தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 12]
- ஆருரான்

மகாத்மா காந்தி அறவழியில் போராடி வென்றாரே ஈழத்தமிழர்கள் ஏன் அப்படிப் போராடக் கூடாதென சிலர் புலம்புவதில் எந்த நியாயமுமில்லை. மகாத்மா வாழ்ந்த காலகட்டம் வேறு, அதை விட மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் சார்பில் போராடியவர், அவருடைய போராட்டம் பெரும்பான்மையினர் சிறுபான்மைக் குடியேற்றவாதிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டமானது சிறுபான்மைத் தமிழர்களின் இனவாதம் மிகுந்த சிங்கள, பெளத்த வெறிக்கெதிரான போராட்டம். அதனால் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்தை ஈழவிடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட முடியாது.

1983 ஆம் ஆண்டு நடந்த தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள அரசு தமிழர்களைக் கொண்று குவித்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. 1983 இல் பிந்துநுவோவா சிறையில் இருந்த தமிழ்க் கைதிகள் ஈவிரக்கமின்றி, அங்கிருந்த சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் சிங்கள அரசுதான்.

அதன்பிறகு தமிழ்க் கிராமங்களைச் சுற்றிவளைத்து அங்கிருந்த மக்களைப் படுகொலை செய்தும், கடலில் பயணம் செய்யும் தமிழ்ப் பயணிகளை வழிமறித்து வெட்டிக்கொண்றும் பல கோரத் தாண்டவங்களை சிங்கள அரசு நிகழ்த்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடித் தமிழ்ப் பொதுமக்கள் 185 பேர் இராணுவ முகாமுக்கு இராணுவச் சீரூடையிலும் சாதாரண சீரூடையிலும் இருந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களைக் கூர்க்கத்தியால் குத்தி கதறக் கதறப் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட தமிழர்களில் பச்சிளம் பாலன்களும் பெண்களும் அடங்குவர். அந்தக் கொலைக்களத்தில் இருந்து தப்பிய ஒருத்தர் பின்னாளில் அளித்த வாக்கு மூலத்திலிருந்தே இந்த உண்மைகள் வெளியாயின.

1995 ஆம் ஆண்டு சிங்கள வான்படைகள் நவாலித் தேவலாயம் மீதும் அதனருகே இருந்த கட்டிடங்கள் மீதும் வீசிய குண்டால் 65 பேர் கொல்லப்பட்டும், 165 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமுமடைந்தனர்.

இதுபோன்று பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறைந்ததற்கு தமிழர்கள் ஆயுதப் போராட்டம் வலுவுற்றதுதான் காரணம். அதுதான் ஈழத்தமிழரிடையே உள்ள பழமொழி ஒன்று கூறுகின்றது.. 'புலிகள் இல்லையென்றால் தமிழனை எலியும் தின்டுவிடும்" என.

வள்ளிபுன மானவிகள் வன்னியில் வான்பறனையால் குண்டுபோடப்பட்டு சாக்கொல்லப்பட்டதும், வாகரையில் தங்கியிருந்த தமிழ் அகதி முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தமிழ்ப் பொதுமக்களைச் சிங்கள அரசு கண்மூடித்தனமாகக் கொண்றதும் மன்னிக்கமுடியாத கொடூரமான செயல்கள் ஆகும்.

வங்காலை, அல்லைபிட்டி, அதற்கு முன்னரான செம்மணிப் புதைகுழி என்று பல உண்டு. மேலும் சிங்கள இராணுவத்தால் பல தமிழர்கள் பலாத்காரப்படுத்தப்பட்டும், நாய்போல் சுடப்பட்டும் செத்துள்ளார்கள். அண்மையில்கூட தமிழ் விவசாயக்கல்லூரியில் புகுந்து நான்கு அப்பாவி மாணவர்களைக் கொண்றுவிட்டு பலரைப் படுகாயப்படுத்திவிட்டுச் சென்றது சிங்கள அரசு.

1980 - 2002 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சிறீலங்காவில் 12,221 பேர் காணமல் போய் உள்ளனர் என்று ஐநாவின் மனிதஉரிமைகள் அமைப்புக் கூறுகின்றது. 12,221 பேரும் கைது செய்யப்பட்டபின்னரே காணாமல் போயுள்ளனர். உலகளாவிய ரீதியில் காணமல்போனவர்கள் தொகையில் இரண்டாம் இடத்தை சிறீலங்கா இடம்பிடிக்கின்றது. சிறீலங்காவிற்கு முன்னர் ஈராக் 16,384 காணாமல்போனோர் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது.

மேற்கூறிய வழிகளால் சிங்கள அரசுகளின் ஆட்சியின்கீழ் இலங்கையில் தமிழர் சொல்லேலாத் துன்பங்களுக்கு உள்ளாகினார்கள், தொடர்ந்தும் பெரும் அவதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பியர் காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த சிங்களவர் காலத்திலும் தமிழர்கள் அனுபவித்த இன்னலுக்கு அளவேயில்லை.

தமிழர் தம் நிலத்தை, உடமையை, உயிரை, உறவுகளை எல்லாவற்றையும் இழந்து தம் சொந்த நாட்டில் அகதிகளாக மாறியுள்ள அவலம் தற்போதுள்ளது.

ஈழத்தமிழர்கள் நாற்பது வருடங்களாக சனநாயக வழியிலும் காந்தீய வழியிலும் தமது உரிமைகளைப் பெற போராடி எந்தவித பலனும் கிடைக்காமையால் தான் ஆயுதமேந்திப் போராடத் துணிந்தார்கள். எத்தனையோ கிழித்துப் போடப்பட்ட ஒப்பந்தங்கள், பஞ்சாயத்துத் திட்டங்கள், அதிகாரமற்ற மாவட்ட சபைகள், பிரதேச சபைகள், ஏமாற்றும் அதிகாரப் பரிமாற்றம் இப்படி எத்தனையோ சுத்து மாத்துக்களையும் பார்த்து ஈழத்தமிழர்கள் இளைத்து விட்டார்கள். இலங்கையில் தமிழீழம் மலர்வது ஒன்று தான் ஐம்பது வருடங்களாகச் சிங்கள இனவாத அரசின் சட்டங்களாலும், இனக்கலவரங்களாலும், இராணுவ அட்டூழியங்களாலும் பாதுகாப்பற்று, நாடிழந்து, நாதியற்று, நிம்மதியில்லாமல் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும் ஒரே வழியாகும்.

தமீழம் இந்திய ஒற்றுமையைக் குலைக்குமா? தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு பிரிவினை ஏற்படுமா? தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியுமென சில இலங்கைத் தமிழர்களிடம் எந்த வித தொடர்பும் கொண்டிராத இந்திய கட்டுரையாளர்கள் கூறுகிறார்கள், இவர்கள் கூறுவதில் எந்தளவுக்கு உண்மையுண்டு? இப்படியான கருத்தைச் சிங்களவர்கள் அவிழ்த்து விடுவதும் அதற்கு ஆதரவளிப்பதுமுண்டு, அவர்கள் அப்படிச் செய்வதன் நோக்கம், இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் ஒன்று சேராமல் செய்வது தான் சிங்களவர்களின் நோக்கம்.

தமிழீழம் மலர்ந்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்கும் எனக் கூறுபவர்கள் தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்குமிடையிலான அரசியல், சமூக நிலவரங்களின் வேறுபாடுகளை அறியாதவர்கள் என்பது தான் உண்மை. வங்காளதேசத்தை இந்தியா உருவாக்கியது, இந்தியாவின் மேற்கு வங்காளம் பிரிவினை கோராதபோது, தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு மட்டும் பிரிந்து போய்விடும் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்தியநாட்டுப் பற்றை அவமதிப்பதாகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

தமிழ்நாட்டில் பிரிவினைக்கு ஆதரவளித்து தமிழுக்காக தீக்குளித்ததெல்லாம் அந்தக் காலம். இந்திய அரசியல், பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்றுமில்லாதளவுக்கு அதிகாரம் கொண்டதாகவுள்ளது மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்கள் என்ற நாட்டுப்பற்றுடன் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு, தமிழீழத்தின் அரசியல் சமூக, பொருளாதாரப்
பிரச்சனைகளுக்குமிடையில் அடிப்படை வேறுபாடுகளுண்டு.

தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இன, மொழி, கலாச்சார, மத, குடும்பத் தொடர்புகளையுடைய ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டின் திராவிடக் கொள்கைகளுடன் எள்ளளவு தொடர்புமில்லாதவர்கள். இலங்கைத் தமிழர்கள் திராவிடம் என்ற வார்த்தையைப் பாவிப்பதுகூடக் கிடையாது.

ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை சிங்கள பெளத்த ஆதிக்கத்தினது இனக் கலவரங்களினதும், முற்றிலும் சிங்களவர்களை மட்டும் கொண்ட சிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்க்கும் அடையாளமாக உருவானது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றிலேயே எந்தவொரு ஈழத்தமிழர் தலைவரும் இந்தியாவுடனோ அல்லது தமிழ்நாட்டுடனோ இணைவதைப் பற்றிப் பேசியதில்லை. அப்படியே தமிழீழம்
மலர்ந்தால், தமிழீழத்தின் தலைவர்கள் யாரும் முட்டாள் தனமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டமாட்டார்கள். அப்படி ஏதாவது செய்து முட்டாள் தனமாகச் சீண்டிப் பார்த்தால், தேவையில்லாமல் இந்தியாவின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வருமென்பதும் தெரியும். அதை விட புதிதாக மலர்ந்த தமிழீழம் வர்த்தகத்துக்கும், பாதுகாப்புக்கும் இந்தியாவில் தான் தங்கியிருக்கும், அத்துடன் பெரும்பான்மை சைவத்தமிழ் தொடர்பால் தென்னாசியாவில் தமிழீழம் இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கல்வியறிவுள்ள நாற்பது இலட்சம் இலங்கைத் தமிழர்கள், தமிழீழத்தில் தமது அடையாளத்தைப் பேணுவதை விடுத்து, தமிழ்நாட்டின் ஆறு கோடித் தமிழர்களுடன் கலந்து காணாமல் போவதை விரும்புவார்கள் என்பதை சொல்லுகிறவன் சொன்னால் அதைக் கேட்கிறவனுக்கு சொந்தப்புத்தி எங்கே போனது? உண்மையில் மலரும் தமிழீழம் மொழி, கலை, கலாச்சார, வர்த்தக, குடும்ப்ப தொடர்புகளைத் தான் தமிழ்நாட்டுடன் வைத்திருக்குமே தவிர எந்த வித அரசியல் தொடர்பையும் வைத்திருக்காது என்பது நிச்சயம்.

(முற்றும்.)

Copyright © 2005 Tamiloviam.com - Authors