தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 12]
- என். சொக்கன்

'சார், உங்கள மொதலாளி கூப்டறார்'

'மொதலாளி'யா? பாலாவுக்கு அந்த வார்த்தையை நினைக்கையில் ஏனோ சிரிப்பு வந்தது. முதலாளி இல்லை, மொதலாளி. யார் அந்த மொதலாளி? என்னைப் பார்க்க விரும்புகிற மொதலாளி?

இந்த ஊரில் பாலாவுக்குத் தெரிந்த ஒரே 'மொதலாளி', அவனுடைய அப்பா ராகவேந்தர்தான். பின்னே, இது யார் புதிதாக?

ஆச்சர்யத்தோடு, அந்த இளைஞனின் பின்னே நடந்தான் பாலா. நான்கைந்து கட்டடங்கள் தாண்டியபிறகு, மிளகாய்ப்பொடி வாசமடிக்கும் அந்தக் கடை தட்டுப்பட்டது.

அதைக் கடை என்று சொல்வதுகூட தவறு. மொத்த வியாபாரிகள் தங்களது பொருள்களைச் சேமிக்கும் கொடௌன்போலத் தென்பட்டது. வியர்த்த மனிதர்களின் முதுகுகளில், மூட்டைகள் முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டிருந்தன.

தூசிப் புழுதிக்குப் பின்னாலிருந்து, கையில் ஒரு பரீட்சை அட்டையோடு அந்த 'மொதலாளி' வெளிப்பட்டார், 'என்ன பாலா, எங்களையெல்லாம் நினைவிருக்கா?'

அந்தத் தெற்றுப்பல் சிரிப்பில், பாலா ஏழெட்டு வருடம் பின்னோக்கிச் சென்றுவிட்டான், 'டேய் சுந்தர், நீதானா?'

'நானேதான்' என்று சிரித்த அந்தச் சுந்தர், 'எப்படியிருக்கே பாலா, உன்னைப் பார்த்துப் பல வருஷமாகுது', என்றபடி பரீட்சை அட்டையை வேறொருவரிடம் ஒப்படைத்தான், 'எங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்டேல்ல?'

'ஏய், அப்படியில்லைப்பா', என்றபடி சுந்தரின் கையைப் பிடித்துக்கொண்டான் பாலா, 'கடைசி வருஷம், ப்ராஜெக்ட், எக்ஸாம், இன்டர்வ்யூன்னு ரொம்ப பிஸி, ஊருக்கு வரவேமுடியலை'

பாலாவின் பிரம்மாண்டத் தும்மலைச் சிரிப்போடு பார்த்து, 'உனக்கு இந்த தூசு ஒத்துக்காது', என்றான் சுந்தர், 'வா, வெளிய போயிடுவோம்'

அந்தக் கடையினுள் நின்றிருந்த சில நிமிடங்களில், பாலாவுக்கு நன்றாக வியர்த்திருந்தது. அங்கிருந்து வெளியே வந்தபிறகுதான், கொஞ்சமேனும் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது. அப்பாடா, வெளிக்காற்று இத்தனை இதமானதா?

சுந்தரை இப்போதுதான் நன்றாகப் பார்த்தான் பாலா, வேட்டி, சட்டை, தடிமன் கண்ணாடி என்று ஆளே மாறிவிட்டான். அவன், இவன் என்று நினைப்பதற்குக்கூடத் தயக்கமாக இருக்கிறது.

பள்ளி நாள்களில் பாலாவும் சுந்தரும்தான் குறும்புச் சேக்காளிகள். ஊரில் ஒரு வாத்தியார் அவர்களுடைய அலம்பலுக்குத் தப்பியதில்லை. கலாட்டாவுக்குக் கலாட்டா செய்துவிட்டு, பரீட்சை என்று வந்துவிட்டால், மார்க்கும் ஒழுங்காக வாங்கிவிடுவார்கள். ஆகவே, வாத்திகள் அவர்கள்மீது என்ன குறை சொன்னாலும் எடுபடாது.

பத்தாம் வகுப்பில் பாலாவும் சுந்தரும் மிகச் சரியாக ஒரே மார்க் எடுத்தார்கள். யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்.

அடுத்த வருடம் அரையாண்டுப் பரீட்சை நேரத்தில், சுந்தரின் அப்பா அகாலமாக இறந்துப்போனார். அதன்பிறகு, தொடர்ந்து படிக்கவேண்டாம் என்று அவனைக் குடும்பத் தொழிலினுள் இழுத்துவிட்டார்கள்.

பாலா எஞ்சினியரிங் சேர்ந்தபோது, சுந்தரின் மளிகைக்கடையில் ஊருக்கே சாக்லெட் கிடைத்தது, 'நான் படிக்கலைன்னா என்ன மச்சி? எனக்கும் சேர்த்து நீ படிச்சுட்டு வா, எப்படியும் நாம ரெண்டு பேரும் ஒரே மார்க்தானே எடுக்கப்போறோம்?', என்று அவன் ரயிலடியில் சொன்னது நேற்றுப்போல் நினைவிருக்கிறது.

கல்லூரி விடுதி என்பது, நிறைய புதிய நட்புகளை உருவாக்குகிறது. அதேசமயம், ஏகப்பட்ட பழைய நட்புகளைப் பின்னுக்குத் தள்ளி மறக்கடித்துவிடுகிறது. கடைசியாக சுந்தரைப் பார்த்து இரண்டு வருடத்துக்குமேல் இருக்கும் என்று நினைக்கையில் பாலாவுக்குக் கூச்சமாக இருந்தது.

'ஆனா, நீ ரொம்ப மாறிட்டேடா', என்றான் பாலா, 'ஆரம்பத்தில விருப்பமே இல்லாமதானே இந்தத் தொழிலுக்கு வந்தே? அப்புறம் எப்படி?'

'விருப்பம்-ங்கறதெல்லாம் ரொம்ப ஆடம்பரம்டா மச்சான்', சுந்தர் எப்போதும்போல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தான், 'வாழ்க்கை போற போக்கில நாமளும் போகவேண்டியதுதான். நான் நினைக்கிறமாதிரிதான் எல்லாம் நடக்கணும்ன்னு எதிர்பார்த்தா, ஏமாற்றமும், மன வருத்தமும்தான் அதிகமா இருக்கும்'

'அது சரிதான், ஆனா, இந்தத் தொழில்பத்தி ஆரம்பத்தில உனக்கு ஒண்ணுமே தெரியாதே, எப்படி எல்லா விஷயமும் முழுசாக் கத்துக்கிட்டே?'

'முழுசாக் கத்துக்கிட்டேன்னு யார் சொன்னது?', அதே பழைய குறும்போடு கண்ணடித்தான் சுந்தர், 'எதுவுமே தெரியாம ஒரு தொழில்ல இறங்கறது ஒரு விதத்தில சவுகர்யம்ப்பா, இதைத்தான் செய்யணும், இப்படிதான் செய்யணும்-ன்னு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது, விருப்பம்போல புது விஷயங்களை முயற்சி செய்யலாம்'

'ஆனா, ஒருமாதிரி மலைப்பா இல்லையா சுந்தர்?', அவன் சொல்வதை நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு கேட்டான் பாலா, 'நீச்சல் தெரியாதவனைத் தண்ணிக்குள்ளே தள்ளிட்டமாதிரி, ஏதாவது தப்பு செஞ்சுடுவமோ, அப்படியே மூழ்கிப்போய்டுவமோ-ன்னு பயமா இல்லையா?'

'ஏய், இதையெல்லாம் நீ ஏன் அக்கறையா விசாரிக்கறே?', என்றபடி அவனுடைய முதுகில் தட்டினான் சுந்தர், 'உங்கப்பா ·பேக்டரி இப்ப உன் பொறுப்புக்கு வந்துடுச்சா என்ன?'

அவன் அப்படிச் சட்டென்று தெரிந்தாற்போல் கேட்டதும் பாலாவுக்கு திகைப்பாகிவிட்டது, 'அதெல்லாம் இல்லைப்பா', என்றான் உடனடியாக. சிறிது யோசனைக்குப்பிறகு, 'அப்படி ஒரு யோசனை இருக்கு', என்றான் தயக்கத்துடன்.

'வெரி குட், வெரி குட், உடனடியாக் கொண்டாடியாகவேண்டிய விஷயம் இது', என்றான் சுந்தர், 'தெருமுனையில, ஆனந்த பவன்-னு ஒரு ஹோட்டல் புதுசா ஆரம்பிச்சிருக்கான், அவன் போடற கா·பிக்கு ஈடு இணையே கிடையாது, ஆனா, பில் நீதான் கொடுக்கணும், சரியா?'

ஆனந்த பவன், அந்த மாலை வேளையிலும் நல்ல கூட்டத்தில் திணறிக்கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மேஜை காலியாக இருந்தது. சவுகர்யமாக அவர்கள் அமர்ந்துகொண்டார்கள்.

'ஸ்ட்ராங்கா ரெண்டு கா·பி', என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில், 'சொல்லு பாலா, இப்போ உனக்கு என்ன பிரச்னை?', என நேரடியாக விஷயத்துக்குத் தாவினான் சுந்தர்.

'அப்பாவுக்கு உடம்பு சரியில்லை சுந்தர்', என்றான் பாலா, 'சீரியஸா ஒண்ணுமில்லை. ஆனா, டாக்டர் அவரைக் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கச் சொல்றார்'

'ஓகே ஓகே, மத்தது எனக்குப் புரிஞ்சுபோச்சு', கா·பி நுரையை நாவால் ருசி பார்த்துச் சப்புக்கொட்டினான் சுந்தர், 'உங்கப்பா எல்லாப் பொறுப்பையும் உன் தலையில கட்டப் பார்க்கறார், சரியா?'

'ஆமாம்பா', தன்னுடைய குரலில் எப்படிச் சுய இரக்கம் கலந்துகொண்டது என்று பாலாவுக்குத் தெரியவில்லை, 'ஆனா, இப்போ என்ன பிரச்னைன்னா, அவரோட பிஸினஸ்பத்தி எனக்கு எந்த விவரமும் தெரியாது'

'அதைப்பத்தி நீ கவலைப்படவேண்டியதில்லை பாலா', என்றான் சுந்தர், 'பில் கேட்ஸ்ல தொடங்கி, நம்ம ஊர் லட்சுமி மிட்டல்வரைக்கும் பிஸினஸ்ல பெரிசா சாதிச்ச பல பெரும்புள்ளிகள், எந்த அனுபவமும் இல்லாம தொழில்ல இறங்கினவங்கதான்'

அடுத்த சில நிமிடங்களுக்கு அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனந்த பவன் கா·பியின் ருசி, சூழலை விழுங்கியிருந்தது. பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியே வருகையில், 'எல்லா விஷயத்தையும் நல்லாக் கத்துகிட்டு ஒரு தொழில்ல இறங்கறதுதான் பெஸ்ட். ஆனா, பலருக்கு அந்த யோகம் கிடைக்கறதில்லை. ஏதோ ஒரு தைரியத்தில இறங்கி எதிர் நீச்சல் போட்டு ஜெயிக்கறவங்கதான் அதிகம்', என்றான் சுந்தர்.

'எந்தத் தொழில்லயும் ஒரு புதுமை வேணும்ப்பா, அது நம்மைமாதிரி கத்துக்குட்டிங்களாலதான் முடியும்', சுந்தரின் குரலில் புது உற்சாகம் தெரிந்தது, 'உங்கப்பாவும் எங்கப்பாவும், ஒரே தொழிலை, ஒரேமாதிரி இருபது வருஷமா செஞ்சுகிட்டிருந்தாங்க. அதுக்கு அடுத்து ஒரு நிலை இருக்கு-ன்னு அவங்களுக்கு நிச்சயமாத் தோணியிருக்காது. ஏன்னா, அவங்களுக்கு அந்தத் தொழிலை எப்படிச்  செய்யணும்ன்னு தெரியும், தெரிஞ்சதைமட்டும்தான் அவங்களால திரும்பத் திரும்ப செய்யமுடியும்'

'ஆனா நீயும் நானும் அப்படியில்லை, புது ஆள்கள், நமக்கு ஒரு விவரமும் தெரியாது. அதுவே ஒரு மிகப் பெரிய பலம்', என்றான் சுந்தர், 'எங்கப்பா விட்டுட்டுப்போன கடையை, பத்தாங்கிளாஸ் நானே இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டுவந்திருக்கேன்னா பார்த்துக்கோ, என்னைவிட நீ அதிகம் படிச்சவன், எஞ்சினியர், ஆனா, இந்தத் தொழில்ல அனுபவமில்லாதவன், உங்கப்பாவோட தொழிலை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துகிட்டுப்போறதுக்கு, உன்னைமாதிரி ஒருத்தனாலதான் முடியும்'

'அடுத்த கட்டமா?', என்றான் பாலா.

'ஆமாம் பாலா, எந்தத் தொழிலானாலும் சரி, அது உனக்கு முழுசாப் புரியணும்-ங்கற அவசியம்கூட இல்லை. கண்ணை மூடிக்கிட்டு, இந்தத் தொழிலோட அடுத்த கட்டம் என்ன-ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அந்தக் கற்பனைமட்டும் பழகிட்டாப் போதும், அந்தக் கனவைத் தேடி நடக்கற தைரியம் இருந்தாப் போதும், எங்கேயும் ஜெயிக்கலாம், எப்பவும் ஜெயிக்கலாம், எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கலாம்'

Copyright © 2005 Tamiloviam.com - Authors