தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : புதையல் தீவு [பாகம் : 3]
- பா.ராகவன்

பன்றித்தீவில் இறங்கியதுமே பாலுவுக்கு உற்சாகம் பெருகிவிட்டது. வெண்ணெய் மாதிரி இருந்தது அந்தத் தீவின் மணல். கால் புதையப் புதைய நடந்துகொண்டும் ஓடிக்கொண்டுமே இருக்கலாம் போலிருந்தது. பத்தடிக்கு ஒரு காட்டு மரமும் பறந்தோடும் சிறு குருவிகளும் தொலைவில் மட்டுமே தென்படும் வெண்நாரைகளும் கடலின் இரைச்சலுமாகச் சேர்ந்து அவன் பரவசத்தை அதிகரித்துக்கொண்டிருந்தன. அடடா, வாழ்ந்தால் இந்தமாதிரி ஒரு ஊரில் அல்லவா வாழவேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் தீவில் மனிதர்கள் யாரும் வாழ்வது மாதிரியே தெரியவில்லை. மகாலிங்க வாத்தியார் சொன்னார்: "இங்க பொதுவா வீடுகள் கிடையாது. சில மீனவர்கள் மத்தியான நேரங்கள்ள இளைப்பாற வருவாங்க. சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிட்டுப் போவாங்க. மத்தபடி ஆள் நடமாட்டமில்லாத தீவு இது"

"அப்ப நாம எதுக்கு சார் வந்திருக்கோம்?" என்று கேட்டான் பன்னீர் செல்வம்.

"சும்மா ஒரு சேஞ்சுக்குன்னு வெச்சிக்கங்க. ஆள் நடமாட்டம் இல்லாத தீவு எப்படி இருக்கும்னு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா?"

"ஆமா சார், ஆமாசார்" என்று பலபேர் குரல் கொடுத்தார்கள்.

இரண்டு மணிநேரம் சாரணர் வகுப்புகள் மிகத் தீவிரமாக நடந்தது. ஓடச் சொல்லியும் குதிக்கச் சொல்லியும் உடற்பயிற்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார் மகாலிங்க வாத்தியார்.

"குண்டா! நல்லா ஓடுடா. வேத்துவிடணும். மூச்சு இறைக்கணும். அப்பத்தான் இளைப்பே. அப்பத்தான் நீச்சல் கத்துக்க முடியும். அப்பத்தான் நீஞ்சியே இங்க நீ அடிக்கடி வரவும் முடியும்" என்றார்.

"சான்ஸே இல்லை சார். இந்தத் தீவு கடலோர காவல்துறை கட்டுப்பாட்டுல இருக்காம். யாரும் சுலபமா வர முடியாதாம்" என்றான் பாலு.

"உனக்கு எப்படிடா தெரியும்?"

"வரும்போது அந்தப் படகுல வந்தாரே ஒரு ஆபீசர், அவர்கிட்டே கேட்டேன்"

"அடடே, வெரிகுட். தகவல்களை சேகரிக்கறது நல்ல பழக்கம்." என்றார் மகாலிங்க வாத்தியார்.

சாரணர் பயிற்சி வகுப்புகள் ஒருவாறு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு சுடச்சுட மதிய உணவு வழங்கப்பட்டது. புளியோதரைப் பொட்டலங்களும் தயிர்சாதப் பொட்டலங்களும். கீழ இரைக்காம சாப்பிடணும் பசங்களா" என்றார் வாத்தியார்.

"மண்ணுதானே சார்!"

"மக்கு. மண்ணுதான். ஆனா எவ்ளோ சுத்தமா இருக்குப் பாரு. இதுல சாதத்தைக் கொட்டினா உனக்கே பார்க்க அசிங்கமா இருக்காது!"

"அது... ஆமா சார்."

பாலு நைஸாக இரண்டு இரண்டு பொட்டலங்கள் எடுத்துக்கொண்டு சாப்பிடத் தனியாகப் போனான். கடலோர மணல் வெளியைத் தாண்டியதுமே வரிசையாக நிறைய காட்டு மரங்கள் வரத்தொடங்கியிருந்தன. அடர்ந்த, அடிப்பகுதி பருத்த மரங்கள்தான் அனைத்துமே. "இந்தத் தீவுல இருக்கற பல தாவரங்கள் மருத்துவ குணம் மிக்கவை. அதுங்களைப் பராமரிக்கறதுக்காகத்தான் இதை பாதுகாக்கப்பட்ட பகுதியா அரசாங்கம் வெச்சிருக்கு" என்று கடலோர காவல்துறை அதிகாரி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

பாலுவுக்கு அந்தத் தீவை முழுவதுமாகச் சுற்றி வரவேண்டும் என்று விருப்பம் எழுந்தது. மொத்த பரப்பளவே ஒன்றரை கிலோமீட்டர்தான் என்று சொல்லியிருந்தார்கள். கடற்கரை ஓரமாகவே சுற்றி வந்தால் ஐம்பது நிமிடத்தில் சுற்றிவிடலாம் என்று கேள்விப்பட்டிருந்தான். ஒரு ரவுண்டு போகலாமா என்று நினைத்தான். வாத்தியார் உதைப்பார் என்று பயமாகவும் இருந்தது. யாராவது நாலு பசங்கள் உடன் வந்தால் தைரியமாகப் போகலாம். அல்லது மகாலிங்க வாத்தியாரையே கூட அழைத்துப் போகச் சொல்லலாம். அவர் கூட வருகிற பட்சத்தில் கடலோரமாக என்ன, மரங்களின் ஊடே புகுந்தே போகலாம். காட்டுக்குள் பயணம் செய்வதுஎப்பேர்ப்பட்ட அனுபவம்!

இவ்வாறு நினைத்துக்கொண்டே சுமார் இருபதடி தூரம் நடந்திருப்பான். சட்டென்று சூரிய வெளிச்சம் மிகவும் மங்கி, மரங்கள் மிகவும் அடர்த்தியாக மூடியிருப்பதை உணர்ந்தான். எங்காவது புலி, கரடி என்னவாவது வந்துவிடுமோ என்று ஒருகணம் அச்சமாக இருந்தது. உடனே 'சேச்சே. அந்தமாதிரி இடத்துக்கெல்லாம் அழைத்துவரமாட்டார்கள்' என்றும் நினைத்துக்கொண்டான். திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்த வேளையில் இடைவேளை நேரம் இன்னும் நிறையவே மிச்சமிருக்கிறது என்பதும் நினைவுக்கு வந்தது. நடந்தவாக்கிலேயே சாப்பிட்டு வந்தவனுக்கு, பொட்டலங்கள் தீர்ந்ததும் தண்ணீர் வேண்டும்போலிருந்தது. அடடே, தண்ணீரை மறந்துவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டான்.

வேறு வழியில்லை. திரும்பித்தான் ஆகவேண்டும் என்று அலுத்துக்கொண்டே திரும்பியவனுக்கு சடாரென்று இன்னொரு யோசனையும் உதித்தது. என்னதான் தீவு என்றாலும் கடலுக்கு நடுவே இருப்பதென்றாலும் இத்தனை தாவரங்கள், மூலிகைகள் முளைக்கும் இடத்தில் தண்ணீர் இருக்காதா என்ன? ஒரு பத்து நிமிஷம் மேற்கொண்டு சுற்றிவிட்டுத் திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு மேலே நடந்தான்.

நடக்க நடக்க கானகம் மிகவும் இருண்டுகொண்டே வந்தது. வெளிச்சம் துளியும் இல்லாமல் வெறும் கடலின் இறைச்சல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு லாங்-ஜம்ப் செய்தால் கடல் வந்துவிடும் என்றுதான் நினைத்தான். ஆனால் அக்கம்பக்கத்தில் மரங்கள்தான் கூடிக்கொண்டு வந்தனவே தவிர கடலைக் காணோம். ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தான். வந்த பாதை சரியாகவே தெரிந்தது. ம்ஹும். ப்ரச்னை இல்லை. எப்படியும் பத்திரமாகத் திரும்பிவிடமுடியும்!

ம்மே என்று குரல்கொடுத்துக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி அவனைத் தாண்டி, தாவிப்போனது. சில பறவைகளின் குரல் க்ரீச்க்ரீச்சென்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. ரசித்தபடியே மேலும் நடந்தவன் சற்று தூரம் போனதும் வலப்புறம் கொஞ்சம் தள்ளி தொலைவில் ஒரு பாழடைந்த வீடு இருப்பதைக் கண்டான். உடனே அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. மனிதர்களே இல்லாத தீவில் வீடு மட்டும் எப்படி இருக்கிறது? யார் கட்டியிருப்பார்கள்? எப்போது கட்டியிருப்பார்கள்?

ஆவல் அதிகரிக்க, அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அது மிகப்புராதனமான வீடு போலிருந்தது. முன்புறம் பாதிக்கு மேல் உடைந்து, உதிர்ந்திருந்தது. பழுப்பாகிப்போன கருப்புப் பலகை ஒன்று உடைந்து ஒரு ஓரமாகக் கிடைந்தது. அதில் 'கடலோர..' என்கிற வார்த்தை மட்டும்தான் படிக்கும்படி இருந்தது. மற்றதெல்லாம் அழிந்திருந்தது. ஓஹோ, இது அரசாங்கக் கட்டடம்தான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். ஆனால் யாரும் உள்ளே இருந்து வேலை பார்ப்பதாகத் தெரியவில்லை. கதவு பூட்டப்பட்டிருந்தாலும் ஜன்னலெல்லாம் முழுவதுமாக உடைந்து கட்டடத்தின் உள்புறம் முழுவதுமே பார்க்கும்விதத்தில் இருந்தது.

கிட்டே போய் எட்டிப்பார்த்தான். நின்று கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி, அந்தப் பாழடைந்த கட்டடத்தை ஒருமுறை சுற்றி வந்தான். ஒரு ஆபீஸ் இங்கே இருந்திருக்கிறது என்றால் ஒரு குழாய் இருக்காதா என்ன? ஆபீஸ் இல்லாவிட்டாலும் அந்தக் குடிநீர்க் குழாய்க்கு இப்போது உயிர் இருக்காதா என்ன?

அவன் எதிர்பார்த்தபடியே அந்தக் கட்டடத்தின் பின்புறம் சுவரை ஒட்டியபடி ஒரு பிளாஸ்டிக் பைப் அழுக்கேறிக் கிடந்தது. பைப்பின் மறுமுனை ஒரு குழாயில் சொருகப்பட்டிருந்தது! அப்படிப்போடு! அவன் ஆர்வமுடன் குழாயைத் திறந்துபார்த்தான். ஆஹா, தண்ணீர் வருகிறதே!

ஆனால் குடிக்க முடியாதபடி நீர் உப்பாக இருந்தது. எனவே, அவன் வெறுமனே கைகளை மட்டும் கழுவிக்கொண்டு, முகத்தையும் தண்ணீர் அடித்து புத்துணர்ச்சி ஏற்றிக்கொண்டான். மறுபடியும் குழாயை மூடியபோதுதான் அந்தச் சத்தம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

யாரோ பேசுவது போலல்லவா இருக்கிறது? இந்த இடத்தில் யார் இருப்பார்கள்? அதுவும் பாழடைந்த பழைய அலுவலகம்!

இரண்டு அடுக்குகளாக இருந்த அந்தக் கட்டடத்தின் மாடிக்குப் போகும் படிகள் உடைந்து சிதிலமாகியிருந்ததை முன்புறத்தில் நின்றபோதே அவன் கவனித்திருந்தான். ஆனால் மாடியிலிருந்து இப்போது பேச்சுக்குரல் வருகிறது! யாராக இருக்கும்? பூட்டிக்கிடக்கும் கட்டடத்துக்குள் எப்படி அவர்கள் நுழைந்து, உடைந்த மாடிப்படி ஏறி மேலே போயிருக்க முடியும்? ஜன்னல் வழியாகப் போக முடியும்தான். ஆனால் கதவைத் திறக்காமல் ஜன்னல் வழியே எகிறிக்குதித்து உள்ளே போய், மாடி ஏறி ரகசியமாகப் பேசுபவர்கள் நிச்சயம் கடலோரக் காவல்படை அதிகாரிகளாக இருக்கமுடியாது!

என்ன செய்யலாம்? அவனுக்குக் கொஞ்சம் திகிலாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருந்தது மாடியிலிருந்து வந்த அந்த கிசுகிசுப்புப் பேச்சு. திரும்பிப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் அப்படி என்னதான் அவர்கள் பேசுகிறார்கள்? நின்று கேட்டால்தான் என்ன என்றும் தோன்றியது.

ஒரு முடிவுக்கு வந்தவனாக விறுவிறுவென்று அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு முன்புறம் போனான். உடைந்து கிடந்த ஜன்னலில் ஏறி உள்ளே குதித்தான். கீழே தரை உடைந்து மண்ணும் சிமெண்டுமாக இருந்தது. பழையகால மேசை நாற்காலிகள் இரண்டும் உடைந்து ஒரு ஓரத்தில் கிடந்தன. மாடிப்படியோரம் போய் நின்றவன், மேலே ஏறலாமா என்று யோசித்தான். அது மரப்படி. ஏறினால் சத்தம் வரும் என்பதால் அங்கேயே நின்று காதைத் தீட்டிக்கொள்ள முடிவு செய்தான். இரண்டு நிமிடங்கள் அமைதி காத்ததும் பேச்சு துல்லியமாகக் கேட்டது. மாடியில் இரண்டு பேரல்ல; மூன்று பேர் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது!

"இன்னிக்கு ராத்திரி நாம கிளம்பறோம். திரும்பி வர சரியா அஞ்சு நாள் ஆகும். அதாவது அடுத்த புதன்கிழமை நாம திரும்பி இங்க வரோம். அதுக்குள்ள நமக்கு இங்க புதையல் இருக்கற இடத்தோட ப்ளூ - ப்ரிண்ட் கிடைச்சுடும். அடுத்த புதன்கிழமைங்கறது அமாவாசை தினம். அன்னிக்கு ராத்திரியே தோண்டி எடுத்துக்கிட்டு படகு பிடிச்சா, விடியற நேரம் அங்க போய்ச் சேர்ந்துடலாம்..."

ஒருத்தன் பேசிக்கொண்டிருக்க, மற்ற இருவரும் 'உம்' 'உம்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலுவுக்கு மூச்சிறைத்தது. இதென்ன, கதைகளில் வருவது மாதிரி, புதையல், அமாவாசை என்று என்னென்னவோ பேசுகிறார்கள்! யார் இவர்கள்? கொள்ளைக்காரர்களா? இந்தக் காலத்தில் புதையலெல்லாம் கூட இருக்குமா என்ன? யார் புதைத்து வைத்திருக்கிறார்கள்? அந்த விவரம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அதென்ன அஞ்சு நாள் கணக்கு?

குழப்பமும் பயமும் அவனைக் கவ்விக்கொண்டன. மிகவும் வியர்த்தது. சாப்பிட்ட இரண்டு பொட்டலம் புளியோதரையும் ஜீரணமாகிவிட்ட மாதிரி இருந்தது. இங்கிருந்து முதலில் போய்விடலாம் என்று நினைத்தான். அவன் திரும்பியபோது தோளில் ஒரு கை விழுந்தது.

அதிர்ந்து திரும்பிய பாலுவுக்குத் தன்னைத் தொட்டவனைப் பார்த்ததும் அதிர்ச்சி இருமடங்கானது!

Copyright © 2005 Tamiloviam.com - Authors