தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 14]
- என். சொக்கன்

'இந்த ரூம் ஏன் இவ்ளோ பெரிசா இருக்கு?'

பாலாவின் கேள்வியோ, அதன் உள்நோக்கமோ, அவனுடைய உதவியாளருக்குப் புரியவே இல்லை. ஆகவே, 'மிஸ்டர். ராகவேந்தர் பயன்படுத்தின ரூம்தான் சார் இது', என்றுமட்டும் சுருக்கமாகப் பதில் சொன்னார்.

'அதுக்காக, நானும் இத்தனை பெரிய ரூம் பயன்படுத்தணும்ன்னு அவசியம் இல்லை', என்றான் பாலா, 'முதல்ல இந்த ரூமைப் பிரிச்சுச் சின்னதாக்குங்க, இதில நாலு பேர் தாராளமா உட்காரலாம்'

உதவியாளர் கொஞ்சம் தயங்கினார், 'ஸார், உங்களைப் பார்க்க யாராச்சும் கஸ்டமர்ஸ், ஆ·பீஸர்ஸ் வந்தாங்கன்னா, இந்தமாதிரி ஒரு பெரிய ரூம்ல நீங்க அவங்களைச் சந்திக்கறதுதான் மரியாதையா இருக்கும்'

'மிஸ்டர் பிரசன்னா', பாலா நட்பாகப் புன்னகைத்தபடி பேசினான், 'எப்பவோ வரப்போற சில பெரிய மனுஷங்களுக்காக, நாம இப்படி தினசரி அநாவசியமா ஆடம்பரம் பண்ணணும்-ன்னு அவசியமில்லை. வேணும்ன்னா, இப்படிப் பண்ணலாம், இந்த அறையைப் பார்வையாளர்களுக்கான விசிட்டர் ரூமா மாத்திடலாம், எனக்கு வெளியே எல்லோரோடும் டேபிள் போட்டுடுங்க'

'ஐயோ ஸார்', அவர் பதறிப்போய்க் குறுக்கிட்டார், 'ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க, நான் அந்த அர்த்தத்திலே சொல்லலை'

'நோ நோ, எனக்குக் கோபமே இல்லை பிரசன்னா', என்றான் பாலா, 'நிஜமாவே சொல்றேன், எனக்கும் மத்த ஊழியர்ங்களுக்கும் இப்படி ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறதை நான் விரும்பலை, நீங்க என் டேபிளை வெளியே மாத்திடுங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது'

அவன் சொல்வதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். பெரிய முதலாளி ராகவேந்தர் கட்டாய ஓய்வு பெற்றதிலிருந்து, எல்லாமே இங்கே தலைகீழாகிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக இந்தத் தொழிற்சாலையில் ஒரு சாதாரண வாட்ச்மேன், ப்யூன், இயந்திரத் தொழிலாளி ஓய்வு பெற்றால்கூட, அவர்களுக்குச் சிறிய அளவிலாவது பிரிவுபசார விழா நடத்தி, டீ, சமூசா, இன்னபிற வழங்கிக் கொண்டாடுவது வழக்கம். ராகவேந்தருக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. திடீரென்று ஒருநாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தார், அதன்பிறகு அவருக்கும் கம்பெனிக்கும் எதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இந்தப் புது முதலாளிகூட, முறைப்படி பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. போன செவ்வாய்க்கிழமை கொழுத்த ராகு காலத்தில் இந்த அறையில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டார், எல்லாவற்றையும் மாற்றப்போகிறேன் என்று இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டிருக்கிறார்.

குழப்பத்தோடு அந்த அறையிலிருந்து வெளியேறினார் பிரசன்னா. நடப்பதெல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கா என்று அவருக்குப் புரியவில்லை.

ராகவேந்தர் தலைமையில், நிறுவனம் அப்படியொன்றும் பெரிதாகச் சம்பாதித்துவிடவில்லைதான். ஆனால் அதேசமயம், தலையைச் சுற்றி உட்கார்ந்திருந்த பிரச்னைகள் கத்தியாக மாறி உயிரை எடுத்துவிடவும் இல்லை. ஏதோ வண்டி உருப்படியாக ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அதைத் தலைகீழாக மாற்றவேண்டிய அவசியம் என்ன என்று அவருக்குப் புரியவில்லை.

புது முதலாளி பாலாவின் சிந்தனைகள் புதுசாக இருக்கின்றன. இந்தத் துறையில் அவருக்கு எந்த முன் அனுபவமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், அவர் சொல்கிற பல விஷயங்களை ஜீரணித்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது.

முதலாவதாக, 'நான் முதலாளியே இல்லை' என்கிறார். 'எல்லாத் தொழிலாளர்களோடும் சகஜமாகப் பழக விரும்புகிறேன்' என்று சினிமாக் கதாநாயகன்போல் வசனம் பேசுகிறார். இதெல்லாம் யதார்த்தத்தில் நடக்கிற காரியமா?

இந்த விஷயத்தில் பாலாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை - எனக்குமுன்னர் இந்தக் கம்பெனி எப்படி நடத்தப்பட்டது என்பதுபற்றி நான் கவலைப்படப்போவதில்லை. இனிமேல், நான் விரும்பும்விதமாகதான் இதை நடத்துவேன். அது பலன் அளிக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து, அடுத்த கட்டத் திட்டங்களை அமைத்துக்கொள்வேன்.

வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல், நிஜமாகவே தனது அறையைப் பார்வையாளர்களைச் சந்திப்பதற்காக ஒதுக்கிவிட்டு, வெளியே எல்லோரோடும் மேஜை போட்டுக்கொண்டு அமர்ந்தான் பாலா. 'இந்த விசிட்டர் ரூம் எனக்குமட்டுமில்லை, எல்லோருக்கும்தான். உங்களைப் பார்க்கப் பழைய நண்பர்களோ, உறவினர்களோ வந்தால், அவர்களை இங்கே வைத்துச் சந்திக்கலாம்', என்றான், குளுகுளு வசதி, நவீன ஓவியங்கள், தினசரிப் புதுப் பூக்கள் என்று அந்த அறைக்குச் சகல சவுகர்யங்களும் செய்து கொடுத்தான்.

ஆரம்பத்தில் பாலாதவிர, வேறு யாரும் அந்த அறையைப் பயன்படுத்தத் துணியவில்லை. மேலிடம் ஏதோ சதி செய்து, தங்களைக் கவிழ்க்கப் பார்க்கிறது என்று பெரும்பாலான ஊழியர்களுக்குச் சந்தேகம். ஆகவே, இல்லாதவலையில் சிக்குவதைத் தவிர்க்க முயன்றார்கள்.

இதைப் புரிந்துகொண்டபோது, பாலாவுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. நான் என்னதான் முற்போக்குப் பார்வையோடு சிந்தித்தாலும், சுற்றியிருப்பவர்கள் அதன் நோக்கங்களைப் பிடிவாதமாகச் சந்தேகித்தால், பிறகு என்னதான் செய்யமுடியும்?

தனது இந்த எரிச்சலை அவன் பகிர்ந்துகொண்டபோது, இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபொல் சிரித்தான் சுந்தர், 'பல தலைமுறையா, முதலாளிங்களுக்கு பயந்து, விலகி இருந்தே பழகினவங்கப்பா இவங்க, அந்தச் சிந்தனையெல்லாம் ஒரு ராத்திரியில மாறிடும்ன்னு நீ எதிர்பார்க்கிறது தப்பு'

'அப்ப என்னதான் செய்யறது?'

'நாம வேற ஜாதி, மேலிடம் வேற ஜாதி-ங்கற அந்த எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த இடைவெளி குறைஞ்சாதான், நெருக்கம் அதிகமாகும்', என்றான் சுந்தர்.

அந்த வெள்ளிக்கிழமை, தனது ·பேக்டரியில் வேலை செய்கிற அத்தனை பேரையும் தொழிற்சாலை வளாகத்தில் திரட்டிப் பேசினான் பாலா, 'நான் இங்கே சில மாற்றங்கள் செய்ய விரும்பறேன். அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு தேவை'

பெரும்பாலானோருக்கு, அவன் என்ன பேசுகிறான் என்பதே புரியவில்லை. காலம்காலமாக, உத்தரவுகளுக்குப் பணிந்தே பழகிவிட்டவர்கள், இப்போதும் அவனிடம் கட்டளைகளைதான் எதிர்பார்த்தார்கள், கருத்துக் கேட்கிற சிநேகித பாவத்தை அல்ல.

பல நிமிடங்களுக்கு நீடித்த சங்கடமான மௌனத்துக்குப்பிறகு, கடைசியில் ஒருவர் முன்வரிசைக்கு நகர்ந்து வந்தார், 'நீங்க என்ன செய்யணும்ன்னு நினைக்கறீங்க சார்?', என்றார் தைரியமான குரலில்.

'முதல்ல, இந்த சார், மோர்-ல்லாம் வேண்டாம்', என்றான் பாலா, 'என்னை நீங்க பாலா-ன்னே கூப்பிடலாம், நான் உங்க எல்லோரையும்விட சின்னப் பையன்'

இந்தச் சாதாரண விஷயம்கூட, அங்கிருந்த பலருக்கு திகைப்பை உண்டாக்குவது தெரிந்தது. என்னதான் சின்ன வயதாக இருந்தாலும், முதலாளியைப்போல் பெயர் சொல்லிக் கூப்பிடுவதாவது?

'நான் முதலாளி, நீ தொழிலாளி-ங்கற வித்தியாசத்தை நான் முதல்ல உடைக்க விரும்பறேன்', என்றான் பாலா, 'அடிப்படையில நாம எல்லோருமே தொழிலாளிங்கதான், இந்தக் கம்பெனியோட வளர்ச்சிக்காக ஒருத்தர் இயந்திரம் ஓட்டறார், இன்னொருத்தர் பணம் பட்டுவாடா பண்றார், இன்னொருத்தர் கஸ்டமர்ஸோட பேசி அவங்க தேவைகளைப் பூர்த்தி பண்றார், இன்னொருத்தர் பணம் போடறார், இப்படி ஒவ்வொருத்தரும் செய்யற வேலைதான் வித்தியாசப்படுதேதவிர, யாரும் உசத்தி - தாழ்த்தி இல்லை'

'இதெல்லாம் பேசறதுக்கு நல்லாதான் இருக்கும் சார்', என்றபடி முன்னே வந்த கார்த்திகேயனை பாலாவுக்கு அடையாளம் தெரிந்தது, 'யதார்த்தத்தில அதெல்லாம் சரிப்படாது, நீங்க சம்பளம் கொடுக்கறவங்க, நாங்க கை நீட்டிக் காசு வாங்கறவங்க, எவ்ளோ கஷ்டப்பட்டாலும், அந்த வித்தியாசத்தை அழிச்சுடமுடியாது'

நீங்க சொல்றது சரியாவே இருக்கலாம். ஆனா, அதை மாத்தறதுக்கு முயற்சி செய்யறது தப்பில்லையே', முடிந்தவரை தன்னுடைய குரலை உயர்த்தாமல் பேச முயன்றான் பாலா, 'உங்களுக்கே நல்லாத் தெரியும், நான் இந்தக் கம்பெனிக்கு ரொம்பப் புதுசு, இங்கே நடக்கற பல விஷயங்கள் எனக்குச் சரியாத் தெரியாது. ஆகவே, இதைத் திறமையா நிர்வகிக்கறதுக்கு எனக்கு உங்க உதவி தேவை'

இப்போதும் தொழிலாளர்களின் முகபாவத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. இந்தப் புதுப் பையன் ஏதோ ஒரு வலைக்குள் நம்மைச் சிக்கவைக்க முயல்கிறான் என்றுதான் அவர்களுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.

'எனக்கு நிறையப் பொறுமை வேண்டும்', என்றபடி பெருமூச்சுடன் தன்னைத் திரட்டிக்கொண்டான் பாலா. இவர்களுடைய வெற்று முகங்களைப்பற்றிக் கவலைப்படாமல், நான் தொடர்ந்து என்னுடைய திட்டங்களைச் செயல்படுத்தியாகவேண்டும், வேறு வழியே இல்லை.

கூட்டத்தில் எல்லோரும் இப்போது தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். அந்தச் சலசலப்பை மிஞ்சிப் பேசுவது பாலாவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது, '·ப்ரெண்ட்ஸ்', என்று உரத்த குரலில் அவன் நான்கைந்து முறை கத்தியபிறகுதான், கொஞ்சமேனும் அமைதி சாத்தியப்பட்டது.

'தயவுசெஞ்சு என்மேல சந்தேகப்படாதீங்க. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நிஜமாவே இங்கே சில நல்ல மாற்றங்களைக் கொண்டுவரணும்-ன்னு நினைக்கறேன்', என்றான் பாலா, 'என்மேல நம்பிக்கை உள்ளவங்க நாலே நாலு பேர் இருந்தாப் போதும், அவங்ககிட்டே இதுபத்தி விரிவாப் பேச விரும்பறேன்'

இந்த மாற்றங்களில் நேரடிப் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் கைகளை உயர்த்தலாம் என்று அறிவித்தான் பாலா. சில நிமிடங்களுக்குப்பிறகு, மூன்று கைகள்மட்டும் உயர்ந்தன.

முக்கால் கிணறுதான். ஆனாலும், பாலாவின் முகத்தில் முதன்முறையாக ஒரு நிம்மதிச் சிரிப்பு பரவியது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors