தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : புதையல் தீவு [பாகம் : 9]
- பா.ராகவன்

இருட்டு என்றால் பயங்கர இருட்டு. உற்றுப்பார்த்தால் உள்ளங்கை கூடத் தெரியாத கும்மிருட்டு. அந்தக் காட்டு பங்களாவின் சுவர்கள், கூரை, தரை, சன்னல்கள், கதவுகள் அனைத்துமே இருளினால் செய்யப்பட்டவை மாதிரி தோன்றியது, பாலுவுக்கு. அறையில் உடன் இருந்த நண்பர்கள் குடுமிநாதன், டில்லிபாபு இருவரையும் தன்னருகே வந்து நெருக்கமாக உட்காரச் சொன்னவன், இருட்டில் வேறு யாராவது ஒருவர் அங்கே தங்களைக் காவல் காப்பதன் பொருட்டு ஒளிந்திருப்பார்களோ என்று கொஞ்சம் சந்தேகப்பட்டான். யார் கண்டார்கள்? இருக்கலாம். தான் ஏதாவது பேசப்போய் அவர்கள் காதில் விழுந்துவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்துவிடுவார்களே. இப்போதைக்கு, சின்னப்பசங்கள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கே பொழுதுவிடிந்தால் என்ன தண்டனை தருவார்களோ. இந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத்தான் தாங்கள் வந்திருக்கிறோம் என்பதும் தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்!

இவ்வாறு தோன்றியதும் நண்பர்களிடம் தன் ரகசியத் திட்டத்தை காதோரம் விவரிக்கலாம் என்று முடிவுசெய்ததை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தான் பாலு.

எதற்கு அவர்களிடம் சொல்லவேண்டும்? அதுவும் கிட்டே கூப்பிட்டு ரகசியம் பேசும் குரலில்? ஒருவேளை குண்டர்கள் காதில் அது விழாமல் போனால் கூட, என்னவோ ரகசியம் பேசுகிறார்கள் என்கிற சந்தேகத்தை ஏன் கிளப்பவேண்டும்? ஆகவே நண்பர்களுக்கே கூடத் தெரியாமல்தான் தன் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தான் பாலு.

"என்னடா விஷயம்? என்கிட்டே சொல்லு" என்று கத்தினான் குடுமி.

'உஷ்ஷ்ஷ்' என்று அவனை அடக்கப்பார்த்தான் பாலு.

இனிமேல் யோசித்துக்கொண்டிருந்தும் பேசிக்கொண்டும் இருப்பதில் பிரயோசனமில்லை என்று முடிவு செய்தவனாக, திடீரென்று சம்பந்தமில்லாமல் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தான்.

'அய்யாங்... ஆஆஆங்ங்ங்ங்... அம்மா....ஊ..ஆ...ஊ" என்று விதவிதமாகக் குரலில் ஏற்ற இறக்கங்களைக் காட்டி உரத்த குரலெடுத்து அழத் தொடங்கினான் பாலு.

"என்னடா! என்னாச்சுடா!" என்று நண்பர்கள் இருவரும் பதறிக்கொண்டு அவன் அருகே நகர்ந்து வந்து உட்கார்ந்தார்கள்.

ஆனால் பாலு பதில் சொல்லுவதாக இல்லை. இன்னும் குரலை உயர்த்தி, தீவிரமாக அழத் தொடங்கினான்.

"டேய்!டேய்! சொல்லிட்டு அழுடா. பூச்சு எதனா கடிச்சிடிச்சா?" என்றான் டில்லிபாபு.

ம்ஹும். பாலுவாவது, பதில் சொல்லுவதாவது!

தன்னாலான அதிகபட்ச சத்தத்தை வெளியிட்டுக் கதறியழ ஆரம்பித்துவிட்டான். ஐந்து நிமிடங்கள் இப்படி தீவிரமாக அழவேண்டியிருந்தது. திடீரென்று அந்த அறையின் வெளியே ஒரு சத்தம் கேட்டது. பூட்டு திறக்கும் ஓசை. பிறகு 'யார்றா அது?' என்றொரு கட்டைக்குரல்.

"சார்.... எனக்கு பாத்ரூம் போவணும்சார்... ரொம்ப அர்ஜெண்டு... முட்டிக்கிட்டு வருது. வலி தாங்கமுடியலேஏஏஎ" என்று இன்னும் தீவிரமாகக் கத்தி அழ ஆரம்பித்தான் பாலு. மனத்துக்குள் இன்ன செய்வது என்றொரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

"பாத்ரூமெல்லாம் இங்க இல்லை. சும்மா கிட" என்றான் வந்தவன். இருட்டில் அவன் குரல் மட்டும்தான் வந்ததே தவிர ஆள் யார், எப்படி இருக்கிறான் என்பது கூடத் தெரியவில்லை.

"சார், சார்... தாங்கமுடியலை சார். சாயங்காலத்துலேருந்து ஒண்ணுக்கே போகலை சார். வலிக்குதே, அம்மாஆஆ" என்று கதறிமனமுருகி அழத் தொடங்கினான் பாலு.

"இன்னாடா இது உங்களோட பேஜாரா போச்சே" என்று அலுத்துக்கொண்ட அந்த குண்டன், "சரி, என்னோட வந்துத் தொலை" என்று உத்தேசமாக பாலுவை நெருங்கி கையைப் பிடித்துக்கொண்டு திரும்பினான்.

சட்டென்று அழுகையை நிறுத்திய பாலு, "இங்கயே இருங்கடா. நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன். என்னால தாங்கமுடியலை. இதை கண்டிப்பா முதல்ல முடிச்சாகணும்" என்று தன் நண்பர்களைப் பார்த்துக் குரல் கொடுத்தான். அந்த சமிக்ஞை அவர்களுக்குப் புரிந்தாகவேண்டுமே என்று மனத்துக்குள் கடவுளை வேண்டிக்கொண்டான். குண்டன் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மாடிப்படி இறங்கும்போது கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. கீழே சன்னலுக்கு வெளியே ஓரிரு மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருந்ததையும் தாங்கள் வந்தபோது பார்த்த குண்டர்படையில் ஒரு சிலர் அங்கே நின்றுகொண்டிருந்ததையும் அவன் கண்டான். எப்படியும் ரொம்பதூரம் அழைத்துப்போக மாட்டார்கள். கட்டடத்துக்குப் பக்கத்திலேயேதான் போகச்சொல்லுவார்கள் என்று பாலு எதிர்பார்த்தான். வாகான ஒரு வாய்ப்பு கிட்டுமானால் மூச்சைப் பிடித்துக்கொண்டு தப்பித்து ஓடிவிடவேண்டுமென்றும் எங்காவது பதுங்கியிருந்து அவர்களது நடவடிக்கைகளை கவனிக்கவேண்டும் என்பதும் அவனது திட்டம். இதில் உள்ள அபாயம் குறித்தும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. பிடித்துவிட்டார்கள் என்றால் எப்படியும் கட்டிவைத்து உதைத்தே தீருவார்கள். கொலை செய்யவும் தயங்காதவர்கள். அதற்காக, எடுத்துக்கொண்ட நோக்கத்தைக் கைவிடமுடியாதல்லவா? இவர்கள் யார்? என்ன சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்? புதையல் எடுக்கப்போகிறேன் பேர்வழி என்று எதை எடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? இதை எப்படியும் கண்டுபிடித்தே தீரவேண்டும்.

மனத்துக்குள் எல்லா தெய்வங்களையும் அவன் வேண்டிக்கொண்டான். அந்த குண்டன், தன் நண்பர்களிடம் "ஒண்ணுமில்லப்பா. இந்தப்பையனுக்கு பாத்ரூம் போவணுமாம்" என்று சொல்லியபடி, 'டேய், அந்தா பாரு. அந்த மரத்தடில போய் போயிட்டுவா' என்று வாசலில் இருந்தபடியே அவன் கையை விடுவித்தான்.

'ரொம்ப தேங்ஸ் சார். இதோ வந்துடறேன்' என்றபடி பாலு சந்தோஷமாக நடக்க ஆரம்பித்தான். நடக்கும்போதே மனத்துக்குள் ஒரு கணக்குப்போட்டான். அந்தப் பாழடைந்த கட்டடத்துக்கும் இடதுபக்கம் குண்டன் சுட்டிக்காட்டிய மரத்தடிக்கும் இடையே பத்து மீட்டர் இடைவெளியாவது அவசியம் இருக்கும். அந்த மரம்தான் ஆரம்பம். அங்கிருந்து வரிசையாகப் பல மரங்கள் இருந்தன. சுற்றிலுமே மரங்கள்தான். இருளில் எல்லா மரங்களும் மலைமாதிரி கவிந்து நிற்பதுபோல் பட்டது அவனுக்கு. ஒரு மரத்தின் பின்னால் போய் ஓட ஆரம்பித்தால் எப்படியும் தப்பித்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓடுவதென்றால் எங்கே ஓடுவது? கடற்கரைக்குத்தான் ஓடவேண்டும். எப்படியும் மாட்டிக்கொள்ளப்போவது உறுதி. அதற்குள் படகு எந்தப்பக்கம் வரும், அதில் என்ன ஏற்றுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். அதைவிட முக்கியம், புதையலை எங்கிருந்து தோண்டி எடுக்கிறார்கள் என்று பார்க்கவேண்டியது. இதையெல்லாம் பார்த்துவிட்டபிறகு மாட்டிக்கொண்டால் நல்லது. பார்க்குமுன்னரே மாட்டிக்கொண்டால் முயற்சி வீணாகிவிடும்.

என்ன செய்யலாம்? அவன் மனத்துக்குள் வேகவேகமாகக் கணக்குப் போட்டான். எப்படியும் மணி பதினொன்றேமுக்கால் இருக்கும். இன்னும் கால்மணிநேரத்தைக் கடத்தவேண்டும். பன்னிரண்டு மணிக்குப் படகு வரும் என்பதாகத்தானே பேசிக்கொண்டார்கள்? அந்தநேரம் எல்லாருமே பிசியாகிவிடுவார்கள். அட, ஒரு புதையலை எடுத்துப் படகில் ஏற்றுவதென்றால் முன்னதாக ஒரு கால்மணிநேரம் வேலை இருக்காதோ? இந்த குண்டர்கள் இப்படி வெட்டியாக நின்றுகொண்டிருக்கிறார்களே என்றும் அவனுக்கு அலுப்பாக இருந்தது. இதற்கிடையில் தனது திட்டம், தன் நண்பர்களுக்குச் சரியாகப் புரிந்திருக்குமா, அவர்கள் ஏதாவது உபாயம் செய்து தப்பிவந்து தன்னைக் காப்பாற்றுவார்களா, அல்லது தான் தப்பித்ததை ஒட்டி, அவர்களை குண்டர்கள் அடித்து உதைப்பார்களா என்று விதவிதமான கவலைகள் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தன. வேறு வழியில்லை. துணிந்து ஒரு முடிவு செய்தாகிவிட்டது. இனி பின்வாங்கமுடியாது என்று தோன்றியது.

ஆகவே, "சார், எனக்குத் தனியா போக பயமா இருக்கு. நீங்க கூட வரிங்களா?" என்று தன்னை அழைத்துவந்த குண்டனிடம் கேட்டான். தன்மீது துளி சந்தேகமும் வராமலிருக்க இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது.

"அட பயமாமில்லே?" என்று சுற்றியிருந்தவர்கள் எகத்தாளமாகச் சிரித்தார்கள். "நீ போதம்பி. நாங்க இங்கதான் இருக்கோம். பயப்படாத. இந்தக் காட்டுல எங்களை மீறி உன்னை யாரும் எதுவும் செய்துடமுடியாது" என்று நம்பிக்கை சொன்னான் ஒருவன்.

"சரிங்க, " என்று பவ்யமாக பதில் சொல்லிவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான் பாலு. அவனது நல்லநேரம் அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் எதிர்திசையிலிருந்து வேகமாக ஓடிவந்த இன்னொரு புதிய குண்டன், "போட் வந்துடிச்சி, போட் வந்துடிச்சி" என்று கத்தியபடியே வந்தான்.

ஆஹா என்று மனத்துக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்ட பாலு சட்டென்று நின்று திரும்பிப்பார்த்தான். அவர்கள் இப்போது பாலுவை கவனிப்பதை விட்டுவிட்டு புதிய குண்டனிடம் பேச ஆரம்பித்தார்கள்.

"எங்க நிக்குதுடா?" என்றான் தலைவன் போலிருந்த ஒருவன்.

"வழக்கமா நிக்கற இடம்தான். கொஞ்சம் சீக்கிரம் முடியணும்னு சொன்னாங்க" என்றான் அவன்.

"சரி, இதோ" என்றவன் திரும்பி, தன் நண்பர்களைப் பார்த்தார்கள். அவர்கள் உடனே புறப்பட்டு, அந்தக் கட்டடத்தின் பின்புறமாக கும்பலாக நடக்க ஆரம்பித்தார்கள். பாலுவுக்கு நம்பவே முடியவில்லை. தன்னையோ, தன்னிரு நண்பர்களையோ சுத்தமாக மறந்துவிட்டு அத்தனை பேரும் இப்படிப் புறப்படுகிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்துக்கொண்டவனாக தடதடவென்று அந்தக் கட்டடத்தின் வலப்புறமாகத் திரும்பி தானும் அவர்கள் ஓடும் திசைக்கு எதிராக ஓட ஆரம்பித்தான். பத்தடி போனவன் சட்டென்று தாமதித்தான். கட்டடத்தில்தான் இப்போது யாருமில்லையே? போய்த் தன் நண்பர்களையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது. வேண்டாம், விபரீதம் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. தயங்கித்தயங்கி அவர்கள் போன திசையைக் குறிவைத்து அவன் மட்டும் முன்னேற ஆரம்பித்தான்.

பயம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவியிருந்தது. அந்தக் குளிர் இரவிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. நாக்கு வறண்டு, தாகம் எடுத்தது. கடவுளே, காப்பாத்து என்று வேண்டியபடி மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் ஓடிக்களைத்தபின், நூறடி தூரத்தில் அவர்கள் அனைவரும் ஓர் அடர்ந்த புதரின் மறைவிலிருந்து எதையோ வெளியே எடுக்க முயற்சி செய்வதை ஒளிந்திருந்து பார்த்தான்.

என்ன அது? தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்குக் கட்டுக்கடங்காமல் போனது. சே, இந்த இருட்டு இப்படியா சதி செய்யவேண்டும்?

சில நிமிட முயற்சிக்குப் பின் அவர்கள் வெளியே இழுக்க முயற்சி செய்த உருவங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக வெளியே வருவதையும் பார்த்தான். ஒவ்வொன்றும் ஒரு பூதம் மாதிரி பெரிதாக இருக்கும் என்று தோன்றியது. நான்கு பேர் சேர்ந்துதான் ஒரு பொருளைக் கட்டி இழுத்தார்கள். பிறகு கடற்கரையை நோக்கிச் செல்லும் திசையில் அதை உருட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார்கள். பாலு இன்னும் முன்னால் போய் தெளிவாகப் பார்க்க முடிகிறதா என்று பார்த்தான். ம்ஹும். வேறு வழியே இல்லை. உயிரைப் பணயம் வைத்து, அவர்களுக்கு எதிரே போய் நின்றுதான் அது என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. உயிரே போனாலும் தெரிந்துகொள்ளாமல் விடக்கூடாது என்றும் உறுதி ஏற்பட்டது. தான் கொஞ்சம் ஒல்லிப்பையனாக இருந்திருக்கலாம். ஓடுவதற்கும் ஒளிவதற்கும் சௌகரியமாக இருந்திருக்கும். இப்படியொரு குண்டனாக வளர்ந்துவிட்டோமே என்று முதல்முறையாகக் கவலைப்பட்டான். ஆனாலும் மன உறுதியை விட்டுவிடாமல் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அவனது இலக்கு இப்போது அவனுக்குத் துல்லியமாக இருந்தது. நூறடி இடைவெளி இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் போகும் பாதைக்குச் சமமாகவே பக்கவாட்டில் நடந்து கடற்கரை வெளியை அடைந்துவிடவேண்டும். மணல்வெளியில் பதுங்கவெல்லாம் முடியாது. அங்கே பார்த்துவிடுவார்கள். அதற்குள் அவர்களை நெருங்கி, இழுத்துப்போகப்படும் பொருள் என்னவென்பதைப் பார்த்துவிடவேண்டும்.

மூச்சைப்பிடித்துக்கொண்டு அவன் பதுங்கி நடந்தான். ஏழு நிமிடங்களில் கடற்கரை வந்துவிட்டது. பக்கவாட்டில் அவர்களும் அந்தப் பொருட்களை உருட்டிக்கொண்டு வருவது தெரிந்தது. கிட்டே போகலாமா என்று யோசித்தான். சட்டென்று வேறொரு யோசனை வந்தது. எதற்குக் கிட்டே போய் மாட்டிக்கொள்ளவேண்டும்? மாறாக, அதோ தூரத்தில் கரையோரம் தெரியும் படகின் அருகே போய் பதுங்கிக்கொண்டுவிட்டால் பார்ப்பது சுலபமாயிற்றே.

இப்படித் தோன்றியதுமே பாலு கடலோரத்தில் நின்றுகொண்டிருந்த படகை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors