தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வேண்டியது வேறில்லை [பாகம் : 4]
- ஜெயந்தி சங்கர்

இரண்டு வாரங்களாக ஏற்பாடுகள் செய்து, நெருங்கிய உறவினர்கள் மற்றும் சிநேகிதர்களை மட்டுமே அழைப்பதாகத் திட்டமிட்டும் கூட கிட்டத்தட்ட நூறுபேர் வந்துவிட்டிருந்தனர். 'ஆனந்த பவ'னிலிருந்து ஏராளமான உணவு வகைகள் தருவிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து ருசிபார்த்தாலே வயிறு நிரம்பிவிடும். அத்தனை வகை. மூன்று மணி நேரமாய் சிரிப்பு, கும்மாளம், கைகுலுக்கலுமாகக் கழிந்தது மாலை.

தீபக்கும் விருந்துக்கு வந்திருந்தான். ப்ரியாவைப் பார்த்து, "ஹாய்", என்றுமட்டும் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் பேசப் போய்விட்டான். இதே 'ஹாய்' ரகு இல்லாமல், ப்ரியா தனித்திருக்கும் போது அவள் மேல் விழாத குறையாக செயற்கையான ஏற்ற இறக்கத்தோடு குழைவாய் வரும். அதற்குப் பிறகு, தீபக்கின் கண்கள் திருட்டுப்பார்வையோடு ப்ரியா இருந்த திக்கிற்கே சென்று சென்று மீண்டன. கிட்டப்போய் மட்டும் பேசவில்லை. அவன் ரகு இருந்த திக்கைக் கவனமாகத் தவிர்த்ததும் தெரிந்தது.

ரகு இருக்கும் போது ப்ரியாவிடம் அவன் பேசுவதற்கும், ரகு இல்லாதபோது அவன் அவளிடம் பேசுவதற்கும் எத்தனை பெரிய வித்தியாசம். அதைப் புரிந்துகொள்ள ஏன் ப்ரியாவினால் முடியவில்லை என்று தான் செல்விக்குப் புரியவில்லை. வெள்ளை மனம் கொண்ட ப்ரியாவால் உணர முடியவில்லையா, இல்லை தன் எண்ணங்களில் தான் குறையோ என்று பலவாறாக எண்ணிக் குழம்பினாள். இவனைப்பற்றி ஏன் ரகு ப்ரியாவின் அக்காவோடு பேசாமலே இருக்கிறார் என்றுதான் புரியவேயில்லை. ஒரு வேளை பிரச்சனையைத் தன் கட்டுக்குள்ளேயே வைத்துத் தீர்வு காண எண்ணமோ என்னவோ.

விருந்துக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாய்ச் சுழன்றதில் செல்வியின் கால்கள் இளைப்பாறச் சொல்லிக்கெஞ்சின. சாமான்கள் இரைந்துகிடந்த வீட்டைச் சுத்தம் செய்யவேண்டும் என்று எண்ணும்போதே அதுவரை தோன்றாத அசதி அவளுள் கவிந்தது. உபயோகித்து எறியப்பட்ட ப்ளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களுமாக கருப்பு ப்ளாஸ்டிக் கார்பேஜ் பைகள் நிறைந்துவிட்டிருந்தன. அவற்றைத் தூக்கிக் கொண்டுபோய் அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் வைத்துவிட்டால் காலையில் பங்க்ளாதேஷி துப்புரவாளர் பார்த்துக் கொள்வார். ஆனால், அறையெங்கும் குழந்தைகள் சிந்தியிருந்த 'கோக்'கும் இரைத்திருந்த உணவுத் துகள்களும் செல்விக்காகக் காத்திருந்தன. குறைந்தது ஒரு மணிநேர வேலை இருந்தது.

"செல்வி, சாப்பாடு எல்லாம் தீர்ந்துடுச்சா?", என்று செல்வியிடம் கேட்டபடியே சமையலறைக்குள் வந்தார் பட்டுப் புடைவையைக் களைந்து, வீட்டு உடுப்பிற்கு மாறியிருந்த ப்ரியா. "இல்ல மேடம். அந்த தந்தூரி சிக்கன், 'பட்டர் நான்' மட்டும் நெறைய மிஞ்சிப்போச்சு. மிச்சதெல்லாம் கிட்டத்தட்ட தீந்துபோச்சு", என்ற செல்வியிடம்," இதையெல்லாம் என்னலா செய்யறது?", என்று பத்து வயதுக் குழந்தையாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். "·ப்ரிஜ்லயும் அதிக இடமில்ல. வச்சாலும் கூட இவ்வளவையும் நாம எப்பிடி மேடம் தீர்க்கப்போறோம். தெரிஞ்சவங்க எல்லாரும் விருந்துக்கு வந்துபோயாச்சு. வேணா எதிர்த்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல இருக்கறவங்களுக்குக் கொடுத்துடுவோமா?", என்று யோசனை சொன்னாள் செல்வி.

"சரி, நல்ல ஐடியா. எல்லாத்தையும் அப்படியே அலுமினியம் ·பாயில் போட்டு மூடிடு. ரெண்டு ப்ளாஸ்டிக் 'பேக்'ல கவனமா எடுத்து வை. நா ரகுவக் கூடவரசொல்றேன். போயி குடுத்துடு செல்வி. நாளைக்கோ ஞாயிற்றுக்கிழமை. நீ வேணும்னா உனக்கு வேண்டியத எடுத்து ப்ரிட்ஜ்ல வச்சிக்கோ", என்றபடி அறையிலிருந்த ரகுவைக் கேட்கப்போய் விட்டார்.

செல்வி சின்னப் பாத்திரங்களில் கொஞ்சகொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டாள். மீதியை அழகாக மூடி ப்ளாஸ்டிக் பைகளில் வைத்து வாயிலைக் கடந்து செருப்பை மாட்டிக்கொண்டு நின்றாள். ரகு வேண்டாவெறுப்புடன் வந்தார். அவர் முன்னே நடக்க செல்வி பின்னால் பைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.

மணி இன்னும் பத்தாகியிருக்கவில்லை. லி·ப்டிலிருந்து அவர்கள் வெளியேறியதுமே, கடைசி மாடிப்படியின் கீழ் அரவம் கேட்டது. ஒரு பெண்ணும் ஆணும் விரைந்து சுருட்டிக் கொண்டோடுவது தெரிந்தது. ஒரே நொடியில் தன் கவனத்தைத் திருப்பிவிட முடிந்த ரகுவைப்போல செல்விக்கு முடியவில்லை.

வந்த புதிதில் பொது இடங்களில் சில ஜோடிகள் சர்வசகஜமாய் ஒட்டி உராய்ந்து, கட்டிப்பிடித்துக் கொஞ்சிக்கொண்டும்,  முத்தமிட்டுக்கொண்டும் நிற்பதைப்பார்த்த போதெல்லாம் செல்விக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. திரையே இல்லாமல் சினிமா பார்க்கும் உணர்வு உள்ளுக்குள். ப்ரியா சொல்லிச் சொல்லிதான் வெறித்துப் பார்ப்பதையும் சிரிப்பதையும் கவனமாய் தவிர்க்கக் கற்றுக் கொண்டாள்.

 ஒருமுறை மதியம் அடுக்குமாடிக்கட்டிடத்தின் கீழ்த்தள இருக்கையில் பள்ளிச்சீருடையில் இருந்த பதிநான்கு வயதே நிரம்பியிருக்கக்கூடிய ஒரு பெண், அதே வயதுடைய பையனின் மடியில் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் செல்விக்குப் பெரும் அதிர்ச்சி ! ஊரில் இருந்த தன் தம்பி கதிர் வயதேயிருந்தான் அந்தப்பையன். அந்தச் சிறுமியோ தன் தங்கை மீனாவை விட சில வருடங்களே இளையவள். அன்று முழுவதும் ஏனோ செல்விக்கு மனது நெருடலாகவேயிருந்தது.

வீட்டு நினைவும் வந்தது. அவளுக்குப் படிப்பைப் பிடித்த அளவிற்குப் படிப்புக்கு அவளைப் பிடிக்கவில்லையென்று மனதைத் தேற்றிக்கொள்ளத் தலைப்பட்டவள், எப்படியாவது தன் தம்பி தங்கை இருவரையுமாவது படிக்க வைக்கவேண்டும் என்று செல்வி தீவிரமாயிருந்தாள்."எப்பிடிக்கா அங்க ஒரு மாடு கூட இல்லன்ற, பால் மட்டும் கெடைக்குது?", என்று தம்பி கேட்ட கேள்வி நினைவில் மோத செல்வியின் முகத்தில் சிரிப்பு விரிந்தது.

கட்டடத்தளத்தில் இருந்த தமிழர்களும் பங்க்ளாதேஷியும் கொடுத்த உணவை தயங்கிக் கொண்டே வாங்கிக்கொண்டனர்.
ரகுவும் செல்வியும் வீட்டை அடைந்ததுமே ப்ரியா," செல்வி சரவணன் போன் செஞ்சிருந்தாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல மறுபடியும் அடிக்கறேன்னிருக்காரு", என்றதுமே ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடலசதி பறந்துவிட, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போலுணர்ந்தாள் செல்வி. சமையலறையில் வேலையில் கவனம் செலுத்த முடியாமலேயே இயந்திரத்தனமாய் செய்தபடியே தன் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு போனின் வரவுக்குக் காத்திருந்தாள். அவன் செல்போன் வத்துக் கொள்ளாததன் அசௌகரியம் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.

இரண்டு வருடங்களாகவே சரவணனை சீக்கிரம் மணமுடிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருந்தார்கள் அவர்கள் வீட்டில். செல்விக்கோ அவள் அம்மா தன் அண்ணன் மகனை முடிக்க நினைத்திருந்தாள். சௌதியில் டிரைவர் வேலையில் இருக்கும் சிவாவிற்கு அதில் உடன்பாடா என்றே தெரியாது அவளுக்கு. ஆனால், அதை நினைத்தாலே அவளுக்கு வயிற்றைக் கலக்கும். எப்படியாவது செல்வியின் அம்மாவையும் பார்த்துப் பேசிவிடத்தான் திட்டமிட்டிருந்தான் சரவணன். திருவாரூரிலிருந்து பேராவூரணிக்கு ஏற்கனவே போயிருக்கவேண்டும். எப்படியும் அம்மாவிடம் சொல்லி கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கிவிடுவதாகச் சொல்லி விட்டுத்தான் போயிருந்தான் சரவணம். அது விஷயமாகத் தான் அழைத்திருப்பானோ. 

போன் அடித்தது. கையில் இருந்த துடைப்பத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடிப்போய் போனை எடுத்தாள் செல்வி.
போன் தீபக்கிடமிருந்து. ப்ரியாவைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். வழக்கத்திற்கு அதிகமாக ப்ரியா பேசிக்கொண்டே இருந்தது எரிச்சலாக இருந்தது. சரவணன் போன் செய்ய முயற்சிப்பானே, என்று குடைந்தெடுத்தது.

"வேற யாரெல்லாம் வராங்க? அப்டியா, சரி,.ம்,. ஓகே, நாம ஆர்சார்ட் எம் ஏர் டீயில மண்டே ஈவ்னிங் ஆறு மணிக்கு மீட் பண்ணுவோம். ", என்று ஒரு வழியாக போனை வைத்தார். தீபக் பெரிய ஷாருக்கான் என்ற நினைப்பில் மிதப்பான். உண்மையில் ஷாருக்கானை விடவும் பார்க்க நேர்த்தியாகவேயிருப்பான். ஆனால், குணம் தான் சரியில்லை. சிலமாதங்களுக்கு முன்பு ஒருநாள், ப்ரியா விடுப்பெடுத்திருந்தார். அதுமட்டும் எப்படித்தான் தெரியுமோ அவனுக்கு. வேலையே கிடையாதோ, அலங்காரமாக உடுத்தவே ஏகப்பட்ட செலவாகுமே என்றெல்லாம் செல்வி அடிக்கடி நினைத்துக்கொள்வாள். போன் அடித்துவிட்டு வந்துவிட்டிருந்தான். ப்ரியா அவனுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். வெளியே கிளம்பவிருந்தார்கள்.

காபிக்கு சக்கரை தீர்ந்துவிட்டிருந்ததால், செல்வி கடைக்குச் சென்றாள். அவள் திரும்பி வரும்போது பார்த்த காட்சி கோபத்தையும் அதிர்ச்சியையும் அவளுள் கொணர்ந்தது. ப்ரியா அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருக்க, அந்தப் பொறுக்கி தீபக் ப்ரியாவின் அறைக்கதவு துவாரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த செல்விக்கு உடனே அசாத்தியக் கோபம் தான் வந்தது. கத்திக் கதவைத் தட்டி ப்ரியாவிடம் சொல்லி விடலாமென்றுதான் ஆவேசம் கிளம்பியது. ஆனால், செல்வியின் வார்த்தைகளை ப்ரியா நம்புவாரா இல்லை, பெரிய யோக்கியனைப் போல சோபாவில் உட்கார்ந்துவிட்ட தீபக்கை  நம்புவாரா என்ற சந்தேகம் வந்ததுமே நிதானமாக சொல்லலாமா வேண்டாமாவென்று இரண்டு நாட்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டாள். பிறகு, வேண்டாமென்று விட்டுவிட்டாள்.

மீண்டும் போன் அடித்தது. செல்வி பாய்ந்து சென்று எடுத்தாள். "ஹலோ, ஓ, மாமாவா, நல்லா இருக்கீங்களா மாமா? அம்மா எப்பிடியிருக்கு?,..", என்று உற்சாகமாக செல்வி ஆரம்பித்ததுமே," நாங்க எப்பிடி நல்லா இருக்க? இல்ல கேக்கறன்,..ம்? எம்புள்ளக்கி என்னடி கொறச்சல்? ஏதோ ஒரு வேல வாங்கிக்குடுத்தா யோக்கியமா தங்கச்சிகுடும்பம் பொழைக்கிம்னு நெனச்சா, நீ வேலைக்கிப் போன எடத்துல ஆள் தேடறியோ? அடி செருப்பால,..", என்று தொடங்கி வாயில் வந்தபடி கத்தினார்.

பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பதைத்தவிர செல்வியால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. பேசினால் கேட்கும் நிலையில் மாமா இருந்தால் தானே. நேரில் கிடைத்தால் வெட்டிக்கொன்றுவிடும் கோபத்துடன் நிதானமேயில்லாமல் திட்டித்தீர்த்தார்.

மாமா ஒன்றும் கெட்டவரில்லை. ஓரளவிற்கு நியாயஸ்தர் தான். செல்விக்கு அதில் என்றுமே சந்தேகமிருந்ததில்லை. சிவாவிற்குப் பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் மாப்பிள்ளைகேட்டு வந்ததை அவளே அறிவாள். அவனின் திறமைக்கும் நிறத்துக்கும் கம்பீரத்துக்கும் செல்வியின் அருகில் அவன் நின்றால் துடைப்பத்துக்குப் பட்டுக்குஞ்சலம் கட்டியதைப்போல எள்ளளவும் பொருத்தமேயில்லாமல் தான் இருக்கும். அது மாமாவுக்கும் தெரியும். இருந்தாலும், தங்கை மேலிருந்த பாசம் காரணமாயும் உறவு விட்டுப் போகாமலிருக்கவும் மாமா செல்வியையே அவனுக்கு முடிக்க உறுதிபூண்டிருந்தார். அதுமட்டுமில்லை. குடும்பத்தின் அனைவரிடமும் ஏற்கனவே சொல்லவும் செய்திருந்தார். தன் அபிப்ராயத்தைச் சொல்ல சிவாவிற்கு வாய்ப்பே கொடுக்கபடவில்லை. கேட்டறிந்துகொள்ள நினைத்த செல்விக்கு ஊரிலிருந்து கிளம்பும் வரை சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

அப்பா இறந்தபோது செல்விக்கு பத்து வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. மாமா தன் குடும்பத்துடன் தங்கை குடும்பத்தையும் தோளில் சுமந்து வந்துள்ளார். எட்டுவருடங்களுக்கு அந்தச் சுமைகளுக்காக ஒவ்வொரு மாதமும் சிங்கப்பூருக்குக் 'குருவி'யாகப் பறந்து, கொண்டுவந்த பொருட்களை மீண்டும் தோளில் சுமந்து, சிங்கப்பூரில் வீடுவீடாகச் சென்று விற்றார்.

சமீபமாய்த் தான், அதுவும் சிவாவிற்கும் செல்விக்கும் வேலை கிடைத்த பிறகுதான், உடலுக்குச் சற்று ஓய்வு கொடுத்திருந்தார். உள்ளூரிலேயே மற்ற குருவிகள் சிங்கப்பூரிலிருந்து கொணர்ந்த பொருட்களை விற்க ஆரம்பித்திருந்தார்.

ப்ரியா செல்வியின் சம்பளத்தில் பாதியை அவளது வங்கிக் கணக்கிலேயே போட்டுவிட்டு மீதியை அவளது அம்மாவிற்கு அனுப்புவார். சிவாவோ தான் சம்பாதித்ததில் தன் செலவிற்குக் கொஞ்சம் மட்டும் வைத்துக்கொண்டு முழுவதையும் அனுப்பி வந்தான்.

அன்று சரவணனின் போனை எதிர்பார்த்து எதிர்பார்த்து நள்ளிரவு வரை உறக்கமேயில்லாமல் புரண்டாள் செல்வி. ஒரே கனவு. சிங்கப்பூர் வீதிகளில் சாணமிடும் மாடுகளும், திருவாரூர் வீதிகளில் குதித்தோடும் இடுங்கிய கண்களைக் கொண்ட சீனச்சிறார்களும். கனவுகள் ஒரே முரண்களின் மூட்டைகளாக இருந்தன என்று கனவிலேயே செல்விக்குச் சிரிப்பு வந்தது.

ஆழ்ந்த உறக்கமில்லாததால் காலையில் எழுந்ததுமே சுறுசுறுப்பில்லாமல் உணர்ந்தாள் செல்வி. ஞாயிறன்று எல்லோருமே தாமதமாகத்தான் எழுவார்கள். வெளியில் சாப்பிடப்போனாலும் போவார்கள். சிலவேளைகளில் செல்வியும் உடன் போவாள். ஆனால், பெரும்பாலும் வேலையிருந்து விடுவதால் வீட்டிலேயேதான் இருப்பாள்.

"செல்வி, இன்னிக்கி சமைக்காத. வெளிய போயிடலாம் சாப்ட", என்ற ப்ரியாவிடம்," இல்ல, நா ·ப்ரிட்ஜுக்குள்ள இருக்கறத சாப்டுக்கறேன் மேடம். இன்னிக்கு பெட்ஷீடெல்லாம் வேற துவைக்கணும்", என்றதுமே,"அப்ப சரி. ஆமா, சரவணன் போன் செஞ்சாரா?", என்று கேட்டார். இல்லையென்று தலையாட்டவே,"உங்க மாமா என்ன சொன்னாரு?", என்று அக்கறையோடு கேட்டார்.

"கோபத்துல கத்தினாரு. சரவணன் போய் பேசிட்டாரு போலயிருக்கு வீட்டுல. நேர்ல இருந்தா மாமா என்னக் கொலையே செஞ்சிடுவாரு போலயிருக்கு. என்ன ஆகும்னே தெரியல்ல மேடம்",என்று கூறியதுமே, செல்வியின் தோளில் தட்டி, "கவலப்படாத. சரவணன் சமாளிப்பாரு.நல்லவருன்னு உறுதியாத் தெரிஞ்சுதான் நானே உனக்கு சப்போர்ட் பண்ணீனேன், ரிலாக்ஸ், செல்வி, ரிலாக்ஸ்", என்றபடியே குளியலறைக்குள் சென்று விட்டார்.

செல்வி அவர்களோடு வெளியில் போகாததற்கு முக்கிய காரணமே அவள் சரவணனின் போனை எதிர்பார்த்ததுதான். இன்றாவது போன் செய்வானா என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தாள்.

எல்லோருமே கிளம்பி வெளியே சென்றார்கள். போன் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்தறிந்தாள். அவளின் செயல் அவளுக்கே விநோதமாகயிருந்தது. கைகள் தன்னிச்சையாக வேலையில் லயிக்க மனம் இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் தாவித்தாவிக் கொண்டிருந்தது.

துணிகளை எடுத்து உலர்த்தினாள்.

போர்வையை உதறி கழியில் விரித்தாள். அடுத்த வீட்டு இந்தோனீசியப்பணிபெண் சொல்லியிருக்கிறாள். அவள் வேலைக்கு வந்ததிலிருந்து அவளின் முதலாளியம்மா வாஷிங்க் மெஷினை மூடி வைத்து விட்டாளாம். துணிகள் எல்லாவற்றையுமே கையால்தான் துவைக்கவேண்டுமாம். இது தவிர தன் உறவினர் வீட்டு வேலையையும் வாங்கி கொண்டு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூடக் குடுக்காமல் இழுத்தடிப்பார்களாம். பல நாட்கள் அந்தப்பெண்ணுக்கு வயிறு நிறைய உணவுகூட இருக்காதாம்.

எப்போதாவது செல்விக்கு சாப்பாடு இல்லாமல் போனால், மீண்டும் ஏதேனும் செய்துகொள்ளச் சொல்வார் ப்ரியா. செல்விக்கு அதிக வேலை இருந்த நாளென்றால், ரகுவை விட்டாவது உணவகத்திலிருந்து வாங்கி வந்து கொடுத்ததுமுண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாஷிங்க் மெஷின் வேலை செய்யாமல் நின்று விட்டது. இரண்டு நாள் துணையை அப்படியே வைத்திருந்து புது வாஷிங்க் மெஷின் வாங்கி வந்ததும் தான் செல்வியைத் துவைக்கவே சொன்னார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors