தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : அடுத்த கட்டம் [பாகம் : 9]
- என். சொக்கன்

'சார், ஒரு சின்ன யோசனை'

துறுதுறுப்பாகத் தன் முன்னே வந்து நிற்கும் கார்த்திகேயனைக் கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு பார்த்தார் அந்த சூபர்வைஸர். எதற்கோ ஒருமுறை கடிகாரத்தில் நேரம் பார்த்துக்கொண்டு, 'என்ன விஷயம்?', என்றார் கடுகடுப்பாக.

'இந்த வால்வ் தயாரிக்கிறதுக்கு மொத்தம் ஏழு ஸ்டெப் இருக்கு ஸார். இதுக்கு மொத்தம் தொண்ணூறு நிமிஷமாகுது', தன் கையிலிருந்த இயந்திர பாகத்தைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான் கார்த்திகேயன்.

'அதுக்கென்ன?', அவருடைய குரலில் தட்டுப்பட்ட கோபம் கார்த்திகேயனுக்கு வியப்பாக இருந்தது. அதன்பிறகு, தொடர்ந்து பேசத் தயங்கினான் அவன்.

இந்தக் கம்பெனியில் எல்லோரும், அரை நிமிடத்துக்குள் எதிலும் சலிப்படைந்துவிடுகிறார்கள். அதற்குமேல் நின்று பேசுகிறவர்கள், நேரத்தை வீணடிக்கிறவர்களாகக் கருதப்படுகிறார்கள். 'ஒழுங்கா வேலையைப் பாரு' என்று அதட்டுகிறார்கள்.

அதிலும், புதிதாகச் சேர்ந்திருப்பவர்களின் நிலைமை ரொம்பவே மோசம். காலேஜில் ராக்கிங் செய்வார்களே அந்தமாதிரி, பழம்பெருச்சாளிகள் அவர்களை விரட்டுவதிலேயே நேரம் கரைக்கிறார்கள், 'எப்பப் பார் வெட்டிப் பேச்சு, இதுங்களையெல்லாம் வேலைக்குச் சேர்க்கலை-ன்னு யார் அழுதாங்க?', என்று நேற்று ஒருவர் வெளிப்படையாகவே அலுத்துக்கொண்டார்.

தொழிற்சாலை என்றால், பேச்சே கூடாது. வேலை, வேலை, வேலைமட்டும்தான். ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும் இத்தனை பொருள்களைத் தயாரித்தாகவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. மெஷினோடு மெஷினாக அவற்றைச் செய்து குவித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவர்கள்மட்டுமே உலகோத்தம ஊழியர்கள்.

கார்த்திகேயனின் பாலிடெக்னிக் கல்லூரிக்குப் பக்கத்தில், ஒரு சிறிய மாட்டுப் பண்ணை இருந்தது. முப்பது ஆண்டுகளாக அதை நடத்திவருகிற 'முதலாளி'யின் முகமும், உடல் மொழியும், கிட்டத்தட்ட ஒரு கொழுத்த கறவை மாட்டைப்போலவே மாறியிருந்தது.

'அதிகம் வேணாம். ரெண்டே ரெண்டு வருஷம் இந்த மாடுங்களோட குப்பை கொட்டிப்பாரு தம்பி, நீயும் என்னைமாதிரி மாறிடுவே', என்று வேடிக்கையாகச் சொல்வார் அவர், 'யாராச்சும் அடிச்சாக்கூட, 'அம்மா'ன்னு கத்தத் தோணாது, 'ம்மா'ன்னுதான் வரும்'

அவரைப்போலதான், இந்தத் தொழிற்சாலையில் எல்லோரும், வருடக்கணக்காக இயந்திரங்களோடு பழகி, இயந்திரங்களாகவே மாறிவிட்டதாகத் தோன்றியது கார்த்திகேயனுக்கு. யாருடைய முகத்திலும் மனித உணர்ச்சி இல்லை, பக்கத்தில் நிற்கிறவனுக்குக் காலை வணக்கமோ, மாலை வணக்கமோ, 'வீட்ல பொண்டாட்டி, பிள்ளைங்க சௌக்யமா' என்று உபசரிப்போ, 'உன் வேலை எப்படி நடக்குது?', என்கிற விசாரிப்போ கிடையாது.

திருப்பதியில் சுவாமி முன்னால் நிற்கிறவன் சொல்வதுபோல், 'ஜரகண்டி, ஜரகண்டி'. அக்கம்பக்கம் பார்க்காதே, உன்னுடைய வேலையைமட்டும் கவனி, சக ஊழியனுக்குக் காலை வணக்கம் சொல்வதைத் தவிர்த்தால், பத்து வால்வ் செய்கிற இடத்தில், பதினொரு வால்வ் செய்யலாம்.

கார்த்திகேயனுக்குப் பத்து வால்வ் கணக்கில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அந்த வால்வ்களைத் தயாரிக்கிறவர்கள் கொஞ்சம் சகஜமாகப் பேசிப் பழகிக்கொண்டு செயல்பட்டால் என்ன தப்பு?

'மரம் வெட்டுகிறவன், தன்னுடைய கோடாரியைக் கூர் தீட்டுவதற்கும் நேரம் செலவிடவேண்டும்', என்று கார்த்திகேயனின் தோழர் சிவராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்வார். ஆனால் இங்கே, ஒரு மரம் வெட்டி முடித்ததும், அடுத்த மரத்துக்கு ஓடியாகவேண்டும். கோடாரி என்ன நிலைமையில் இருக்கிறது என்று தொட்டுப் பார்க்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை.

'ஹலோ மிஸ்டர்', கார்த்திகேயனின் முகத்துக்கு நேராகச் சொடக்குப் போட்டு அழைத்தார் சூபர்வைஸர், 'என்னாச்சு உங்களுக்கு? ஏதோ சொல்ல வந்தீங்க, அப்புறம் பேஸ்த் அடிச்சாமாதிரி நிக்கறீங்க, நம்ம ரெண்டு பேர் டைமும் வீணாகுது'

'ஸாரி ஸார்', அவசரமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் கார்த்திகேயன், 'இந்த வால்வ் தயாரிக்கிற மெத்தட்-ல ஒரு சின்ன மாற்றம் செஞ்சா, இருபது நிமிஷம்வரைக்கும் மிச்சப்படுத்தமுடியும்ன்னு எனக்குத் தோணுது'

கார்த்திகேயன் ஆர்வத்தோடு நீட்டிய வரைபடத்தை, அந்த சூபர்வைஸர் சும்மா பெயருக்குக்கூட வாங்கிப் பார்க்கவில்லை. சில விநாடிகள் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர், 'போய் வேலையைப் பாருங்க', என்றார் அமைதியாக.

அவ்வளவுதான். இப்படி அசட்டு வரைபடங்கள் தயாரிக்கிற நேரத்தில், என்னோடு நின்று பேசுகிற நேரத்தில், இயந்திரத்தோடு செல்லம் கொஞ்சினால், உற்பத்தி பெருகும், தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ போனஸ் கிடைக்கும். சீக்கிரமாகக் கல்யாணம் செய்துகொண்டு சந்ததியைப் பெருக்கி, சௌகர்யமாக வாழலாம். அந்த மூன்று வார்த்தைகளுக்குள் இத்தனை அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.

அவனிடம் மரியாதைக்குக்கூட சொல்லிக்கொள்ளாமல் தன்னுடைய அலுவலக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தார் சூபர்வைஸர். கார்த்திகேயனுடன் பேசுவதில் செலவிட்ட இந்த மூன்று நிமிடங்களில் எத்தனை வால்வ்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவருடைய மனத்தில் கணக்கு ஓடிக்கொண்டிருக்கலாம்.

அப்போதும் கார்த்திகேயன் நம்பிக்கை இழக்கவில்லை. அவருக்குப் பின்னால் ஓடி, 'சார், நான் சொன்ன விஷயம்?', என்றான் கெஞ்சல் தொனியில்.

இந்தமுறை சூபர்வைஸரால் அமைதி காக்கமுடியவில்லை, 'மிஸ்டர், உங்களைவிட சீனியர்ஸ் நிறைய பேர் இந்த ·பேக்டரியில இருக்காங்க, அவங்களைப் பார்த்து, நல்ல விஷயங்களைக் கத்துக்க முயற்சி பண்ணுங்க, இப்படி அநாவசியமா ஆராய்ச்சி பண்றேன், மாற்றம் பண்றேன்னு கிளம்பினா எல்லாருக்கும் டைம் வேஸ்ட்'

'இல்லை சார், நிஜமாவே இந்த முறைப்படி எழுபது நிமிஷத்தில வால்வ் தயாரிக்கமுடியும்', என்றான் கார்த்திகேயன், 'இதனால நமக்கு நிறைய நேரமும், செலவும் மிச்சமாகும்'

அவனுடைய வாதங்களையெல்லாம் அவர் நின்று கேட்டுக்கொண்டிருக்கவில்லை. தன்னுடைய அறைக்குள் நுழைந்து அவர் கதவைச் சாத்திக்கொண்டபிறகு, பிரம்மை பிடித்தவன்போல் அங்கேயே சில நிமிடங்களுக்கு நின்றிருந்தான் கார்த்திகேயன். அதன்பிறகு, சோர்வோடு தன்னுடைய இயந்திரத்துக்குத் திரும்பினான்.

அந்த சூபர்வைஸர்மட்டுமில்லை. கார்த்திகேயனின் யோசனைகளை அந்தத் தொழிற்சாலையில் யாரும் கேட்கத் தயாராக இல்லை. சொல்லிவைத்தாற்போல, வருடக்கணக்காக இந்த வால்வை இப்படிதான் தயாரித்துக்கொண்டிருக்கிறோம், அதை இப்போது மாற்றவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றுதான் எல்லோரும் கேட்டார்கள்.

நீ சொல்வதுபோல் மாற்றங்களைச் செய்தால், இந்த வால்வை எழுபது நிமிடத்தில் தயாரிக்கமுடியும் என்பதற்கு என்ன சாட்சி? ஒருவேளை அப்படி நடந்தாலும், இதற்காக எத்தனை புது இயந்திரங்களை வாங்கவேண்டியிருக்கும், எத்தனை பேருக்குப் பயிற்சி கொடுக்கவேண்டியிருக்கும், அதற்கெல்லாம் உன் அப்பனா பணம் செலவழிப்பான்?

அவர்களுடைய கேள்விகளைக் கேட்கக் கேட்க, கார்த்திகேயனின் எரிச்சல் அதிகரித்தது. கொஞ்சம்கூட புத்தியைக் கூர் தீட்டமாட்டேன், வாழ்நாள் முழுக்க மழுங்கிய கோடாரியோடுதான் மரம் வெட்டிக்கொண்டிருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்களை எப்படித் திருத்தமுடியும்?

கார்த்திகேயனின் வலுவான வாதங்களைச் சமாளிக்கமுடியாதவர்கள், தங்களுடைய கடைசி ஆயுதத்தைப் பிரயோகித்தார்கள். நீ ஒரு சாதாரண மெக்கானிக், பெரிய எஞ்சினியர்களுக்குத் தெரியாத விஷயமா உனக்குத் தெரிந்துவிடப்போகிறது? கெட் அவுட், ஒழுங்காக உன் வேலையைப் பார்.

அதன்பிறகும் கார்த்திகேயன் பணியாததால், வேலை நேரத்தில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்று அவனுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. குடித்துவிட்டு வேலைக்கு வந்தான், வாரத்தில் நாலு நாள் தாமதம் என்றெல்லாம் விதவிதமாகக் குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டன.

'அதுக்கப்புறம்தான் சார் நான் குடிக்க ஆரம்பிச்சேன்', என்றான் கார்த்திகேயன், 'இத்தனை பெரிய தொழிற்சாலையில, இத்தனை மெஷின்களுக்கு நடுவில நான் ஒருத்தன்மட்டும் மனுஷனா இருக்கறது ரொம்பக் கஷ்டம் சார்'

கார்த்திகேயனின் பக்கம் கொஞ்சமேனும் நியாயம் இருப்பது பாலாவுக்குப் புரிந்தது. ஆனால், அவருக்குத் தன்னால் எப்படி உதவமுடியும் என்று தெரியவில்லை. இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், ஏற்கெனவே இவரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். அந்த முடிவில் தான் தலையிட்டால், அப்பாவுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ.

ஆனால், தாடியைச் சொறிந்தபடி சூரியனை வெறித்துக்கொண்டிருக்கும் கார்த்திகேயனைப் பார்க்க பாலாவுக்குப் பரிதாபமாக இருந்தது. மந்தையிலிருந்து விலகி நிற்கும் எல்லா வெள்ளாடுகளும், தனிமை பழகவேண்டியிருக்கிறது. எதிர்நீச்சல் போடுகிறவர்களுக்கு மன அழுத்தமும் உடல் வலியும் கட்டாயம்.

'சர்ரக் சர்ரக்'கென்று அதிவேகமாக ஷ¥ காலில் மிதிபடும் சருகுகள் அவர்கள் இருவரின் கவனத்தைக் கலைத்தன. திரும்பிப் பார்த்தபோது, யாரோ அவர்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

வந்தவர் முகத்தில் பதற்றம் குடிகொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, 'மிஸ்டர். பாலச்சந்தர்?', என்றார் மூச்சிறைக்க.

'நான்தான்', என்றான் பாலா, 'என்ன விஷயம்?'

'சார், நீங்க உடனே ஆ·பீஸ் ரூமுக்கு வரணும்', என்றார் அவர், 'ஐயாவுக்கு திடீர்ன்னு நெஞ்சு வலி'

Copyright © 2005 Tamiloviam.com - Authors