தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 7]
- ஆருரான்

தமிழ் மக்களின் பொருளாதரம் மற்றும் கல்வியைச் சீர்குலைத்தல்

சுதந்திரத்துக்குப் பின்னால் தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சிங்களப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்டன, சிங்கள பிரதேசங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்கி சிங்கள முதலாளிகள், வணிகர்கள், தொழிலதிபர்களை உருவாக்கி, தமிழர் மூலவளங்களைப் புறக்கணித்து, சிங்கள மூலவளங்களும் இடங்களும் இன்றித் தமிழர்கள் வாழமுடியாது என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. அதை விடக் கொடுமை தமிழ்ப்பகுதிகளிலுள்ள மூலவளங்களை, உதாரணமாக யாழ்ப்பாணத்துச் சுண்ணாம்புக் கற்களையும், வல்லிபுரத்துக்கண்ணாடி மணலையும், ஆனையிறவு உப்பையும், முருங்கனின் களிமண்ணையும், புல் மோட்டையின் இல்மனைட்டையும், மன்னாரின் மீன்வளத்தையும், வன்னியின் நெல்லையும், மட்டக்களப்பின் கரும்பையும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் சிங்களப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து சிங்களவருக்கு மட்டும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தமையாகும்.

1956 இல் அமலாக்கிய சிங்களம் மட்டும் சட்டம். சிங்களவரல்லாத அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களம் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை உருவாக்கி, சிங்கள மொழி இலங்கையின் அரசகரும மொழியாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிங்களம் தெரியாத தமிழ் ஊழியர்களுக்கு உயர் பதவியும், ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டது. மேலும் அவர்கள் சிங்களம் பயிலாவிட்டால் பதவியிழக்கவும் நேரிட்டது.

தமிழ்ப் பாடசாலைகள் சிங்களமயமாக்கப்பட்டன, சிங்களப் பாடசாலைகள் புதிதாக நிறுவப்பட்டும், தனியார் தமிழ்ப் பாடசாலைகள் உருவாக்க முடியாதவாறும் சிங்கள அரசு சதி செய்தது.

சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தமிழில் கல்வி கற்க முடியாதவாறு செய்து அவர்களைச் சிங்களப்படித்தினார்கள், மேலும் பாடசாலைகளில் இலங்கையின் உண்மையான
வரலாற்றைத் திரிவுபடுத்தி, ஈழத்தீவு முழுவதற்கும் சிங்களவர்களே உரித்தானவர்கள் என்றும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் பொய்ப்பிரச்சாரத்தை கல்வித்திட்டத்தால் செய்து சிங்கள இனவாதத்தை சிங்களக் மாணவர்களின் மனத்திலும், இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற உணர்வைத் தமிழ் மாணவர்களின் உள்ளத்திலும் சிங்கள இனவாத அரசு வளர்த்தெடுத்தது.

இந்தியத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதால், அண்மைக்காலம் வரை அவர்களால் கூலி வேலையைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாதவர்களாகினர். இந்திய வம்சாவளிகொண்ட தமிழர்களின் தொழிற்சாலைகள், சொத்துக்கள், வணிகம் போன்றவை தடுத்து முடக்கப்பட்டன.

1972 இல் தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள சிங்கள மாணவர்களைவிட அதிகளவு புள்ளிகள் பெறவேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இது பின்னர்

தமிழர்களின் எதிர்ப்பால் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது, தமிழர்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டம் முன்னேறிய மாவட்டமாகக்
கருதப்பட்டதால் அங்குள்ள மாணவர்கள் பல்கலைக்கழகம் புக அதிகளவு புள்ளிகள் எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

(தொடரும்..)

Copyright © 2005 Tamiloviam.com - Authors