தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 17]
- என். சொக்கன்

'உங்க வேலை சட்டுன்னு முடியணும்ன்னா, பத்தாயிரம் ரூபாய் எனக்குத் தனியா கொடுத்துடணும் மேடம்'

ப்ரியாவுக்கு மனசே ஆறவில்லை. எப்படிக் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் இதுபோல் நேரடியாகக் கேட்கமுடிகிறது? லஞ்சமாக வாங்கிச் சேர்க்கிற பணம், உடம்பில் ஒட்டுமா? அதைத் தொடும்போதெல்லாம் நெஞ்சு சுடாதோ?

'கமான் ப்ரியா, உன்னோட சிந்தனையெல்லாம் நாலு நூற்றாண்டு பின்னாலே இருக்கு', என்றாள் சுமலதா, 'இப்போல்லாம் பணம் சேர்க்கிறது ஒண்ணுதான் நோக்கம், அது நல்ல வழியா, கெட்ட வழியாங்கறதெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுச்சு'

'என்னை இப்போ என்ன பண்ணச் சொல்றே சுமி?'

'அவன் கேட்ட காசைக் கொடுத்துடு, அவ்ளோதான், வேற சாய்ஸே இல்லை', லேசாகப் புன்னகைத்தபடி சொன்னாள் அவள், 'வாங்கற சம்பளத்துக்கு விசுவாசமா இல்லாதவங்ககூட, லஞ்சம் கொடுத்தவங்களுக்கு உண்மையா இருப்பாங்க, நீ வேணும்ன்னா பாரேன், கச்சிதமா வேலையை ரெண்டே நாள்ல முடிச்சுக் கொடுத்துடுவான் அவன்'

சுமி சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ஆனால் ப்ரியாவுக்குதான், இந்த விஷயத்தை எப்படி மேலிடத்தில் சொல்வது என்று தெரியவில்லை.

பெரிய கம்பெனி, ஆர்டரும் பெரியதுதான். அதுமட்டும் கிடைத்துவிட்டால், வருடத்துக்குப் பல லட்ச ரூபாய் லாபம் நிச்சயம். அதோடு ஒப்பிடுகையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் என்பது பெரிய விஷயம் இல்லைதான்.

ஆனால் அதற்காக, இன்னாருக்கு இவ்வளவு லஞ்சம் தரவேண்டும் என்று எப்படி இன்னொருவரிடம் போய்ச் சொல்லமுடியும்? என்னைத் தப்பாக நினைக்கமாட்டார்களா? இந்த அசிங்கத்தைப்போய் எந்தக் கணக்கில் எழுதுவார்கள்?

'நீ இந்த வேலைக்குப் புதுசு ப்ரியா, அதான் இப்படிக் கண்டபடி யோசிக்கறே', என்றாள் சுமி, 'இதெல்லாம் பிஸினஸ்ல சர்வ சாதாரணம், நீ விஷயத்தைச் சொல்லிட்டா போதும், எந்தக் கணக்கை எப்படி எழுதணும்-ங்கறதையெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, நம்ம வருஷாந்திர பட்ஜெட்ல இந்தமாதிரி சமாசாரங்களுக்காக 'மற்ற செலவுகள்'ன்னு தனி ஒதுக்கீடே உண்டு'

எதையாவது சொல்லிவிட்டு, கடைசியில் கண்ணடிப்பவர்களை ப்ரியாவால் எப்போதும் நம்பமுடிந்ததில்லை. சுமி நிஜமாகதான் சொல்கிறார்களா, அல்லது வேண்டுமென்றே தன்னை மாட்டிவிடப்பார்க்கிறாளா என்று அவளால் உறுதியாக முடிவெடுக்கமுடியவில்லை.

'நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமா மிஸ்?', குரல் கேட்டு நிமிர்ந்த ப்ரியா, திடுக்கென்று எழுந்துகொண்டாள். புது முதலாளி. என்றைக்கோ ஊழியர் பொது மீட்டிங்கில் வெகுதூரத்திலிருந்து பார்த்தது. இப்போது நேரில், அருகில் இன்னும் வசீகரமாகத் தெரிந்தான். ம்ஹ¥ம், தெரிந்தார்.

'உட்காருங்க ப்ளீஸ், மரியாதையெல்லாம் மனசில இருந்தாப் போதும்', என்றான் பாலா, 'எதேச்சையா இந்தப் பக்கம் வந்தேன், நீங்க பேசிகிட்டிருந்தது காதில விழுந்தது, ஒட்டுக்கேட்டதுக்கு ஸாரி', என்று சிரித்தான்.

'ஸாரி ஸார், நத்திங் சீரியஸ்' என்று பேச முயன்றாள் சுமலதா, அவளுடைய சமாதானத்தைப் பாதியில் வெட்டி, 'இதையெல்லாம் நாம சீரியஸா நினைக்கறதில்லைங்கறதுதாங்க உண்மையிலேயே சீரியஸான விஷயம்', என்றான் பாலா.

சுமி சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள். அவளுடைய மூக்கு உடைபட்டது ப்ரியாவுக்கு மிகத் திருப்தியாக இருந்தது.

'இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை?', என்றான் பாலா, 'இந்த ஆர்டர் வேணும்ன்னா லஞ்சம் கொடுக்கணும், அது சரியா, தப்பா-ன்னு முடிவெடுக்கமுடியலை, ரைட்?'

'ஆமாம் சார்', என்றாள் ப்ரியா, 'எல்லாரும் இதில தப்பில்லைங்கறாங்க, பத்தாயிரம் ரூபாய் கம்பெனி காசுதான், லாபமும் கம்பெனிக்குதான். இதில என்னோட நேரடி சம்பந்தம்ன்னு எதுவுமே இல்லை. ஆனாலும், மனசு குறுகுறுப்பா இருக்கு'

'இந்தமாதிரி சமயத்தில முடிவெடுக்கறதுக்கு, ஒரு சின்ன டெக்னிக் இருக்கு', என்றான் பாலா, அவள் அருகில் இருந்த காலி நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவன், 'நீங்களும் உட்காருங்க, ப்ளீஸ்', என்றான்.

'பரவாயில்லை சார்', என்றாள் ப்ரியா.

'வாத்தியார் நிக்கணும், ஸ்டூடன்ட் உட்காரணும், இப்ப நீங்க வாத்தியாரா, நான் வாத்தியாரா?', என்று அவன் கேட்டதற்கு, சட்டென்று சிரித்துவிட்டாள் அவள். சற்றே தயக்கத்துடன் அமர்ந்தாள்.

மேஜைமேலிருந்த ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டான் பாலா, 'இந்த மெத்தட்க்கு PMI-ன்னு பேரு', என்றபடி அந்தத் தாளின் மத்தியில், இரு கோடுகள் வரைந்து, அதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டான், 'PMI-ன்னா, ப்ளஸ் (Plus), மைனஸ் (Minus), இன்ட்ரஸ்டிங் (Interesting)'

காகிதத்தின் இடது ஓரத்தில், 'ப்ளஸ்' என்று எழுதி அடிக்கோடிட்டான், 'ப்ளஸ்-ன்னா, இப்போ நீங்க எடுத்திருக்கிற முடிவில என்னென்ன ப்ளஸ் பாயின்ட்ஸ்ன்னு எழுதணும், அதாவது, இந்த ஆளுக்கு லஞ்சம் தரலாம்-ன்னு நீங்க முடிவெடுத்தா, அதனால என்னென்ன நன்மைகள் நடக்கக்கூடும்-ன்னு லிஸ்ட் போட்டு, அது ஒவ்வொண்ணுக்கும் ஸ்கோர் போடணும்'

'ஸ்கோர்ன்னா?', ப்ரியாவுக்கும் இப்போது லேசாக ஆர்வம் தட்டியிருந்தது, 'அந்த நன்மை நமக்கு எந்த அளவு முக்கியமானது-ன்னு மார்க் போடறோம், இல்லையா?'

'எக்ஸாக்ட்லி', என்றான் பாலா, 'சில நன்மைகள் ரொம்ப முக்கியமா இருக்கும், அதுக்கு 10 ஸ்கோர் தரலாம், சிலது சாதாரண நன்மைகளா இருக்கலாம், அதுக்கெல்லாம் 1 அல்லது 2 ஸ்கோர் கொடுத்தாப் போதும். இதை ஒழுங்கா லிஸ்ட் போட்டு எழுதிவெச்சுக்கறது முக்கியம்'

'சரி, இப்போ இந்த ஆளுக்கு அவன் கேட்கிற லஞ்சத்தைக் கொடுத்துத் தொலைச்சுடறோம்-ன்னு வெச்சுக்கலாம். அதில என்னென்ன ப்ளஸ்?'

'இந்த ஆர்டர் நமக்கே கிடைக்கும், அதுவும் உடனடியா', என்றாள் ப்ரியா, 'அதுக்கு ஸ்கோர் 10'

'அடுத்து, லஞ்சம் வாங்கினவன் நமக்கே விசுவாசமா இருப்பான், நாளைக்கே இன்னொரு ஆர்டர் வந்தா, நம்மைதான் முதல்ல கூப்பிடுவான்', என்றான் பாலா, 'அதுக்கு ஒரு 5 ஸ்கோர் தரலாமா?'

இப்படியே கொஞ்சம்கொஞ்சமாக யோசித்து, அவர்கள் ஐந்து 'ப்ளஸ்'கள் எழுதினார்கள். அவற்றின் மொத்த மதிப்பெண் 40 வந்தது.

'அடுத்து மைனஸ்', என்றபடி காகிதத்தின் மையப் பகுதிக்குச் சென்றான் பாலா, 'இந்த ஆளுக்கு லஞ்சம் கொடுக்கறதால என்ன தீமைகள்? அதுக்கு என்ன ஸ்கோர்?'

'முதல்ல, லஞ்சம் கொடுக்கறது சட்டப்படி தப்பு, மைனஸ் பத்து ஸ்கோர்', என்றாள் ப்ரியா, 'அடுத்து, இப்போ பத்தாயிரம் கேட்கிற இவன், நாளைக்கு இருபதாயிரம், முப்பதாயிரம்ன்னு அதிகம் எதிர்பார்ப்பான், அதுக்கு ஒரு மைனஸ் ஆறு ஸ்கோர் தரலாம்'

'விஷயத்தை சூப்பராப் புரிஞ்சுகிட்டீங்க', என்று உற்சாகப்படுத்தினான் பாலா, 'மேலே போங்க'

மைனஸ் பட்டியல் நீளமாகிக்கொண்டே போனது, கடைசியில் கூட்டிப் பார்க்கும்போது, மைனஸ் ஸ்கோர் அறுபத்தைந்தைத் தாண்டியிருந்தது.

'கடைசியா மிச்சமிருக்கிறது, இன்டரஸ்டிங்', என்றபடி காகிதத்தின் வலது ஓரத்துக்குச் சென்றான் பாலா, 'இங்கே, வருங்கால ஊகங்களை எழுதணும், அது ப்ளஸ்ஸாவும் இருக்கலாம், மைனஸாவும் இருக்கலாம்'

'புரியலை', என்றாள் ப்ரியா, 'ஊகம்ன்னா? இந்த லஞ்ச விஷயம் வெளியே தெரிஞ்சு, என்னோட வேலை போயிடலாம்-ங்கறமாதிரி சொல்றீங்களா?'

'அதுவும் ஊகம்தான். கெட்ட ஊகம். இதேமாதிரி நல்ல ஊகங்களும் உண்டு', என்றான் பாலா, 'நீங்க இப்போ லஞ்சம் கொடுத்ததால, இந்த ஆர்டர் உடனடியாக் கிடைச்சு கம்பெனிக்கு நிறைய லாபம் வரலாம். அதனால உங்களுக்கு போனஸ் கிடைக்கலாம்'

'அப்படி ஒரு போனஸ் எனக்கு வேண்டாம்' ப்ரியாவின் குரலில் கோபம் தென்பட்டது.

'ரிலாக்ஸ் மேடம், அதுவும் ஒரு ஊகம்தானே, அதுக்காகச் சொன்னேன்', என்று சிரித்தான் பாலா. அடுத்து அவர்கள் 'இன்டரஸ்டிங்' விஷயங்களை ஒவ்வொன்றாக எழுதி ஸ்கோர் போடத் தொடங்கினார்கள் - நல்ல ஊகங்களுக்கு ப்ளஸ், கெட்ட ஊகங்களுக்கு மைனஸ். மொத்தமாகக் கூட்டிப் பார்த்தபோது, மைனஸ் 12 வந்தது.

கடைசியாக மூன்று பகுதிகளின் ஸ்கோர்களையும் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதிக் கூட்டினான் பாலா, 'ப்ளஸ் (+40), மைனஸ் (-65), இன்ட்ரஸ்டிங் (-12), ஸோ, நம்மோட மொத்த ஸ்கோர், 40 - 65 - 12 = மைனஸ் முப்பத்தேழு'

'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், இந்த ஆளுக்கு லஞ்சம் கொடுப்பதால் ப்ளஸ்ஸைவிட, மைனஸ்தான் அதிகம்', நாடகத்தனமான குரலில் அறிவித்தான் பாலா, 'அவ்ளோதாங்க PMI'

'ரொம்ப தேங்க்ஸ் ஸார்', என்றாள் ப்ரியா, 'இந்த PMI ஆ·பீஸ்க்குமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலும் முடிவெடுக்கப் பயன்படும்போலத் தோணுது'

'கண்டிப்பா', என்றான் பாலா, 'நீங்களே நாளைக்கு யாரையாச்சும் லவ் பண்ணணும்ன்னு நினைச்சா, அது சரியா தப்பான்னுகூட PMI போட்டுப் பார்த்து முடிவெடுக்கலாம்', அவன் குறும்புப் புன்னகையோடு சொன்னபோது, ப்ரியாவின் மனத்துள், ஒரு ப்ளஸ் பத்து விழுந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors