தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 2]
- ஜெயந்தி சங்கர்

நான் சிங்கப்பூருக்கு வந்தும் அதாச்சு கிட்டத்தட்ட இருபது வருஷம். நெறைய சம்பாதிச்சாச்சு. போன வருஷம் ரிடையரும் ஆயிட்டேன். இங்கயே மாடிக்குடியிருப்பு வீடு வாங்கி பதினைந்து வருஷத்துக்கு மேலேயே ஆயிடுத்து. வெங்கட்டையும் படிக்கவெச்சு நல்ல வேலைல அமர்த்தியாச்சு.

இனிமே ஒரு கடமையும் பாக்கியில்ல, வெங்கட் கல்யாணம் ஒண்ணத்தவிர. அதுக்குதான் ஒத்துக்கவே மாட்டேங்கறானே. நானும் பத்மாவும் சொல்லிண்டேயிருக்கோம். பத்மாவுக்கு தன்னால எப்படியும் அவன வழிக்கிக் கொண்டுவந்துடமுடியும்னு அசைக்க முடியாத நம்பிக்கை. கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையும்னு சொல்லியிருக்காளே. ஒருவேள, பத்மா மெதுவா பிள்ளையத் தன் வழிக்குக் கொண்டு வந்துடுவளோ என்னவோ. பார்ப்போம்.

இங்கயே வளர்ந்துட்டதால வெங்கட்டுக்கு இங்க நன்னா ஒன்றிப்போச்சு. நெறைய சிநேகிதர்கள். வேற எங்கயும் தன்னால வாழமுடியும்னு தோணல்லன்றான். எங்கரெண்டுபேருக்கும் ஆரம்பத்துல பிடிச்சிருந்த அளவுக்கு இப்பல்லாம் பிடிக்கல்ல. வயசாறதோல்லியோ, கும்பகோணத்துக்கே போயி அக்கடான்னு கோவில் குளம்னு இருக்கலாமான்னு யோசிக்கறோம். சரி, அதுக்கு முன்னாடி இவனுக்கு ஒரு கல்யாணத்தப்பண்ணி, ரெண்டு வருஷம் கூட இருந்துட்டுப் போலாம்னு பாத்தா, ஒரு வழிக்கும் வரமாட்டேங்கறானே.

எங்க வம்சத்தையே, 'ஒரு பிள்ள வம்சம், ஒரு பிள்ள வம்சம்'னு சொல்லுவா. எனக்குத்தெரிஞ்சு ஆறு தலைமுறைக்கி ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரே பிள்ளைதான் பொறந்திருக்கு. எங்கப்பாக்கு நா ஒரே பிள்ளை. தாத்தாக்கு எங்கப்பா ஒரே பிள்ளை. தாத்தாவும் அப்படியேதான். எல்லாருக்குமே ஒரு பொண்ணோ ரெண்டு பொண்ணோ பொறக்கும். ஆனா, ஆண்பிள்ளைன்னு பார்த்தா ஒண்ணுதான்.

என்னோட பொறந்தவா ஒரு அக்கா, ஒரு தங்கை. எனக்கும் ஒரே ஒரு அத்தை இருந்தா. சின்னவயசுல தவறிப்போயிட்டா. ஆனா, எனக்குப் பொண்ணே பொறக்கல்ல. வெங்கட் ஒரே பிள்ளதான் எங்களுக்கு. எங்களோட இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே அவன்தான்னு ஆயிடுத்து. அதனாலேயோ என்னவோ சோதனைகள்னு வரச்சே, அதுவும் வெங்கட் சம்பந்தமா வந்துதோ ரொம்பப் பெரிசாத் தெரியும். அவனுக்கு ஒண்ணுன்னா எங்களால கொஞ்சங்கூடத் தாங்கிக்கவே முடியறதில்ல. வெங்கட்டுக்கு ஒரு சின்னக் காயம் பட்டாக்கூடப் பொறுக்காமுடியா பத்மாவான ஒரேயடியா அழுது அரற்றி ஊரக்கூட்டிப்பிடுவோ.

எங்கப்பா செத்துப்போறச்சே வெங்கட்டுக்கு பதினோரு வயசுதான் ஆயிருந்துது. மெதுவா இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு, சிங்கப்பூர்லயே பூணூல் போட்டுடலாம்னு தான் நெனச்சிண்டிருந்தோம். அதுக்குள்ள எங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டாறேன்னு, அவர் மறுபடியும் படுக்கைல விழதுடறதுக்குள்ள பண்ணிடணும்னு, அவசர அவசரமா கும்பகோணத்துல சத்திரம் ஏற்பாடெல்லாம் பண்ணி 'ப்ரம்மோபதேசம்' நடந்தது. அவசரத்துல ஏற்பாடு பண்ணினாலும் நன்னாவே பண்ணினோம்.

மறுபடியும், அப்பாவ எங்கக்கா பொறுப்புல விட்டுட்டு சிங்கப்பூருக்குக் கெளம்பிண்டு இருந்தபோது அப்பா என்ன கிட்ட கூப்பிட்டு, " ஸ்ரீநிவாசா, நம்ம வெங்கட்டோட கல்யாணத்தையும் பார்க்கணும்னு ஆசைதான். ஆனா, பகவான் சித்தம் என்னவோ தெரியல்ல. ஆனா ஒண்ண மட்டும் மறந்துடாத. நம்ம வம்சமே ஒரு புள்ள வம்சம். காலத்தோட அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிடு", னு சொன்னார். அதான் அவர் கடைசியா என்கிட்ட பேசினது."விட்டா, வெங்கட்டுக்கு பதினோரு வயசுலயே கல்யாணத்தப் பண்ணிப்பிடுவார் கெழவர்"னு எல்லாரும் அன்னிக்கிகேலி பேசினா.

கடைசில அப்படி அவசர அவசரமா ஏற்பாடு பண்ணி வெங்கட்டோட பூணுல நடத்தினதும் நல்லதாப்போச்சு. எண்ணி ஒரே மாசம் தூக்கத்துலயே போயிட்டார். அடிச்சுப்பிடிச்சுண்டு பறந்து ஓடினேன், அந்திம சமஸ்காரங்கள்ளாம் பண்ணறதுக்கு. ரெண்டு நாள்ள பத்மாவும் வெங்கட்டும் வந்து சேர்ந்துண்டா. ஆசப்பட்டபடி வெங்கட்டோட ப்ரம்மோபதேசத்தையாவது அப்பா பார்த்தாரேன்னு நாங்க எல்லாரும் பேசிண்டோம்.

ரெண்டு வருஷம் முன்னாடிதான் ஒரு நாள் திடீர்னு ஆபீஸ்ல வெங்கட் மயங்கி விழுந்துட்டான்னு போன் வந்துது. பத்மாவும் நானும் என்னவோ ஏதோன்னு ஒரேயடியா பயந்துட்டோம். பதறியடிச்சுக் கிளம்பிண்டேயிருக்கும்போது, வெங்கட்டோட ·ப்ரெண்ட் ரகு போன் பண்ணினான். சிங்கப்பூர் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு வந்துடுங்கோன்னு சொன்னான். நான் அன்னிக்கி எப்படித்தான் வழிதவறாம, ஆகிஸிடெண்ட் எதுவும் ஆகாம கார் ஓட்டினேனோ எனக்கே இன்னிக்கி நெனச்சா ஆச்சரியமா தான் இருக்கு. பத்மா நொணநொணன்னு பொலம்பிண்டே வந்தா. பொறுக்கமுடியாம ஒரு தடவ நான் அதட்டினாவுட்டு, தீனமா மொணமொணன்னு ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சுட்டா.

நல்ல வேளையா, அன்னிக்கு சௌம்யாவுக்கு அங்க டியூட்டி. எதேச்சயா நாங்க உள்ளபோறப்பவே பார்த்துட்டா. கிட்ட வந்து என்னன்னு கேட்டா. டூட்டிக்கிடைலயும் சரியான நேரத்துல ஒரு மாரல் சப்போர்ட் கொடுத்தாளே, அதையெல்லாம் மறக்கமுடியாது. சௌம்யா என்னோட அத்தான் மன்னியோட அக்கா பொண்ணு.

பளிச்சினு கண்ணாடி போட்டுண்டு, காது வரைக்கும் சௌகரியத்துக்காக வெட்டின கருங்கேசம், பேண்ட்,சர்ட் போட்டுண்டு மிடுக்கா நின்னா. வீட்டுல இருக்கறச்சே, சல்வார் கமீஸ் தான் போட்டுப்பா. சின்னப்பொண்ணா தெரியும் அப்போ. வெளியில எங்கயும் நிகழ்ச்சிக்கிப் போனா அழகா பொடைவ கட்டிப்பா சௌம்யா.

அத்தனை பதட்டத்துலயும் எனக்கு திடீர்னு ஏன் சௌம்யாவை ரசிக்கத் தோணித்துன்னு தெரியல்ல. ஒருவேள, நிதர்சனத்த மறந்து வேற எதுலயாவது ஒன்றத் துடிச்சதோ என்னவோ மனசு. சில நொடிகள்ளயே என் சிந்தனை ஓட்டத்தோட அபத்தத்தைப் புரிஞ்சுண்டுட்டேன்.

ஒண்ணும் புரியாம என்னவோ ஏதோன்னு பதட்டத்தோடயே தான் இருந்தோம். பத்மாவச் சமாளிக்கவே முடியல்ல. பயப்படாம இருக்கத்தான் முயற்சி பண்ணினோம். ஆனா, முடியல்ல. பதட்டம் விடவேயில்ல. ஒவ்வொரு தெய்வமா வேண்டிண்டு ஒக்காந்திருக்கறதத்தவிர வேற ஒண்ணும் பண்ணமுடியல்ல. பகவான் காப்பாத்திடுவான்னு ஒரு சின்ன நம்பிக்கைய மட்டும் இருக்கப்பிடிச்சுண்டு ஒக்காந்திருந்தோம்.

கொஞ்சநேரத்துல வளையாத பலகை மாதிரி தோளும் அகல மார்பும் நிமிர்ந்த நடையுமா ரகு வந்தான். "இன்னும் டாக்டர் எக்ஸாமின் பண்ணிட்டுதான் இருக்காரு, அங்கிள். வெளியில வந்ததும் தான் தெரியும். பயப்படாதீங்க. ரிலாக்ஸ். ஏதாவது குடிக்கிறீங்களா, வாங்கிட்டு வரேன்",னு கேட்டான்.  பிள்ளைக்கிப் பிள்ளையா நின்னு ரகுதான் பெரும் உதவி, அடுத்து வந்த ஒரு வாரமும். லீவுபோட்டுட்டுன்னா கூடவே ராப்பகலா இருந்தான். நல்ல பையன். தீர்க்கமான பார்வை, செதுக்கிய மாநிற முகம். படிய மறுத்த அடர்ந்த முடி. நல்ல மாடலா வரமுடியும். ஏன் ரகு முயற்சிக்கல்ல?

மறுபடியும் மறுபடியும் என் மனசு வேறு எதிலாவது லயிக்கப் பரபரத்தது எனக்குப் புரிஞ்சுது. நிகழ்காலத்லேருந்து நழுவி எங்கெங்கேயோ போகப்பார்த்தது.

டாக்டர் வந்தார். வெங்கட்டுக்கு மூளைல ஏதோ 'கட்டி'னு சொல்லிட்டார். நின்னுண்டிருந்த பத்மாவுக்கு உடனே மயக்கம் வந்துடுத்து. நின்ன இடத்துல அப்படியே சரிஞ்சுட்டா. சௌம்யா சட்டுன்னு பிடிக்கப்போனா. ஆனா, அதுகுள்ள முழுக்கவே தரைல விழுத்துட்டா. அவளுக்கு வேற உடனே சிகிச்சை பண்ணும்படியாயிடுத்து. ஒரே நாள்ள ஒவ்வொண்ணா பார்த்ததுல எனக்கேகூட மயக்கம் வந்துடும் போலதான் இருந்துது.

வெங்கட்டுக்குக் கொஞ்ச நாளாவே அப்பப்போ தலைவலி, லேசா மயக்கம் எல்லாமே இருந்திருக்கு. ஏன் அலட்சியப்படுத்தினானோ, தெரியல்ல. சொன்னா நாங்க பயப்படுவோம்னு நெனச்சானா, இல்ல என்ன காரணம்னு ஒண்ணும் தெரியல்ல. மொத்தத்துல அலட்சியப்படுத்திட்டான். மூச்சே விடல்லயே அதப்பத்தி யார்கிட்டயும். மறைச்சுட்டான். மருந்துல கரைக்கக்கூடிய 'ஸ்டேஜை'யெல்லாம் தாண்டிடுத்து 'ட்யூமர்'னு டாக்டர் சொல்லிட்டார். மூளைல கட்டின்னு சொன்னதுமே எங்க ரெண்டுபேருக்கும் ரொம்பத்தானே கவலையாயிருக்கும்.

அடுத்த நாளே, ஆபரேஷன் பண்ணி கட்டிய நீக்க வேண்டிய கட்டாயம். ஏன்னா, ஏற்கனவே லேட்டாயிடுத்தோல்யோ, அதான். பணம் பணமாவா செலவாச்சு? தண்ணியான்னா செலவாச்சு. சரி, என்கிட்ட இருந்துது, செலவழிச்சோம். இல்லாதவா என்ன பண்ணுவா? அந்த வகைல பகவான் க்ருபைல பணப்பிரச்சனைன்னு இல்லாம இருந்துதேன்னு எப்பவுமே நெனச்சுப்பேன். பத்மாட்டகூட சொன்னேன் அப்போ. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது.

டாக்டர். சான் தான் வெங்கட்ட பத்திரமா எங்களுக்குத் திருப்பிக்கொடுந்திருந்தார். அவரப்பார்த்ததுமே, ரொம்ப நெகிழ்ச்சியாப் போச்சு. மொதமொதல்ல அன்னிக்கிதான் எனக்கு டாக்டர்னா எவ்வளவு உயர்ந்த பிறப்புன்னு தோணினதே. ரெண்டு வாரமானதும் ஒரு நாள் டாக்டராத்துக்குப் போயிட்டு வந்தோம். நெறைய பழங்கள் வாங்கிண்டு, தஞ்சாவூர் ஓவியம் யசோதா கிருஷ்ணா கொண்டு கொடுத்தோம். அவளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒரு குணமான நோயாளின்ற வகையில, நாங்க ஆயிரத்துல ஒரு முகம். அவாளுக்கு எத்தனையோ நோயாளிகள். ஆனா, எங்களுக்கு ஒரே ஒரு பிள்ளையாச்சே.

அடுத்த ஒவ்வொரு வாரமும் செக்கப், தொடர்ந்து ரெண்டு மாசத்துக்கு. அதுக்கப்புறம், ஒவ்வொரு மாசமும் போனோம். அப்படியே ஒரு ஆறு மாசம். அதுக்கப்புறம், ஆறு மாச இடைவெளிக்கப்புறமாப் போனப்பதான், டாக்டர் இனிமே ஒண்ணும் பயமில்ல, குணுமாயிடுத்துன்னு சொன்னார். பெரிய நிம்மதியாச்சு எங்களுக்கு. மறுபடியும் கட்டி வரக்கூடிய சாத்தியங்கள் குறைவுன்னு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓய்வா ஆத்துலயே தான் இருந்தான் வெங்கட். மறுபடியும் அதே கம்பனில எடுத்துண்டுட்டா அவன. நல்ல திறமைசாலிகள எப்பவும் விட முடியாது அவாளுக்கெல்லாம்.

இப்பதான் ஏழெட்டு மாசமா சாதாரணமா இருக்கான். கட்டியெல்லாம் வராமயிருந்திருந்தா ஒரு வேளை இந்நேரம் அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு கொழந்தையும் பொறந்திருக்குமோ என்னவோ. இருபத்தெட்டு வயசுன்றது அப்படியொண்ணும் லேட் இல்ல. ஆனா, இருபத்தியஞ்சு வயசுக்கே பண்ணிடலாம்னுதானே பத்மா ரொம்ப முயற்சி பண்ணினா. உள்ளூர்லயிருந்தும் வெளியூர்லேயிருந்தும்  ஜாதகமா வந்து குவிஞ்சதுல, தேர்ந்தெடுக்கறது தான் கஷ்டாமாயிருக்கும்னு நெனச்சதுண்டு அப்பல்லாம்.. ஒண்ணும் பொருந்திவரல்ல அப்பவே. தொடர்ந்து நெறைய  ஜாதகம் வந்துண்டேயிருந்தது. ஒண்ணும் கூடித்தான் வரல்ல. அதுக்குள்ள தான் பெரிசா ஒடம்புக்கு வந்துடுத்து. ஜாதகம், கல்யாணம் எல்லா பேச்சும் இயல்பாவே ஒரு முடிவுக்கு வந்துடுத்து.

வெங்கட்டுக்கு ஆபரேஷன் ஆனதும் மிச்சத்துக்கெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் ஏது நேரம். ஆஸ்பத்திரி, வீடு, மறுபடியும் ஆஸ்பத்திரி, வீடுன்னு நாங்க ரெண்டு பேரும் அலைசுண்டேன்னா இருந்தோம். ஆஸ்பத்திரில எல்லா டாக்டர்களும் நர்ஸ்களும் எங்களுக்கு சிநேகிதாளாயிட்டா.

இப்ப மறுபடியும் வெங்கட்டோட ஜாதகக்கடை எடுக்கலாம்னு ரெண்டு மாசம் முன்னாடி நங்கநல்லூர்ல இருக்கற எங்க சித்தி பொண்ணு மீனா கிட்ட அனுப்பிக்கொடுத்தோம். சென்னைக்குப் போய் நிச்சயம் பண்ணி, கல்யாணமும் முடிக்கலாம்னா, "அப்பா, யாரக்கேட்டு ஜாதகம் கொடுத்தேள். எனக்குக் கல்யாணமே கிடையாது. வேண்டாம். மறுபடியும் ட்யூமர் வராதுன்னு என்ன நிச்சயம்? இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய வேற பாழாக்கணுமா? இப்போ குணமாயிருக்கு, அவ்ளோதான். மறுபடியும் வந்தா?", னு வெங்கட் ஒரேயடியா கொரல ஒசத்தி காச்மூச்னு கத்தினான்.

பத்மாவும் விடாம, மெதுவா தயங்கித் தயங்கி,"வெங்கட், மறுபடியும் வர ச்சான்ஸ் இல்லன்னு டாக்டர் சொன்னாறேடா",னு கேட்டா.

"மறுபடியும் வர சான்ஸ்  குறைவுன்னு தான் டாக்டர் சொன்னார், வராதுன்னு சொல்லல்ல. அதுக்கு வரவே வராதுன்னு அர்த்தமில்லம்மா."

"ஏண்டா இப்படி படுத்தற. அதெல்லாம் வராதுடா. பகவான் வேணது சோதிச்சுட்டார்."

"ஓஹோ, பகவான் நேர்ல வந்து,'பத்மா பத்மா, இனிமே வெங்கட்டுக்கு ட்யூமர் வராது, வேணது ஒங்களயெல்லாம் சோதிச்சுட்டேன் நா, இனிமே நீ அவனுக்கு ஜோரா கல்யாணம் பண்ணலாம்',னு ஒங்கிட்ட சொன்னாரோ?"

ஒண்ணுமே பேசாம இருந்தா பத்மா.

வெங்கட்டே தொடர்ந்து, "இனிமே, ஒங்க ரெண்டு பேர் வாய்லயும் எனக்கு கல்யாணம்ன்ற பேச்சே வரப்படாது",னு சொல்லிட்டு படீர்னு கதவச்சாத்திண்டு ரூமுக்குள்ள அடைஞ்சுண்டான்.

அடுத்த ரெண்டு நாளைக்கி பத்மா தன்னோட அடுத்த கட்ட நடவடிக்கையா உண்ணாவிரதம் இருந்தா. தண்ணி கூட பல்லுல படாம கொலப்பட்னி. எனக்கேகூட அவளுக்கு 'டிரிப்ஸ்' ஏத்தும் படியாயிடப்போறதேன்னு பயமாத்தான் இருந்துது. ஆபீஸ்லயிருந்து போன் பண்ணி அப்பப்ப என்கிட்ட அம்மா எழுந்துண்டாளா, சாப்டாளான்னு கேட்டுண்டேயிருந்தான், வெங்கட்டும். ஆத்துக்கு வந்ததும், ஒக்காந்துண்டு ஏதேதோ சமாதானம் சொல்லிப் பார்த்தான். ஆனா பத்மா கேக்கல்ல. உண்ணாவிரதத்துல மகாத்மா காந்திக்கி வாரிசான்னா இருக்கான்னு நெனச்சிண்டேன்.  அம்மா சாப்பிடாம இருந்தா வெங்கட்டுக்கு மனசு கேக்குமா, அவனும் சாப்பிடாம இருந்து பார்த்தான். பத்மாவுக்கு அதப்பார்க்கப் பொறுக்கல்ல.

"அம்மா, நீயும் ஒரு பொண்ணுதானே, நெனச்சுப் பாரும்மா. ஒரு வேள எனக்கு மறுபடியும் கட்டி வந்துதுன்னா, வரவளோட கதிதான் என்ன? ம்? நீயே சொல்லும்மா,.."

" அதான் டாக்டரோ குணமாயிடுத்துன்னு சொல்லிட்டார். நீ எங்க ரெண்டு பேரப்பத்தி நெனச்சுப்பார்த்தியா? இருக்கறது நீ ஒருத்தன் தான் எங்களுக்கு. ஒரு பேரனப் பார்க்கணும்னு ஆசை எனக்கும் உங்கப்பாக்கும் இருக்காதா? ம்?"

"உங்க ரெண்டு பேரோட 'பேரன்' ஆசைக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையோட விளையாடணுமோ. அதுக்கு நானும் உடன்படணுமாக்கும். என்னம்மா நியாயம் இது?"னு வெங்கட் கேக்கக்கேக்க பத்மா அழுதாள். ஒண்ணுமே சொல்ல முடியல்ல அவளுக்கு.

பெத்தவாகிட்ட வெங்கட்டுக்கு பாசம் நெறைய உண்டு. அதே நேரம் ஒரு நியாயவாதியாவும் பேசறானோன்னு அன்னிக்கி தோணித்து. ஒருத்தருக்கும் கெடுதல் நினைக்காதவன். அதுக்காக நாங்க அப்படியே விட்டுடமுடியுமா என்ன? கண்ணுமுன்னாடி ஒரு வம்சம் அழியறதப்பார்த்துண்டிருக்க முடியுமா.

தனக்கு ஒரு வேள மறுபடியும் மூளைல கட்டி வந்துடுமோ, அப்படி வந்தா வாழவரப்போறவ என்ன பண்ணுவோன்னெல்லாம் இவ்வளவு யோசிக்கறானே, எங்கயோ பேர் தெரியாத மூஞ்சி தெரியா ஒருத்திக்காக இவ்வளவு யோசிக்கறவன் பெத்தவாளோட அபிலாஷைகளையும் புரிஞ்சுக்கணுமோன்னோ, அதுக்கு மட்டும் அவனால முடியல்லயேனு உள்ளுக்குள்ள கோபமா வந்துது.

"பத்மா, நீ எப்பப்பாரு, நீ எதுக்கு பூள்பூள்னு அழற. விடு. இவனோட நம்ம வம்சம் முடிஞ்சுதுன்னு நெனச்சுக்கவேண்டியதுதான். வேற என்ன பண்ண? அவன் நம்ம ஆசைய பூர்த்தி பண்ணுவான்னு எனக்குத் தோணல்ல, நமக்கு வாச்சது அவ்ளோதான்னு விடு", னு பத்மாவ சமாதானம் பண்றாப்ல வெங்கட்டப்பார்த்து திட்டினேன்.

வெங்கட் அப்படியே தொப்னு சோபால ஒக்கார்ந்தான்.

பத்மா அவன சாப்பிடக்கூப்பிட்டா. " அம்மா, நீ சாப்டற வரைக்கும் என்னையும் கூப்டாத",னு சொன்னான். " நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கோடா கண்ணா, நா சாப்டறேன்"னு பத்மா சொன்னா. அம்மாவும் பிள்ளையும் பண்ணின டிராமால ஒரு கட்டத்துல எனக்கு பயங்கர எரிச்சல்தான் வந்தது.

டேபிள்ள தட்ட வச்சி, பரிமாறினா பத்மா. வெங்கட் வந்து ஒக்காந்துண்டு, "என்னவோ பண்ணுங்கோ. அம்மா இப்பவாவது நீயும் சாப்ட வாயேன்",னு கூப்பிட்டான். எல்லாருமா சாப்பிட்டு முடிச்சோம்.

அன்னிக்கி வெங்கட் கல்யாணத்துக்கு மனசாற ஒத்துண்டானான்னு எனக்கு உள்ளூர சந்தேகம்தான். சரின்னு வெங்கட் அரைகுறையா ஒத்துண்டானே தவிர, பத்மாவுக்குமே அவன் கடைசி வரைக்கும் ஒத்துழைக்கணுமேன்னு கவலை இருந்துண்டேதான் இருந்தது.

பத்மா அன்னியிலேயிருந்து மும்முரமா போன், சாட், மெயில்னு மீனாவ நிறைய வேலை வாங்கினா. சென்னைல இருக்கற ஒரு பொண்ணையும் விடாமல் சல்லடபோட்டுச் சலிச்சு எடுத்தா. பார்த்துப்பார்த்து பத்மாவுக்கு 'பொருத்தம்' பார்க்கவே வந்துடுத்து. அவ்ளோ ப்ராக்டீஸ். உள்ளூர்ல ஏற்கனவே பார்த்து வச்சிருந்த பொண்களையெல்லாம் ஒதுக்கிட்டா. எப்படியும் அவாள்ளாம் ஒத்துவரமாட்டானு அவளுக்குத் தோணிப்போச்சு.

சந்தேகத்துக்கு இடையில எனக்கு ஒரு சின்னூண்டு நம்பிக்கையும் வந்தது. எப்படியும் வெங்கட்டுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடலாம். வம்சம் பட்டுப்போகாது. நானும் பத்மாவும் ரகசியமா கனவுலேயே அவனுக்குக் கல்யாணம் பண்ணி, பேரனக் கொஞ்சினோம்.

தன் பேர்ல அவனுக்கிக்கிருக்கற பாசத்த பத்மா தனக்குச்சாதகமா உபயோகிச்சுண்டு வாவன் சம்மதத்த வாங்கிட்டாளேன்னு தான் வெங்கட் நெனச்சிண்டிருந்தான்னு தோணித்து. வெங்கட்டுக்கு பத்மா பேர்ல உள்ளூர கோபம்னு புரிஞ்சுது. எங்க ரெண்டு பேரோடையும் ரெண்டு மூணு நாளைக்கி அவன் பேசவேயில்ல. ஏதோ யோசிச்சுண்டே இருந்தாப்ல இருந்தான். அவனோட மனசுல என்னதான் ஓடறதுன்னு கண்டுபிடிக்கவே முடியல்ல. எனக்கு யூகிக்கவும் தெரியல்ல. ஆனா, ஏதோ யோசனை மட்டும் தொடர்ந்து ஓடறது அவனுக்குள்ளன்னு தெரிஞ்சது. எப்டியாவது கல்யாணம் மட்டும் நல்லபடியா நடக்க அந்த வேங்கடாசலபதிய வேண்டிண்டேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors