தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 22]
- என். சொக்கன்

'சியர்ஸ்', மூன்று எலுமிச்சைப் பழரசக் கோப்பைகள் குலுங்கிக்கொண்டன.

'என்ன மச்சி, வெறும் லைம் ஜூஸ்தானா?', நாகராஜனின் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது, 'இத்தனை பெரிய கம்பெனியைக் கட்டி மேச்சுகிட்டிருக்கே, அதுக்கு ஒரு தண்ணி பார்ட்டி தரக்கூடாதா?'

'ஸாரி ·ப்ரெண்ட்ஸ், என் செலவில, நான் யாரையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா இல்லை', என்று சிரித்தான் பாலா, 'தவிர, இந்த ·பேக்டரி எல்லைக்குள்ள எப்பவும் ஆல்கஹால் நுழையக்கூடாது, அதில நான் ரொம்பக் கண்டிப்பா இருக்கேன்'

'யாராச்சும் குடிச்சுட்டு வேலைக்கு வந்தா?'

'முதல்வாட்டி ஒரு நாள் லீவ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவேன், மறுபடி அதே தப்பைச் செஞ்சா, நிரந்தரமா சீட்டைக் கிழிச்சுடுவேன்', குறும்பாகப் புன்னகைத்தான் பாலா, 'சில ஒழுங்குகளை, யாரும் மீறாம இருக்கிறதுதான் தொழிலுக்கு மரியாதை'

'இவனைப் பார்றா, பரம்பரை பிஸினஸ்மேன்மாதிரி பேசறான்', பொங்கிச் சிரித்தான் லட்சுமணன், 'என்னாச்சுடா உனக்கு? காலேஜ்ல நல்லாதானே இருந்தே?'

'பேசாம நீயும் எங்களோட பெங்களூருக்கு வந்திருக்கலாம்டா', சலிப்போடு பாலா முதுகில் தட்டினான் நாகராஜன், 'எவ்ளோ ஜாலியாப் பொழுதுபோகுது தெரியுமா? We Really Miss You மச்சி!'

கல்லூரி நாள்களில், அவர்கள் மூவரையும் தனித்தனியே பார்த்தவர்கள் குறைவு. அந்த வயதுக்கே உரிய குறும்புகள், குற்றங்கள் சகலத்தையும் ஒன்றாகச் சேர்ந்துதான் செய்தார்கள். அதேநேரத்தில், படிப்பிலும் கெட்டி. சொல்லிவைத்ததுபோல் மூவரும் ஒரே நிறுவனத்தில் வேலை வாங்கினார்கள்.

அதன்பிறகுதான், அந்த நெருக்கத்தில் யாரோ கண் போட்டாற்போலாகிவிட்டது. நாகராஜனும் லட்சுமணனும் பெங்களூரில் சா·ப்ட்வேர் வேலைக்குப் போக, பாலாமட்டும் இங்கே தொழிற்சாலை நிர்வாகத்தில் மாட்டிக்கொண்டுவிட்டான்.

அப்போதே, நண்பர்கள் இருவரும் அவனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப்பார்த்தார்கள், கெஞ்சிப்பார்த்தார்கள், மிரட்டிப்பார்த்தார்கள், ஆனால் பாலா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்துவிட்டான்.

மிகுந்த வருத்தத்துடன் அவர்கள் பிரிந்து, மூன்று ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டது. எத்தனையோமுறை இன்றைக்கு, நாளைக்கு, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று தள்ளிப்போட்டு, இப்போதுதான் மூவேந்தர்களும் மறுபடி சந்திக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்த மூன்று வருடங்களில், லட்சுமணனும் நாகராஜனும் நான்கு முறை வேலை மாறிவிட்டார்கள். ஒவ்வொருமுறையும், அவர்களின் சம்பளம் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்காக உயர்ந்திருக்கிறது. கை நிறையப் பணம், பை நிறைய சேமிப்பு, அடிக்கடி வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள் என்று நிம்மதியான வாழ்க்கை.

'நம்ம செட் ரொம்ப லக்கி மச்சி', என்றான் லட்சுமணன், 'எல்லோரும் சூப்பரா செட்டிலாயிட்டாங்க'

அடுத்த சில நிமிடங்களில், அவர்கள் மீண்டும் தங்களுடைய கல்லூரி நாள்களுக்குத் திரும்பியிருந்தார்கள். அவன் இப்போது என்ன செய்கிறான், இவளுக்கு என்ன ஆச்சு, அவனும் அவளும் கல்யாணம் செய்துகொண்டார்களா, அல்லது 'நண்பர்களாக'ப் பிரிந்துவிட்டார்களா, யாரெல்லாம் இன்னும் அரியர்ஸ் மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்பதுபோன்ற விசாரிப்புகளில் நேரம் கரைந்தது.

இப்போதுதான் கல்லூரியிலிருந்து வெளியே வந்தாற்போலிருக்கிறது. ஆனால் அதற்குள், அநேகமாக எல்லோருக்கும் வாழ்க்கை மாறிவிட்டது. சிலருக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. வேறு சிலருக்குக் கல்யாணமாகிக் குழந்தையே பிறந்துவிட்டது. அநேகமாக எல்லோரும் கார் வாங்கிவிட்டார்கள், அல்லது வாங்கப்போகிறார்கள், பாதிப்பேர் வெளிநாடு சென்றுவிட்டார்கள், மீதிப்பேர் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் பறக்கப்போகிறார்கள். மொத்தத்தில் எல்லோரும் சா·ப்ட்வேர் வாழ்க்கையில் பரம சௌக்கியமாக இருக்கிறார்கள்.

'நீமட்டும் ஏன் மச்சி இதையெல்லாம் விட்டுட்டு இங்கே மெஷின்களுக்கு நடுவில திண்டாடிகிட்டிருக்கே?', என்றான் நாகராஜன், 'தப்பான முடிவு எடுத்துட்டமோ-ன்னு இப்போகூட உனக்குத் தோணலியா?'

'சான்ஸே இல்லை', என்று சிரித்தான் பாலா, 'உண்மையில, இப்பதான் நான் ரொம்பத் தெளிவா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்'

நாகராஜனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் திகைப்போடு பார்த்துக்கொண்டார்கள். பாலாவிடம் இப்படி ஒரு தீர்மானமான பதிலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்களுடைய குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் புன்னகைத்த பாலா, ஒரே விழுங்கில் மீதமிருந்த பழரசத்தைக் காலி செய்தான். நாற்காலியிலிருந்து எழுந்து, மேஜை நுனியில் அமர்ந்தபடி, 'ஆரம்பத்தில, எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான்' என்றான்.

'அதை வருத்தம்-ன்னு சொல்றதுகூடத் தப்பு, ஒரு சின்னக் குழப்பம், நம்மால இது முடியுமா-ங்கற மலைப்பு. அவ்வளவுதான். அதுக்கப்புறம், தெரியாத ஒரு விஷயத்தை, முயற்சி செஞ்சு பார்த்து ஜெயிக்கிற இந்தச் சவால் கொஞ்சம்கொஞ்சமா எனக்குப் பிடிச்சுப்போச்சு'

'அப்போதான், நான் நிறையப் படிக்க ஆரம்பிச்சேன். பக்கோடா கட்டிவந்த துண்டுச் சீட்டில ஆரம்பிச்சு, பத்தாயிரம் ரூபாய் மேனேஜ்மென்ட் புத்தகங்கள்வரை எல்லாத்திலயும் ஏதாச்சும் ஒரு புது ஐடியா தேறுமா-ன்னு தேடினேன், புதுமையா எந்த விஷயத்தைப் படிச்சாலும், அதை நம்ம கம்பெனியில அறிமுகப்படுத்தியாகணும்ன்னு வெறி பிடிச்சமாதிரி அலைஞ்சேன்'

'என்ன மச்சி, இதெல்லாம் புஸ்தகத்தில படிச்சுத் தெரிஞ்சுக்கற விஷயமா?', சற்றே தயக்கத்தோடு கேட்டான் நாகராஜன்.

'இல்லைதான். ஆனா, அப்போ எனக்கு வேற வழி தெரியலையே', என்றான் பாலா, 'அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, அவர்கிட்டே போய் யோசனை கேட்டா, அவர் இன்னும் டென்ஷனாகிடுவார். அப்பாவோட ·ப்ரெண்ட்ஸ், ஆலோசகர்கள்ன்னு எனக்கு யாரையும் தெரியாது. ஸோ, எனக்குத் தெரிஞ்ச சில நண்பர்கள் உதவியோட, இதையெல்லாம் நானே கத்துக்க முயற்சி பண்ணினேன், புஸ்தகத்தில படிச்சதையெல்லாம் உடனடியா செயல்படுத்திப்பார்க்கத் துடிச்சேன்'

'இதெல்லாம் கேட்கிறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா, யதார்த்தத்தில சரிப்படுமா பாலா?'

'இந்த ஒரே ஒரு சந்தேகத்தினால நாம் வாழ்க்கையில எவ்ளோ விஷயங்களைத் தவறவிட்டுடறோம் தெரியுமா?', இப்போது பாலாவின் குரலில் தீவிரம் சேர்ந்துகொண்டிருந்தது, 'இது சரிப்படுமா-ன்னு சந்தேகப்படற நேரத்திலே, தைரியமா அதை முயற்சி செஞ்சு பார்த்துடறது பெட்டர்ங்கறது என்னோட கட்சி'

'சரி, நீ முயற்சி செஞ்சாச்சு, ஆனா, அதுக்குப் பலன்?'

'சில சமயங்கள்ல கிடைச்சது, பல சமயங்கள்ல கிடைக்கலை. ஆனா அதுக்கெல்லாம் சோர்ந்துபோய் உட்கார்ந்துகிட்டிருந்தா, ஒரே இடத்தில முடங்கிக் கிடக்கவேண்டியதுதான், காலம் நம்மைத் தாண்டிப் போய்கிட்டே இருக்கும்'

'அப்படீன்னா, இனிமே காலம்முழுக்க இந்த ·பேக்டரிதான்-னு முடிவு செஞ்சுட்டியா?', நாகராஜனின் கேள்வியில் கொஞ்சம் கேலி, கொஞ்சம் சவால் விடும் தோரணை.

'ம்ஹ¥ம், இல்லவே இல்லை', மறுப்பாகத் தலையசைத்தான் பாலா, 'அதான் சொன்னேனே, ஒரே இடத்தில முடங்கிக் கிடக்கறது எனக்குப் பிடிக்கலை, நான் எப்பவும் அடுத்தடுத்த கட்டங்களைத் தேடிகிட்டேதான் இருக்கப்போறேன்'

'அப்படீன்னா?'

'இந்தக் கேள்விக்கு ஒரே வாக்கியத்தில உடைச்சு பதில் சொல்றது சிரமம்', என்று சிரித்தான் பாலா, 'நிறைய திட்டங்கள் இருக்கு, உதாரணமா, இந்த ஊர்லயே சின்னதா ஒரு சா·ப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்'

இதைக் கேட்டதும் லட்சுமணன், நாகராஜன் முகங்களில் படர்ந்த அதிர்ச்சி, பாலாவுக்குச் சிரிப்பு மூட்டியது, 'ஏம்ப்பா ஷாக் ஆகறீங்க? நம்மால சா·ப்ட்வேர்ல வேலை பார்க்கமுடியும், கம்பெனி நடத்தமுடியாதா என்ன? இந்தக் கம்பெனிமாதிரியே, அதையும் இப்படி ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவரமுடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு'

'சரி, அதுக்கப்புறம்?'

'வேற ஏதாவது ஒரு 'அடுத்த கட்டம்' எனக்காகக் காத்திருக்கும் மச்சி, இல்லாட்டி, நானே அதைத் தேடிக் கண்டுபிடிப்பேன்', என்று புன்னகைத்தான் பாலா, 'வாழ்க்கை எப்பவும் ஒரு புள்ளியில போய் நின்னுடறதில்லை. ஒருவேளை அப்படி நின்னுட்டா, அந்த விநாடியிலயே நாம செத்துப்போய்ட்டோம்ன்னு அர்த்தம், மேலே மேலே போய்கிட்டிருக்கிறதுதான் நாம இன்னும் உயிர் வாழறதுக்கான ஒரே சாட்சி'

நாகராஜன், லட்சுமணனின் சங்கடமான மௌனத்தை பாலாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் நடுவே வந்து அமர்ந்தபடி, இருவர் தோள்களிலும் உரிமையோடு கை போட்டுக்கொண்டான், 'மாசம் பொறந்தா சம்பளம், வருஷத்துக்கு ஒரு ப்ரமோஷன், இன்க்ரிமென்ட்ன்னு சின்ன வட்டம் போட்டுக்காம, என் வாழ்க்கையை சுவாரஸ்யமாவும் வெற்றிகரமாவும் அமைச்சுக்கற தந்திரம் எனக்குப் புரிஞ்சுபோச்சு, நீங்களும் ஆட்டத்துக்கு வர்றீங்களா?'

(முற்றும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors