தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 8]
- ஆருரான்

தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தல்

தமிழர்களை மதரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் பிரித்து, முக்கியமாக முஸ்லீம் தமிழர், மலையகத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று பிரிவுபடுத்தி, அவர்களை ஒன்றிணையாத வண்ணம் பார்க்கின்றது. தமிழ் - முஸ்லீம் கலவரங்களை அதற்காகவே சிங்கள அரசு தூண்டிவிடுகின்றது.

1956.06.05 சிங்களம் மட்டும் என்ற சட்டம் அமலாக்கப்பட்டு சிங்கள மொழி அரசகரும மொழியாக உருவாக்கப்பட்டது. அதனைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா 'இந்தச் சட்டம் நிறைவேற்றி 25 ஆண்டின் பின்னர் தமிழர்கள்
தனிநாடு கோருவார்கள்" என்று கூறினார்.

தமது அதிகாரத்தையும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழந்த ஈழத்தமிழர்கள் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கமுடியாது, என்பதை உணர்ந்து காந்தீய வழியில் சத்யாக்கிரகப் போராட்டத்தை அமைதியாகக் கொழும்பில் மேற்கொண்டனர். ஆனால் என்ன பயன்? அமைதியாக சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை, சிங்கள அரசால் ஏவப்பட்ட ஆயுதம் தரித்த சிங்களக் குண்டர்கள் தாக்கினார்கள், அதைச் சிங்களக் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களைக் கடலில் தூக்கி சிங்களக் குண்டர்கள் தூக்கி வீசினார்கள். அதனைத்தொடர்ந்து நாடளாவிய ரீதியில் தமிழருக்கு எதிரான வன்முறை வெடித்தது. எடுத்ததற்கெல்லாம் தமிழரைச் சிங்கள அரசியல்வாதிகளின் ஏவலின்பேரில் சிங்களவர்கள் தாக்கத்தொடங்கினார்கள்.

1956 ஆகஸ்ட் மாதம் தந்தை செல்வா தலைமையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இலங்கைக்கு கூட்டாட்சி முறையை நிறைவேற்றித் தமிழர் தம்மைத்தாம் ஆளக்கூடியதாகச் சிங்கள அரசு செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஓராண்டுகாலக்கெடு அளிப்பதாகவும், இல்லாவிடின் தொடர்ந்தும் காந்தீய வழிகளில் தமிழர்கள் போராடுவார்கள் எனவும் எச்சரித்தார். அதன்பின்னர், 1957.06.27 பண்டா - செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி பிராந்திய சபைகள் அமைப்பது எனவும், தமிழருக்கு என்று ஒரு பிராந்திய சபையை அமைத்து, அங்கு தமிழில் நிர்வாகம் நடத்தவும், குடியேற்றம், கல்வி, விவசாயம் போன்றவை பிராந்திய சபைகளின்கீழ் வரவும் ஒத்துக்கொள்ளப்பட்டன.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை பெளத்த சிங்கள இனவாதிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்கள அரச அதிகாரிகளும் எதிர்த்தனர். பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து 1957.10.04  திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில் காலி முகத்திடலில் இருந்து கண்டிநோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 1958.09.09 இல் பண்டாரநாயக்கா அரசின் அமைச்சர் விமலா
விஜயவர்த்தனா தலைமையில் திரண்ட பிக்குகள் முதல்மந்திரி பண்டாரநாயக்காவின் இல்லத்தின்முன் செய்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகப் பண்டாராநாயக்கா எழுத்துமூலம் உறுதி அளித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிந்ததும் நாடு முழுவதும் தமிழருக்கு எதிரான கலவரம் மூண்டது. அதில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களது வீடுகளும் கடைகளும் வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பில் மாத்திரம் 10,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு கப்பல்மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors