தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 15]
- என். சொக்கன்

'இன்னிக்கு ஈவினிங் நாம இந்த ·பேக்டரியை நிரந்தரமா மூடிடப்போறோம்', என்று தொடங்கினான் பாலா.

அந்த அறையில் உட்கார்ந்திருந்த யார் முகத்திலும் ஈயாடவில்லை. தொழிற்சாலையில் என்னென்னவோ மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறேன் பேர்வழி என்று கூட்டம் சேர்த்து, இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறானே இந்த ஆள் என்கிற திகைப்போடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

'பயப்படாதீங்க, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்', என்றான் பாலா, 'ஒருவேளை, அப்படி நம்ம ·பேக்டரிக்கு ஒரு முடிவு வந்துட்டா, நீங்க என்ன செய்வீங்க?'

இப்போதும் அவர்களில் யாரும் பேசத் தயாராக இல்லை. என்ன நோக்கத்தோடு இவன் இப்படிக் கேட்கிறான் என்று தெரிந்துகொள்ளாமல் வாயைத் திறந்தால், ஆபத்தை விலை கொடுத்து வாங்கினமாதிரி ஆகிவிடும் என்று மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தார்கள்.

'சரி, இந்தக் கேள்வியை வேறமாதிரி கேட்கறேன்', என்றான் பாலா, 'ஒருவேளை, நாம இந்த ·பேக்டரியை மூடறதா முடிவெடுத்துட்டா, அந்தக் கடைசி நாள்ல, வொர்க்கர்ஸ் எப்படி நடத்துக்குவாங்க?'

'எல்லோருக்கும் ரொம்ப வருத்தமா இருக்கும்', என்றார் கார்த்திகேயன், 'அடுத்து எங்கே, எப்போ, எப்படிப்பட்ட வேலை கிடைக்குமோ-ன்னு எல்லோரும் எதிர்காலத்தை நினைச்சு பயப்படுவாங்க'

'நான் அவங்களோட உணர்ச்சிகளைப்பத்திக் கேட்கலை கார்த்திகேயன்', வெண்பலகையில், 'கடைசி நாள்' என்று பெரிதாக எழுதி அடிக்கோடிட்டான் பாலா, 'இன்னியோட இந்த ·பேக்டரியின் வாழ்நாள் முடிஞ்சது, இனிமே நமக்கு இங்கே வேலை தெரியலைன்னு தெரிஞ்சா, அதை அவங்க எப்படி எதிர்கொள்வாங்க, அந்தக் கடைசி நாள்ல அவங்க என்னென்ன செய்வாங்க, என்னென்ன செய்யமாட்டாங்க-ன்னு கொஞ்சம் ஊகிச்சுச் சொல்லுங்களேன்'

'நிச்சயமாக அவங்க யாருக்கும் வேலை செய்யறதுக்கே மனசு வராது', என்றார் கார்த்திகேயன், 'அடுத்து என்னன்னு ஒண்ணும் புரியாம, அதிர்ச்சியில எல்லோரும் அப்படியே உறைஞ்சுபோயிடுவாங்கன்னு நினைக்கறேன்'

'சரி, இப்போ இன்னொரு கற்பனைக் கேள்வி', என்ற பாலா சற்றே தயங்கினான். பிறகு, 'உங்களுக்கு இன்னும் பத்து நாள்தான் ஆயுள்-ன்னு ஒரு டாக்டர் சொல்லிடறார், அப்போ நீங்க என்ன செய்வீங்க?'

கார்த்திகேயன் பெரிதாகச் சிரித்து, 'இதுவரைக்கும் நான் என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஆசைப்பட்டேனோ, அதையெல்லாம் அந்தப் பத்து நாளுக்குள்ள செஞ்சு முடிச்சுடுவேன்', என்றார்.

பாலா இந்த பதிலைதான் எதிர்பார்த்திருந்தான் என்பது, அவனுடைய குறும்புச் சிரிப்பில் தெரிந்தது, 'அதாவது, வாழ்க்கையோட கடைசி நாள்களை, நல்லா அனுபவிச்சு வாழுவீங்க, ஆனா, ·பேக்டரியோட கடைசி நாள்லமட்டும் எதுவும் செய்யாம, சும்மா உட்கார்ந்திருப்பீங்க, அது ஏன் சார் அப்படி?'

சட்டென்று அந்த அறையில் மௌனம் சூழ்ந்துகொண்டிருந்தது. பாலா, கார்த்திகேயன்தவிர, அங்கே அமர்ந்திருந்த மற்ற இருவரும் சங்கடமாகத் தங்களுக்குள் பார்த்துக்கொண்டார்கள்.

'மிஸ்டர் கார்த்திகேயன், உங்களை வருத்தப்படவைக்கணும்-ங்கறதுக்காக நான் அப்படிக் கேட்கலை, இந்தக் கேள்வி, நம்ம எல்லோருக்கும் பொதுவானது', என்றான் பாலா, 'வேலை-ங்கறது நம்ம வாழ்க்கையோட ஒரு பகுதி. ஆனா, எல்லோருமே அதை ஒரு சுமையாதான் நினைக்கறோம், தினமும் காலையில, ஆ·பீஸ் வாசல்லயோ, ·பேக்டரி வாசல்லயோ நம்மோட ஆர்வமும் உற்சாகமும் தவறி விழுந்துடுது, சாயந்திரம் வீட்டுக்குப் போகும்போதுதான் அதை மறுபடி எடுத்து மாட்டிக்கறோம்'

இப்போது, வெண்பலகையில் இருந்த 'கடைசி நாள்' வாசகத்தை அழித்துவிட்டு, 'இந்த நாள்' என்று எழுதினான் பாலா, 'ஒவ்வொரு நாளும், நம்ம ·பேக்டரியில இருக்கிற ஒவ்வொருத்தரும், தங்களோட வேலையை வெறும் கடமையா நினைக்காம, நிஜமாவே உற்சாகத்தோட, ஆர்வத்தோட அதில ஈடுபட்டா, எப்படி இருக்கும்?'

அந்தக் காட்சியைக் கற்பனை செய்வதுபோல், எல்லோரும் சில விநாடிகள் மௌனம் காத்தார்கள். பிறகு, கார்த்திகேயன்தான் முதலில் பேசினார், 'இதில நாம தொழிலாளர்களைமட்டும் குத்தம் சொல்றது சரியில்லை சார்'

'தயவுசெஞ்சு இந்த சார், மோர்-ல்லாம் வேண்டாம், என்னை பாலா-ன்னே கூப்பிடுங்க', என்றான் பாலா, 'நான் யாரையும் குத்தம் சொல்லலை, நாம எல்லோருமே, வேலையை ஒரு சுமையா நினைக்காம ஈடுபட்டா, நம்ம ·பேக்டரி இன்னும் பல படிகள் முன்னேறமுடியும், சரியா?'

'ஷ்யூர்', இதுவரை பேசாமல் அமர்ந்திருந்த மனோகரன், முதன்முறையாக வாய் திறந்தார், 'நீங்க சொல்ற கற்பனை நல்லாதான் இருக்கு. ஆனா, அதை யதார்த்தத்தில செயல்படுத்தறது அத்தனை சுலபம்-ன்னு தோணலை', என்றார், 'தொழிலாளர்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாளைக்கு இத்தனை பீஸ் முடிக்கணும்-ங்கறதுதான் நோக்கம், அதையே திரும்பத் திரும்பச் செஞ்சுகிட்டிருக்கிறதில என்ன பெரிய உற்சாகத்தைப் பார்த்துடமுடியும்?'

'நிச்சயமா முடியும்', என்றான் பாலா, 'எறும்புகளைப் பார்த்திருக்கீங்கதானே? நாம வேணாம்-ன்னு தூக்கிப் போட்ட, அல்லது கவனக்குறைவா கீழே சிந்தின சமாசாரங்களையெல்லாம், கனகார்யமா சுமந்துகிட்டு எங்கயோ போய் ஒளிச்சுவைக்குதே, அதுங்க எப்பவாவது ஓய்வு எடுத்துப் பார்த்திருக்கோமா? ஈவினிங் அஞ்சு மணியானதும் வேலை முடிஞ்சுபோச்சு-ன்னு வீட்டுக்குப் போய் மெகாசீரியல் பார்க்குதா எறும்பெல்லாம்? நாள்முழுக்க உழைக்கறதுக்கு, அதுவும் இப்படி ஒரேமாதிரியான அல்பத்தனமான வேலையைத் திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டிருக்கிறதுக்கு அதுங்களால எப்படி முடியுது?'

'நமக்குதான் சார் அது அல்பத்தனமான வேலை', என்றார் கார்த்திகேயன், 'எறும்புகளைப்பொறுத்தவரை, அதுதான் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான வேலை, அதைச் செய்யலைன்னா, நமக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காம போயிடுமோ-ங்கற பயம்தான் அதுங்களை இப்படிச் சுறுசுறுப்பா வெச்சிருக்கு'

'எக்ஸாக்ட்லி', என்ற பாலா, வெண்பலகையில், 'முக்கியமான வேலை' என்று எழுதினான், 'நாம செய்யறது முக்கியமான வேலை-ன்னு புரிஞ்சுட்டா, அதுக்கப்புறம் அந்த வேலையைச் செய்யறதில சோர்வு வராது, உற்சாகம் தானா வரும்'

'ஆனா, இங்கே நாம செய்யறதெல்லாம் முக்கியமான வேலையா?', என்றார் மனோகரன், 'எறும்புகளுக்குச் சாப்பாடு சேகரிக்கறது முக்கியம், அதுவும் நாம வால்வ் செய்யறதும் ஒண்ணாயிடுமா?'

'உலகத்தில எல்லாமே முக்கியமான வேலைதான்', என்று சிரித்தான் பாலா, 'நான் ஏதோ ஒரு கியர் தயாரிக்கறேன்னு நினைக்கறதுக்குபதிலா, நான் இதைச் செய்யாட்டி, ஒரு முக்கியமான இயந்திரம் இயங்காம நின்னுபோயிடும், அதனால ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவாங்க-ன்னு யோசிச்சுப்பாருங்க, அதோட முக்கியத்துவம் புரியும்'

'டிவியில ஒரு விளம்பரம் பார்த்திருப்பீங்க, ஒரு கர்ப்பிணிப் பொண்ணு, கையில பால் தம்ளரோட சோ·பாவிலே உட்கார வர்றாங்க, ஆனா அந்த சோ·பாவோட கால் பகுதி லேசா உடைஞ்சிருக்கு', வெண்பலகையில் அந்தக் காட்சியை சுமாரான ஒரு கோட்டோவியமாக வரைந்து காண்பித்தான் பாலா.

'அந்த விளம்பரத்தோட நோக்கம் வேற. ஆனா, நான் ஒரு ·பர்னிச்சர் தயாரிக்கிறவனா இருந்தா, அந்த விளம்பரம் என்னை ரொம்பவே பயமுறுத்திடும், அதுக்கப்புறம், வெறுமனே மரத்தையும் உலோகத்தையும் வெச்சு ஏதோ செய்யறோம்-ன்னு அலட்சியமா இருக்கமாட்டேன், நான் தயாரிக்கிற நாற்காலியையோ, சோ·பாவையோ ஏகப்பட்ட மக்கள் பயன்படுத்தப்போறாங்க, அவங்களுக்கு சவுகர்யம் தரக்கூடிய, அவங்க ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒரு முக்கியமான வேலையை நான் செஞ்சுகிட்டிருக்கேன்-னு ரொம்ப ரொம்ப கவனமா இருப்பேன்'

'அந்தமாதிரி, ஒவ்வொரு வேலையும் முக்கியமானதுதான். முக்கியமில்லாத வேலைகள், காலப்போக்கில தானா உதிர்ந்து அழிஞ்சுடும்', என்றான் பாலா, 'நம்ம தொழிலாளர்கள்கிட்டே, நீங்க வெறுமனே இயந்திர பாகங்களைத் தயாரிக்கிறவங்க இல்லை, சமூகத்துக்கு உங்க பங்களிப்பு ரொம்ப முக்கியமானதுன்னு நாம சொல்லித்தரணும்'

'இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?', கார்த்திகேயன் குரலில் லேசான ஏமாற்றம் தெரிந்தது, 'இது என்னவோ சின்னப் பிள்ளைங்களுக்குப் பாடம் நடத்தறமாதிரி இருக்கு'

'நீங்க நினைக்கிற அளவுக்கு, இது சாதாரணமான விஷயம் இல்லை கார்த்திகேயன்', என்றான் பாலா, 'நாம இன்னும் நிறைய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்போறோம், ஆனா, அதுக்கெல்லாம் இதுதான் அடித்தளம், வேலைங்கறது வெறுமனே காசு சம்பாதிக்கறதுக்கான ஒரு வாய்ப்பு-ன்னு நினைக்காம, அதை ஒரு முக்கியமான கடமையா, சமுதாயத்துக்கு நம்மோட பங்களிப்பா நினைச்சுச் செய்யறவங்களாலமட்டும்தான், நிறைய சாதிக்கமுடியும்'

கார்த்திகேயனும் மனோகரனும் புரிந்ததுபோல் தலையாட்டினார்கள். இன்னும் மௌனமாகவே அமர்ந்திருந்த இன்னொருவரிடம், 'நீங்க என்ன நினைக்கறீங்க மிஸ்டர் சுந்தரம்?', என்று விசாரித்தான் பாலா.

'இப்போ, என்னோட முக்கியமான வேலை என்ன-ன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்', என்று புன்னகைத்தார் அவர், 'நம்ம தொழிலாளர்கள் கொஞ்சம் ரெஸ்ட்லெஸா இருக்கறது உண்மைதான், ஆனா, இந்தமாதிரி தத்துவார்த்தமாப் பேசறதெல்லாம் அவங்ககிட்டே எந்த அளவு பலன் கொடுக்கும்-ன்னு எனக்குத் தெரியலை'

'இப்பவே பலனையெல்லாம் எதிர்பார்க்கவேண்டாமே', என்றான் பாலா, 'இதெல்லாம் நான் ஏதோ புதுசா யோசிச்ச விஷயம் இல்லை, சில புத்தகங்கள்-ல படிச்சதுதான் ** (பெட்டி செய்தி), இதைச் செயல்படுத்தி வெற்றியடைஞ்சவங்க நிறைய இருக்காங்க, நாமளும் முயற்சி செஞ்சு பார்ப்போமே!'

'இதை எங்கே எப்படி ஆரம்பிக்கறது?'

'நீங்க மூணு பேருமே, உங்களோட டிபார்ட்மென்ட்கள்ல இதைப்பத்திப் பேசணும், தனியா கூட்டம் அறிவிக்கணும்-ன்னெல்லாம் அவசியம் இல்லை, இயல்பா, தொழிலாளர்களோட கலந்து, வாழைப்பழத்தில ஊசி ஏத்தறமாதிரி இதைச் சொல்லணும், மனோநிலை மாற்றம்ங்கறது சீக்கிரத்தில வந்துடாது, நிறைய பொறுமை வேணும், நிதானமா திரும்பத் திரும்ப சொன்னாதான், அவங்க கொஞ்சமாவது யோசிக்க ஆரம்பிப்பாங்க'

'சரி, அதுக்கப்புறம்?'

'இப்பவே அவசரப்பட்டா எப்படி? கொஞ்சம் பொறுங்க, ஒவ்வொண்ணா பேசுவோம், செய்வோம்', பாலாவின் சிரிப்பில் குறும்போடு, நிறைய உற்சாகமும் ஆர்வமும் கலந்திருந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors