக்கியும் அநியாயமாகக் கொன்றும் குவித்த அவர் எப்படி ஒட்டு மொத்தமாக முஸ்லீம் சமுதாயத்தின் பாதுகாவலனாக, மாவீரனாக இருக்க முடியும்?' என்று கேட்கிறார்கள் சதாமின் எதிர்தரப்பினர்.

Sadaamகடந்த 2003ல் ஈராக்கை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படை கைப்பற்றிய போதும்;  ஒரு பொந்தில் உயிருக்கு பயந்து பதுங்கி இருந்த சதாம் அமெரிக்கப் படையிடம் சிக்கிய போதும் ஷியா மற்றும் குர்த் மக்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள் இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாகவே இருந்தன. இப்போது கூட கடந்த டிசம்பர் 30ம் தேதி சதாம் தூக்கிலிடப்பட்ட போது ஈராக்கில் ஷியா பிரிவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதையும் 'சதாம் ஒரு வரலாற்றுக் குப்பை' என்று அவர்கள் திட்டித் தீர்த்துள்ளதையும்  நினைவில் கொள்ள வேண்டியுள்ளவையாகும்.

மறுபுறம். ' ஈராக்கில் பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சிக்கு அடிகோலியவர் சதாம் தான். ஈராக்கை கைப்பற்றி எண்ணை வளத்தைச்  சுரண்டும் தனது சதிதிட்டத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் சதாமை அகற்ற 'சதாம் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கிறார்' என்று அமெரிக்கா பிரயோகித்த அஸ்திரம் புஸ்வாணமாகி போய் விட்டது. அதனால் '1982 துஜைல் இனப்படுகொலை' என்ற காயை கையில் எடுத்து தனது அடிமை ஈராக் அரசை முன் வைத்து விசாரணை நாடகம் நடத்தி சதாமைத் தீர்த்துக் கட்டி பழியை தீர்த்துக் கொண்டு விட்டது அமெரிக்கா. உலகின் 'தாதா'வாக தன்னை நினைத்துக் கொள்ளும் - உலகளவில் முஸ்லீம்களை ஒடுக்க முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று வீரப் போர் புரிந்த  சதாம் உசேன் நிச்சயமாக முஸ்லீம் சமுதாய பாதுகாவலன், மாவீரன் தான் ' என்கிறது அவரது ஆதரவுக் குரல்கள்.
 
சதாம் நல்லவரா; கெட்டவரா? காப்பாளரா? கொலைகாரரா? ...இதெல்லாம் காலம் விடை கூற வேண்டிய கேள்விகள். ஆனால், பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இரும்புக் கரத்துக்குள் அடக்கி வைத்திருந்த ஒரு அதிபரின் -  தனது சின்ன உதட்டசைவில் பல்லாயிரம் அப்பாவி உயிர்களை புதைகுழிக்கு அனுப்பிய ஒரு சர்வாதிகாரியின் உயிர்,  சாதாரணமான ஒரு முழம் கயிற்றில் மிகச் சாதாரணமாக காணாமல் போய் விட்டதே ! இது தான் நிதர்சனம். உலகுக்கு சொல்லும் பாடம் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors