Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 2
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அசோகவனத்திற்குச் சென்ற விபீஷணன் இராமனின் செய்தியைச் சீதையிடம் கூறியபொழுது தான் இருக்கும் நிலையிலேயே வருவது சாலச்சிறந்தது என்கின்றாள். உற்றவனைப் பற்றியும், உலகைப்பற்றியும் தெரிந்த பெண்ணாகப் பேசுகின்றாள்.அதனால்தான் முதலில் அனுமன் தூது வந்த பொழுதே, தன்னை இராவணன் நிலத்துடன் பெயர்த்து அவளை எடுத்து வந்ததாகக் கூறினாள். வால்மீகியினின்றும் கம்பன் மாற்றி அமைத்த காட்சி இது.

கணவனின் குறிப்பு என்று விபீஷணன் கூறவும் சீதையால் மறுக்க முடியவில்லை.தன்னைச் சீராக்கிக் கொண்டு புறப்படுகின்றாள். இனி தொடரும் காட்சிகளைக் கவிஞனின்ஓவியத்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆயக் கைச்சிலை நின்றானைக் கண்ணுற்றாள். உடனே அப்பெண்ணரசியின் ஏக்கம் நீங்குகின்றது. "இனி இறப்பினும் நன்று" என நினைக்கின்றாள். அசோக வனத்தில் சீதை இருந்த நிலை உருக்கமானது.

       "விழுதல்,விம்முதல்,மெய் உற வெதும்புதல்,வெருவல்,
       எழுதல்,ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித்
       தொழுதல்,சோருதல்,துவங்குதல்,துயர் உழந்து உயிர்த்தல்,
       அழுதல்,அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்"

எப்பேர்ப்பட்டத் தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி, தன் கைபிடித்த காவலனைக் காணவும்" கண்டதே போதும்" என எண்ணுவது அந்தச் சோர்ந்து போன மனத்தின் இயல்பாகத்தானே இருக்க முடியும். இது பெண்மனம்.

இராமனின் நிலை என்ன?

"கற்பினுக்கு அரசினை,பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை"   அத்தலைவனும் நோக்கினான்.

அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று பார்வைகள் மோத தீப்பொறி பிறந்தது. துடிப்புடன், தூய்மையுடன் ஏற்பட்ட சந்திப்பில் குழப்பம் எப்பொழுது நிகழ்ந்தது ? அவனைக் கொதிக்க வைத்தது எது? நெருப்பு மொழிகள் உதிர்க்க ஆரம்பித்தானே, ஏன்?
      
"அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று குற்றம்சாட்டுகின்றான். அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப் பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன? ஒழுக்கம் எங்கே பாழ்பட்டது? இராவணன் மேல் பட்ட காற்று அவள்மேல் பட்டதால் அவள் கற்பு போய்விட்டதா? இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா? அம்மம்மா, எப்பேர்ப்பட்டபழி. சீதை செத்திருந்தால் உலகம் என்ன கூறியிருக்கும், "என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம், அதனால் அவள் செத்திருக்கலாம்" என்று பழி சுமத்தாதா? இறுதி மூச்சுவரை கற்பினைக் காட்டவல்லவோ உயிர் வைத்திருந்தாள். சீதையை மீட்க அவன் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறை கூறக்கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான். தொடர்ந்து பேசுகின்றான்.

"மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே, நறவு அமைய உண்டியே;
இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன
விருந்து உளவோ? உரை"

அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். சீரோடு கூட்டிவரச் சொன்ன சிந்தை எங்கே போயிற்று ? அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், கண்களில் கண்ணீரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக்கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?"

என்று நச்சுப் பாணத்தால் அம்மலர்க்கொடியை அடித்து வீழ்த்திவிட்டான்.

இவ்விடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |