தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 9]
- ஆருரான்

இந்தக் கலவரத்தை அடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுட்பட 150 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். கலவரத்துக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்ப்பு உணர்வைத் தணிக்கும் நோக்கோடும் தடுப்புக்காவலில் இருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவந்தால் மீண்டும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்றும் அஞ்சிய பண்டாரநாயக்கா தமிழ் மொழி விசேட சட்டத்தை அமல்படுத்தினார். அந்த சட்டம் தமிழ்ப் பிரதேசங்களில் கல்வி, அரச நிர்வாகங்களுக்குத் தமிழை உபயோகிக்கலாம் என்று கூறியது. ஆனால் மீண்டும் பண்டாரநாயக்கா தமிழுக்கு உரிமை கொடுக்கிறார் எனக்கூறி 1959.09.25 இல் சோமராமதேரோ என்ற பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1960 இல் மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 'சிங்களம் மட்டும் சட்டத்தைத் தீவிரமாக அமல் செய்வோம்" எனக்கூறி ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றபோதும் பெரும்பான்மை இருக்கவில்லை. அந்த நேரத்தில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களது
நிஞாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

அதன்பின், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 1960 யூலையில் தேர்தல் நடந்தேறியது. அதில் சிறீலங்காச் சுதந்திரக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. சிறீலங்காச் சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மைப் பலமிருந்ததால், அது தமிழரசுக் கட்சிக்கு அளித்த வாக்குறுதியைக் கைவிட்டுச் சிங்களம் மட்டும் சட்டத்தை அமலாக்குவதிலே முக்கிய கவனம் செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் 1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழர்கள் சதத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பகுதிகளிலும்சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமானது. தமிழீழத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் பங்குகொண்டார்கள். இதுவரையும் நடந்த அறவழிப் போராட்டங்களில் ஈழத்தமிழர்கள் பெருந்திரளாகப் பங்குகொண்ட போராட்டமும் இதுதான் எனக் கூறப்படுகின்றது.

சத்யாக்கிரகப் போராட்டத்தால் தமிழர் பகுதியில் இயங்கிய அனைத்து நிர்வாகங்களும் செயலிழந்தன. இதனால் சிங்கள அரசு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி தமிழீழப் பகுதிக்கு முதல்முறையாக இராணுவத்தை அனுப்பியது. தமிழீழப் பகுதிக்குள் சிங்கள அரசால் அனுப்பப்பட்ட இராணுவத்தினர் சாதாரண தமிழ் மக்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரையும் கடுமையாகத் தாக்கினார்கள். அறவழிப் போராட்டம் நடத்திய தமிழரைத் தாக்கிய சிங்கள இராணுவம் தமிழரின் குரல்வளையை நசுக்கியது. அதன்பின்னர் தமிழ்த்
தலைவர்களைப் பேச்சுமேடைக்கு அழைத்து நிலைமையைத் தணிவுசெய்தது. ஆனால், வழமைபோல் தமிழரின் கோரிக்கைகள் மீண்டும் நிராகரிக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் மக்கள் தனி நாட்டினர் என்பதைக் காட்டும் நோக்குடன் தந்தை செல்வா அவர்கள் தமிழரசு அஞ்சல் சேவையை ஆரம்பித்து வைத்தார். தமிழினம் தனக்கெனத் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. தமிழ் மக்களும் அச்சேவையைப் பயன்படுத்தி தாம் தனியினத்தவர்கள் என்பதை வெளிக்காட்டினார்கள். அந்த நடவடிக்கை தமிழர்களின் விடுதலை உணர்வை வீறுகொள்ள வைத்துவிடும் என எண்ணிய சிங்கள அரசு, தமிழரசுக் கட்சியை அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடை செய்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்து, மீண்டும் இராணுவத்தினரின் கெடுபிடிகளால் அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, மூத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. சி.சுந்தரலிங்கம், சிங்கள அரசு தமிழர் நிலப்பகுதியில் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது என்றும், தமிழ் இனத்தை ஈழத்தீவில் பலவழிகளில் சிங்கள அரசு ஒடுக்க முனைகின்றது என்றும் குற்றம்சாட்டி, தமிழர் தம்மைக் காத்துக்கொள்ள தமிழீழத்தை சிங்கள ஆட்சியின் கோரப்பிடிகளில் இருந்து மீளப்பெற வேண்டும் எனக்கூறி 1959.12.19 இல் "ஈழம் எங்கள் தெய்வம்" என்ற பிரசுரத்தை வெளியிட்டு தனது நாடாளுமன்றப் பதவியையும் துறந்தார். மேலும், ஈழத் தமிழர்கள் தாம் இழந்த நாட்டைப் பெற அறவழிப் போராட்டங்களையும், பிற வெற்றியழிக்கும் போராட்டங்களையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் அப்பொழுது இராணுவ ரோந்துக்களும் கெடுபிடிகளும் மோசமடையப் பீதியடைந்த தமிழ் மக்கள் முன்னர்போல் தமது வெளிப்படை ஆதரவை அறவழியில் வெளிக்காட்ட அஞ்சினர். அதன்பின்னர் அரச வன்முறை மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் முன்னால் அறவழிப் போராட்டங்கள் செல்லுபடியாகாது என உணர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது போராட்டங்களைக் கைவிட்டனர்.

அதன்பின்னர், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எதிர்க்கட்சியினரும் தாம் பதவிக்கு வந்தால் நல்ல தீர்வைத் தருவதாக வழமைபோல் இனிக்க இனிக்கப் பேசினார்கள்.

(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors