தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 18]
- என். சொக்கன்

'சிலந்திக்கும், நட்சத்திர மீனுக்கும் என்ன வித்தியாசம்?', என்று தொடங்கினான் பாலா.

அங்கிருந்தவர்கள் எல்லோரும், இது என்னடா அவஸ்தை என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள். லேசான சலசலப்புகள் எழுந்ததேதவிர, யாரும் பாலாவின் கேள்விக்கு பதில் சொல்ல முன்வரவில்லை.

திங்கள்கிழமை காலையில் ஆ·பீஸிலும் ·பாக்டரியிலும் ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன. இதற்கு நடுவே ஜுவாலஜி பாடம் படிக்கதானா நேரம் இருக்கிறது? சிலந்தியும் நட்சத்திர மீனும் நாசமாகப் போகட்டும், ஆளை விடுங்கள் ஸ்வாமி!

அவர்களுடைய மனத்தினுள் ஓடும் சிந்தனைகளைப் படித்தவன்போல், லேசாகச் சிரித்தான் பாலா. வெண்பலகையில் குத்துமதிப்பாக ஒரு நட்சத்திர மீன் வரைந்தான், அதற்கு நடுவே பெரிதாக ஒரு கோடு கிழித்துவிட்டு, 'நட்சத்திர மீனை நீங்க எங்கே வெட்டினாலும், அது சாகாது, ரெண்டு நட்சத்திர மீனா மாறிடும்', என்றான்.

எல்லோரும் அவனையே ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெட்டினால் சாகாதா? இது என்ன வினோதம்? மனிதர்களுக்கும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு உயிர்ச் சேதங்களைத் தவிர்க்கலாம்!

'ஒரு நட்சத்திர மீனை ரெண்டா வெட்டினா, அந்த ரெண்டு துண்டுகளும் ரெண்டு தனித்தனி நட்சத்திர மீன்களா வளர்ந்துடும்', என்றான் பாலா, 'அதே மீனை, நாம எட்டு துண்டா வெட்டி வீசினாக்கூட, எந்தப் பிரச்னையும் இல்லை, எட்டு மீன்கள் கிடைக்கும்'

நட்சத்திர மீனின் ஓவியத்துக்கு அருகே, எட்டுக்கால் பூச்சிபோல் குத்துமதிப்பாக ஒரு சிலந்தி வரைந்தான் பாலா, 'ஆனா, சிலந்தி அப்படி இல்லை, ஒரே அடி, உயிர் போயிடும், அதுக்கப்புறம் அதனால எந்தப் பிரயோஜனமும் இல்லை'

அவன் பேசப்பேச, எல்லோரும் நாற்காலியில் நெளியத் தொடங்கியிருந்தார்கள். புது முதலாளி எதற்காக இப்படிக் குத்துகிறேன், வெட்டுகிறான் என்று கொலைவெறியோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, அந்தப் புதிரை பாலாவே அவிழ்த்தான், 'நம்ம கம்பெனி, நட்சத்திர மீனா, இல்லை சிலந்தியா?'

வழக்கம்போல், இந்தக் கேள்விக்கும் யாரும் பதில் சொல்லவில்லை. கையைக் கட்டிக்கொண்டு, பாலா தொடர்ந்து பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

'ஒரு கம்பெனி, நட்சத்திர மீனா இருக்கு-ன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? அந்த கம்பெனியை எப்படி உடைச்சுப் போட்டாலும், அந்த ஒவ்வொரு துண்டும் தனித்தனியே செயல்பட்டு ஜெயிக்கும். இல்லையா?'

இப்போது சில தலைகள் புரிந்த பாவனையில் ஆடத் தொடங்கியிருந்தன, 'அதே கம்பெனி சிலந்தியா இருந்துட்டா? ஒரு சின்ன அதிர்ச்சியைக்கூட தாங்கமுடியாம, மொத்தக் கம்பெனியும் படுத்துடும்', என்றான் பாலா, 'இப்போ சொல்லுங்க, நாம நட்சத்திர மீனா இருக்கோமா? அல்லது, சிலந்தியா இருக்கோமா?'

சிறிது நேர மௌனத்துக்குப்பிறகு, பெருமூச்சுடன் தனது பேச்சைத் தொடர்ந்தான் பாலா, 'இத்தனை நாளா, இந்த ·பேக்டரி ஒரு பெரிய சிலந்தியாதான் செயல்பட்டிருக்கு. அதனாலதான், இங்கே ஏகப்பட்ட பிரச்னைகள், எல்லாத் தலைவலிகளையும் ஒரே ஒருத்தர் சுமக்கவேண்டியிருந்தது. அவரும் மனுஷர்தானே? அவர் தளர்ந்ததும், மொத்தக் கம்பெனியும் தடுமாறி விழற நிலைமை'

இப்போது எல்லோருடைய நினைவிலும் ராகவேந்தர் வந்துபோனார். அவரைப்போல ஒரு கம்பீரமான மனிதரைப் பார்க்கமுடியாது. ஆனால், எல்லாப் பொறுப்புகளையும் அவர் ஒருவரே தோளில் தாங்கிச் சுமந்துகொண்டிருந்தது சரிதானா?

'சரியில்லை' என்றான் பாலா, 'எந்த நிறுவனமும் தனி நபர்களை நம்பி இருக்கக்கூடாது. அவர் முதலாளியா இருந்தாலும் சரி, தொழிலாளியா இருந்தாலும் சரி, அவரை எடுத்துட்டா எல்லாம் சரிஞ்சு விழுந்துடறதுக்கு இது என்ன சீட்டுக்கட்டு மாளிகையா? இந்த கம்பெனியை நம்பி நூத்துக்கணக்கான குடும்பங்கள் இருக்கே, நாம அப்படி அலட்சியமா இருக்கலாமா?'

வெண்பலகையில் வரையப்பட்டிருந்த சிலந்திமீது பெருக்கல் குறிபோல் கோடுகள் வரைந்தான் பாலா, 'இனிமே நமக்கு சிலந்தி மனோபாவம் வேண்டாம், நான் இந்தக் கம்பெனியை நட்சத்திர மீன்போல வளர்க்க நினைக்கறேன், ஒரு முதலாளி, ஒரு தலைவர், ஒரு வழிகாட்டி-ன்னு நம்மை நாமே சுருக்கிக்கவேண்டாம், நட்சத்திர மீன்மாதிரி பல துண்டா உடைச்சாலும், ஒவ்வொண்ணும் தனித்தனியா ஜெயிக்கிற அளவுக்கு நாம வளர்ந்தாகணும்'

'இந்த ஆள் அடிக்கடி காலேஜ் ப்ரொ·பஸர்மாதிரி நீளமா லெக்சர் எடுக்க ஆரம்பிச்சுடறார்', என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டார் கார்த்திகேயன். பிறகு வலது கையை உயர்த்தி, 'நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனா, அதுக்காக நாங்க என்ன செய்யணும்-ன்னு புரியலை', என்றார் சத்தமாக.

'முதல்ல, இப்படி நீங்க, நாங்க-ன்னு பிரிச்சுப் பேசறதை நிறுத்தணும்', என்றான் பாலா, 'மேனேஜ்மென்ட்ங்கறது தனி உலகம், நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு யாரும் நினைக்கக்கூடாது, ஒவ்வொருத்தரும், தங்களைச் சுற்றியிருக்கிற விஷயங்களைத் தாங்களே மேனேஜ் பண்ணிக்கக்கூடிய அளவுக்கு வளரணும்'

'அதனால குழப்பம் வராதா? உன்னோட அதிகார எல்லை எது, என்னோட அதிகாரம் எதுன்னு மக்கள் சண்டை போட்டுக்கமாட்டாங்களா?'

'மிஸ்டர் கார்த்திகேயன், அதிகாரம் இப்படிச் சில தனி நபர்கள் கையில இருக்கிறதே ரொம்பத் தப்பு', என்று சிரித்தான் பாலா, 'அதைப் பிரிச்சு, குழுக்கள் கையிலே கொடுத்துடப்போறோம்'

இப்போது ப்ரியா கை உயர்த்தினாள், 'ஏற்கெனவே நம்ம கம்பெனி தனித்தனி டிபார்ட்மென்ட்களாப் பிரிஞ்சுதானே இருக்கு? அதைத்தான் குழுக்கள்-ன்னு சொல்றீங்களா?'

'கிட்டத்தட்ட அப்படிதான்', என்றான் பாலா, 'நம்ம ·பேக்டரியில, ஆ·பீஸ்ல ஏகப்பட்ட டிபார்ட்மென்ட்கள் இருக்கேதவிர, அவங்க யாரும் அதிகாரத்தைக் கையில எடுத்துக்கறதில்லை, எந்தப் பிரச்னைன்னாலும், என் தலையிலதான் கொண்டுவந்து கொட்டறாங்க'

'இப்போ, உற்பத்திக்குத் தேவையான ஒரு மெடீரியல் வரலை, அது ஒரு பிரச்னை, காசு கொடுக்கவேண்டிய கஸ்டமர் ஏதோ சாக்குச் சொல்லி தட்டிக்கழிக்கறான், இது இன்னொரு பிரச்னை, இந்த ரெண்டுக்கும், ஒரே ஒரு ஆள் தீர்வு சொல்லணும்ன்னா அது எப்படி முடியும்? இங்கேதான் நாம சிலந்தி நிறுவனமா இருக்கோம்'

'இதை மாத்தணும்ன்னா என்ன செய்யலாம்?', கார்த்திகேயன் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார், 'ஒவ்வொரு டிபார்ட்மென்ட்க்கும் தனித்தனியா ஒரு தலைவரை நியமிக்கணுமா?'

'தலைவர் இல்லை, தலைவர்கள்', என்று திருத்தினான் பாலா, 'அதைத்தான் குழுக்கள்-ன்னு சொன்னேன், நம்மோட ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் இருந்தும், விஷயம் தெரிஞ்ச மூணு அல்லது நாலு பேரைத் தேர்ந்தெடுத்து, அவங்ககிட்டே மொத்த அதிகாரங்களையும் ஒப்படைச்சுடப்போறோம்'

'மொத்த அதிகாரம்ன்னா? அவங்க என்ன முடிவு வேணும்ன்னாலும் எடுக்கலாமா?'

'ஆமாம்', என்றான் பாலா, 'அந்த டிபார்ட்மென்ட்முழுக்க அவங்களோட பொறுப்பு, அது நல்லபடி இயங்கறதுக்கு, அவங்க என்ன வேணும்ன்னாலும் செய்யலாம், பிரச்னைகள் வந்தா, அவங்களே யோசிச்சு முடிவெடுக்கலாம், அதில நானோ, வேற யாரோ நிச்சயமாத் தலையிடமாட்டோம், முழுச் சுதந்தரம் உண்டு'

'அது ரொம்ப ஆபத்து சார்', என்றார்கள் யாரோ, 'அவங்கபாட்டுக்கு எதையாவது செஞ்சுவெச்சு, அது கம்பெனிக்கு நஷ்டமா வந்து முடியும்'

'தயவுசெஞ்சு அவங்க-ன்னு பிரிச்சுப் பேசாதீங்க', பாலாவின் குரலில் லேசான பொறுமையின்மை தெரிந்தது, 'இங்கே யாரும் "அவங்க" இல்லை, எல்லாமே "நாம"தான். நாமே, நம்மமேல சந்தேகப்படக்கூடாது. நம்மால நல்ல முடிவுகளை எடுக்கமுடியும்ன்னு நம்பணும்'

வெண்பலகையில், 'Monday' என்று எழுதி அடிக்கோடு போட்டான் பாலா, 'இனிமே ஒவ்வொரு திங்கள்கிழமையும், நம்மோட இந்த டிபார்ட்மென்ட் குழுக்கள் தனித்தனியே சந்திச்சுப் பேசணும், அவங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாத்துக்கும், அவங்களேதான் முடிவெடுக்கணும், வேற யாரும் உதவிக்கு வர மாட்டாங்க, வரத் தேவையில்லை'

'ஒருவேளை, இந்தக் குழுக்களால ஏதாவது ஒரு பிரச்னையைத் தீர்க்கமுடியலைன்னா?'

'அதுக்கு, நாம இன்னொரு உயர்மட்டக் குழு அமைச்சுக்கலாம்', என்றான் பாலா, 'சட்டமன்றம், பாராளுமன்றம்-ன்னு இருக்கறமாதிரிதான். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், டிபார்ட்மென்ட் குழுக்களால தீர்க்கமுடியாத, அல்லது அவங்க எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்லமட்டும், இந்த உயர்மட்டக் குழு பேசி முடிவெடுக்கும்'

'கொஞ்சம்கொஞ்சமா, திங்கள்கிழமை கூட்டங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கணும், செவ்வாய்க்கிழமை கூட்டங்களுக்கு அவசியமே இல்லாத நிலைமை வரணும்', பாலாவின் கண்களில் பரவசம் தெறித்தது.

'இப்படித் தனித்தனிக் குழுக்கள்மூலம், அந்தந்த டிபார்ட்மென்ட் பிரச்னைகளை அவங்களே தீர்த்துக்கப் பழகினா, யாரும் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை', என்ற பாலா, நட்சத்திர மீனைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தான், 'அதுக்கப்புறம், நாம இன்னும் சிறப்பாச் செயல்படமுடியும், நம்மோட ஒவ்வொரு குழுவும், தனித்தனியா ஜெயிக்கமுடியும், நட்சத்திரமீன்போல!'

Copyright © 2005 Tamiloviam.com - Authors