தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : புதையல் தீவு [பாகம் : 13]
- பா.ராகவன்

குண்டர்களால் நிறைந்த அந்த இயந்திரப்படகு, மணிக்குப் பதினைந்து கடல்மைல் வேகத்தில் நீரைக் கிழித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. நல்ல கும்மிருட்டு. படகை ஓட்டிய இன்னொரு புதிய குண்டனுக்கு அந்தக் கடல்பாதை நல்ல பழக்கம் போலிருக்கிறது. சில இடங்களில் வேகத்தைக் கூட்டியும் சில இடங்களில் குறைத்தும் சில இடங்களில் அரை வட்ட வடிவமாகவும் இன்னும் சில இடங்களில் முற்றிலும் எஞ்சினை அணைத்துவிட்டும் படகைச் செலுத்திக்கொண்டிருந்தான். எப்படியும் அதிகாலை நட்சத்திரங்கள் தென்படத் தொடங்கும் முன் இந்தியக் கடல் எல்லையைக் கடந்துவிடவேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக இருந்தது.

பாலு, டில்லி, குடுமிநாதன் மூவரையும் அவர்கள் ஒரு கயிற்றினால் பிணைத்து, படகின் ஒரு மூலையில் கோணி மூட்டை போல் உருட்டிவிட்டிருந்தார்கள். பாலு இன்னும் தனக்கு நினைவு திரும்பாதது போலவே நடித்துக்கொண்டிருந்தான். டில்லி, என்ன செய்யமுடியும் என்று யோசித்துக்கொண்டிருந்த அதே வேளையில் குடுமிநாதன் மனத்துக்குள் தனக்குத் தெரிந்த கடவுள்களையெல்லாம் அழைத்து, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டிருந்தான். அப்போதுதான் டில்லி சொன்னான்:

"ஒண்ணும் பிரச்னை இருக்காதுன்னுதான் நினைக்கறேன். எப்படியும் நாம தப்பிச்சிடுவோம்!"

"எப்படிடா?" என்றான் குடுமி. அவன் கண்களில் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிந்தது.

"ஒரு யூகம்தான். ஒரு காரியம் செஞ்சிருக்கேன். அது பலன் தருதான்னு பாப்போம்" என்றான் சிந்தனையில் லயித்தபடி.

அவன் சொல்லிமுடித்தநேரம் படகைச் செலுத்திக்கொண்டிருந்த புதிய குண்டனின் நடவடிக்கையில் ஒரு பரபரப்பு தெரிந்தது. வெளியே உட்கார்ந்திருந்த தலைமைக் குண்டனும் பிற தொண்டர் குண்டர்களும் தபதபவென்று எஞ்சின் அறையை நோக்கிப் போவதை அவர்கள் பார்த்தார்கள்.

"நோ!நோ!" என்று அங்கிருந்து சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் பாலுவுக்குப் புரியவில்லை. கண்ணைத் திறந்துவிடலாம் என்று நினைத்தான். சத்தமிட்டு கலாட்டா செய்துவிடக்கூடிய குடுமிக்குத் தெரியாமல் நைசாக டில்லியின் வலது காலைச் சொறிந்து, தான் விழித்துக்கொண்டிருப்பதை முதலில் தெரியப்படுத்தினான். பிறகு, சைகை மூலம் என்ன நடக்கிறது என்றும் கேட்டான்.

"கருவி வேலை செஞ்சிடுச்சின்னு நினைக்கறேன்" என்றான் டில்லி.

"என்னது?" என்றான் குடுமி.

"நாம படகில் ஏறுமுன் ஒரு மரத்தடிக்கு மறைவா போய் ஒரு நிமிஷம் தியானம் செஞ்சிட்டு வந்தேன் நினைவிருக்கா?" என்று கண்ணடித்தான் டில்லி.

"ஆமா?"

"அதான். கருவி வேலை செஞ்சிடுச்சி."

"என்னமோ உங்க மீனவர் சங்கத் தலைவர் எதையோ தேடுவார்னு சம்பந்தமில்லாம உளறின?"

"அதேதான்" என்றவன் கட்டுகளிலிருந்து தன் கையை மட்டுமாவது விடுவித்துக்கொள்ளமுடியுமா என்று பார்த்தான். ம்ஹும். பலமான கட்டு! இருப்பினும் தன் கண்ணாலேயே தன் டிராயரின் பாக்கெட்டைச் சுட்டிக்காட்டியவன், அங்கே மேடாக இருந்த பகுதியைப் பார்த்தபடி, "இதுதான். எங்க தலைவரோட மொபைல் போன்! எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துக்கிட்டு வந்துட்டேன். ஆனா போன் அடிச்சி யாரையும் உதவிக்குக் கூப்பிடும் நிலைமைல நாம இல்லை. அதனால அந்த மொபைல்ல இருந்த அத்தனை நம்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ். குடுத்துட்டேன். ஒரே ஒரு மெசேஜ்! பன்றித்தீவில் ஆபத்தில் இருக்கிறோம். காப்பாற்றுங்கள். அவ்வளவுதான். வந்துட்டாங்கன்னு நினைக்கறேன்!" என்றான் டில்லி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஓர் அதிசயம் நடந்தது. அவர்கள் போய்க்கொண்டிருந்த படகிலிருந்து சுமார் முப்பதடி தூரத்தில் சுற்றிலும் ஏராளமான மீன்பிடிப்படகுகளும் விசைப்படகுகளும் கட்டுமரங்களும் அணிவகுத்திருந்தன! ஒரு கடற்படை விசைப்படகும் அங்கே இருந்ததை பாலுதான் முதலில் பார்த்தான்!

"என்னடா இது! நம்பவே முடியலை என்னால?" என்றான் குடுமி.

"அவ்ளோதான். நாம தப்பிச்சிட்டோம். எஸ்.எம்.எஸ். வேலை செஞ்சிடுச்சி. மீனவர் சங்கத்தலைவரோட மொபைல்லேருந்து செய்தி குடுத்ததால, அவருக்குத்தான் ஏதோ ஆபத்துன்னு மக்கள் நினைச்சிருப்பாங்க. நாம முதல்ல அவங்களுக்கு புரியவெக்கணும்" என்றபடி டில்லி, "காப்பாத்துங்க, காப்பாத்துங்க" என்று உரக்கக் குரல் கொடுக்க ஆரம்பித்தான்.

அதற்குள் தப்பிக்க ஏதாவது வழியுண்டா என்று குண்டர்கள் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடியபடி பேசிக்கொண்டிருக்க, மீனவப் படகுகள் அந்த இயந்திரப் படகை நெருங்கி, ஏழெட்டுபேர் உருட்டுக்கட்டையுடன் முதலில் அந்தப் படகுக்குள் ஏறிக் குதித்தார்கள்.

இரண்டே நிமிடங்கள். படகில் இருந்த அத்தனை குண்டர்களும் அதே கயிற்றால் கட்டப்பட்டு ஒரு மூலையில் உருட்டப்பட, பாலு, டில்லி, குடுமி மூவரும் விடுவிக்கப்பட்டு, அந்தப் படகிலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, பாதுகாப்பாகக் கடற்படைப் படகில் ஏற்றப்பட்டார்கள்.

பாலுவுக்கு ஆசுவாசம் செய்துகொள்ளக்கூட அவகாசம் இல்லை. கடற்படை அதிகாரிகளைப் பார்த்ததுமே ஓடிப்போய் விவரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

"இதுதான் சார் நடந்தது. அன்னிக்கு நாங்க ஸ்கவுட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் பன்றித்தீவுக்கு வந்தபோது, அங்கிருந்த பாழடைந்த கட்டடத்துல நாலுபேர் என்னவோ புதையல்னு பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன். என்னன்னு கண்டுபிடிக்க நினைச்சேன். என் நண்பர்கள் குடுமிநாதன், டில்லி ரெண்டுபேரும் உதவி செய்ய முன்வந்தாங்க. நாங்க மூணுபேரும் வீட்டுக்குத் தெரியாம இந்தத் தீவுக்கு நேத்து ராத்திரி புறப்பட்டு வந்தோம். டில்லிக்குக் கட்டுமரம் செலுத்தத் தெரியும்ங்கறதுதான் இதை சாத்தியமாக்கியது..." என்று ஆரம்பித்தவனை இடைமறித்த கடற்படை அதிகாரி, "அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பார்த்திங்க இந்தத் தீவுல? அதைச் சொல்லுங்க முதல்ல?" என்று ஆர்வமுடன் பரபரத்தார்.

"சொல்றேன் சார். இது ஒரு சமூகவிரோதக் கூட்டம். புதையல்னு இவங்க குறிப்பிட்டது என்ன தெரியுமா? பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள்! நம்ம நாட்டுலேருந்து திருட்டுத்தனமா அதைக் கடத்தி எடுத்துக்கிட்டு வந்து இந்தப் பன்றித்தீவுல புதர்களுக்கு இடையில் பதுக்கி வெச்சிக்கறாங்க. மாதம் ஒருமுறை அதை இங்கேருந்து ஸ்டீம் போட்ல ஏத்தி வெளிநாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறாங்க" என்றான் பாலு.

"ஓ, மை காட்!" என்ற கடற்படை அதிகாரி, "எனக்குப் புரிஞ்சிடுச்சி. கொஞ்சநாளாவே எங்களுக்கு இங்கேருந்து பெட் ரோல் கடத்தப்படுதோன்னு சந்தேகம் இருந்தது. அண்டை நாட்டுல புரட்சி நடந்துக்கிட்டு இருக்கு. அங்க உள்ள பல்வேறு குழுக்களுக்கு இங்கேருந்து எரிபொருள், உணவுப்பொருள்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து செய்தி வந்துக்கிட்டே இருந்தது. சரியா பொறிவெச்சிப் பிடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். பொடிப்பசங்க நீங்க எப்படியோ இதைக் கண்டுபிடிச்சிட்டிங்களே" என்றபடி பாலுவைத் தட்டிக்கொடுத்தார்.

கடற்படை அதிகாரிகளில் சிலர் வேறு ஒரு படகில் பாலுவை அழைத்துக்கொண்டு மீண்டும் பன்றித்தீவுக்குப் போனார்கள். அங்கே பாலு பெட் ரோல் பேரல்களைக் கண்டெடுத்த இடம், அவர்கள் பதுங்கியிருந்த பழைய பங்களா போன்ற இடங்களைத் துப்புறவாகச் சோதனையிட்ட கடற்படை அதிகாரிகள், பாலு சொல்வது அத்தனையும் உண்மையே என்பதைக் கண்டறிந்தார்.

"வெல்டன் மை பாய்ஸ்! உங்க வயசுக்கு மிக அதிகமான காரியத்தைச் செய்திருக்கிங்க. இதோட மதிப்பு உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியும் சார். வீட்டுக்குச் சொல்லாம இப்படியொரு காரியத்தை நாங்க செய்யப் புறப்பட்டது தப்புதான். ஆனா தேசவிரோத சக்திகளை இனம்கண்டு கைது செய்ய நாங்க ஒரு கருவியா இருந்திருக்கோம்ங்கற வகையில் ரொம்ப சந்தொஷமாகவும் பெருமையாகவும் இருக்கு சார்!" என்றான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors