Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 14
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

பாலு, டில்லி, குடுமி நண்பர்களும் அவர்களை மீட்கப்போன மீனவர்களும் கடற்படை அதிகாரிகளும் பன்றித்தீவில் வேலைகளை முடித்துவிட்டு, கைது செய்த குண்டர்களுடன் கரைக்கு மீள்வதற்குள் பொழுது விடிந்துவிட்டது. அதற்குள் அதிகாரிகள் கரையில் இருப்போருக்குத் தகவல் தெரிவித்துவிட்டிருந்ததால், கடற்கரையெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று அவர்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். க்ரூப் ஸ்டடி என்று கதை விட்டுவிட்டு இப்படியொரு காரியத்துக்குத் தங்கள் மகன்கள் போயிருக்கிறார்கள் என்பதை இன்னமும் நம்பமுடியாத பாலு மற்றும் குடுமியின் பெற்றோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.

"பாருங்களேன்! நம்பவே முடியலை. நம்ம பாலுவும் பத்மநாபனுமா இந்தக் காரியத்தை சாதித்திருக்காங்க?" என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள் அவர்கள். பாலுவின் பள்ளி ஆசிரியர்கள், அவன் வசிக்கும் தெருவில் வசிக்கும் பிற மக்கள் அத்தனை பேரும் அங்கே குழுமி இருந்தார்கள்.

தூரத்தில் பாலு வருகிற படகு தெரிந்ததுமே மக்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்துவிட்டது. தொலைவிலிருந்து இதையெல்லாம் பார்த்த பாலு உற்சாகத்தில் அங்கிருந்தபடியே கையசைத்தான்.

படகுகள் கரையைத் தொட்டதும் இளைஞர்கள் சிலர் தண்ணீரில் ஓடி, படகிலிருந்த பாலுவையும் குடுமியையும் டில்லியையும் அப்படியே அலேக்காகத் தலையில் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

"எவ்ளோ பெரிய சாதனை! மிகப்பெரிய கடற்படைப் பிரிவே செய்திருக்க வேண்டிய வேலையை மூணு பொடிப்பசங்க செஞ்சிட்டாங்களே!" என்று பாலுவின் வகுப்பு ஆசிரியர் சொல்லிக்கொண்டிருந்தார்.

"கரெக்டு சார். பசங்களோட தன்னம்பிக்கை, தேசபக்தி, விடாமுயற்சி ஆச்சர்யமளிக்குது. தக்க சமயத்துல இவங்க கரையில் இருக்கறவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாங்களே அதான் ஆச்சர்யமா இருக்கு." என்றார் கடற்படை அதிகாரி.

"மொபைல் போன்கள் இப்பல்லாம் குக்கிராமம் வரைக்கும் பிரபலமாயிடுச்சே. இதென்ன பெரிய விஷயம்! அந்த நடுநிசி நேரத்துல செய்தியைப் பார்த்துட்டு தக்க நடவடிக்கை எடுக்க உதவிய மக்களைச் சொல்லணும்"

ஆளாளுக்குப் பேசிக்கொண்டே இருந்தார்கள். கரை இறங்கியதும் டில்லி நேரே தங்கள் மீனவர் சங்கத் தலைவரிடம் போய் அவரது மொபைல் போனைக் கொடுத்துவிட்டு "மன்னிச்சிக்கங்கசார். உங்களைக் கேக்காம இதை எடுத்துக்கிட்டுப் போயிட்டேன். நம்ம தலைவர்தானேன்னு ஒரு உரிமைல செஞ்சிட்டேன். ஆனா இது இல்லாட்டி இந்நேரம் நாங்க மூணுபேரும் நடுக்கடல்ல ஜலசமாதி ஆகியிருப்போம்" என்றான்.

"அட நீ ஒண்ணு! உங்க மூணு பேருக்குமே நானே மொபைல் போன் வாங்கிப் பரிசளிக்கப்போறேன்" என்றார் தலைவர்.

அத்தனைபேரும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தபோது, அவர்களது சந்தோஷத்தைப் பலமடங்காக்குவது போலக் கடற்படை அதிகாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.
]
"ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ஜனாதிபதி இன்னிக்கு நம்ம ஊருக்கு வரார். பக்கத்து ஊர்ல ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைக்க வர்றவர், அப்படியே அவரோட சொந்த ஊரான நம்மூருக்கும் வரப்போறதா அவசரச் செய்தி வந்திருக்கு. அதனால நம்ம சூப்பர் ஹீரோக்கள் மூணு பேருக்கும் ஜனாதிபதியை வைத்தே ஒரு மினி பாராட்டு விழா நடத்தக் கடற்படை முடிவு செய்திருக்கு" என்றார்.

ஓ, ஓ, ஓ என்று ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

அன்று மாலை ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அலையலையாக மக்கள் குவிந்திருக்க, சரியாக ஐந்து மணிக்கு ஜனாதிபதியின் வாகனம் வந்து சேர்ந்தது. அத்தனை பேரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

பாலு, டில்லி, குடுமிநாதன் மூன்றுபேரையும் கடற்படை அதிகாரிகள் அழைத்து ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினார். "இவங்கதான் சார். சட்டவிரோதமா அந்நிய நாட்டுக்கு எரிபொருள் கடத்தற கும்பலைக் கண்டுபிடிச்சவங்க. சின்னப்பசங்கன்னாலும் தேசபக்தியிலேயும் விடாமுயற்சியிலேயும் தன்னம்பிக்கையிலும் ரொம்பப் பெரிய பசங்க" என்றார்.

ஜனாதிபதி அவர்களை அன்புடன் பார்த்தார். அருகே அழைத்து ஆரத் தழுவிக்கொண்டார். பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு அளித்தார். அவசரமாக ஆர்டர் கொடுத்து செய்து எடுத்துவரப்பட்டிருந்த பதக்கங்களையும் அணிவித்தார். தமது மிகச்சிறிய உரையில், மூன்று சிறுவர்களையும் மூன்று ரத்தினங்களாக உயர்த்திப் பேசினார். கரகோஷத்தில் அந்தச் சிறிய மீனவக் கிராமமே அதிர்ந்தது.

விழா முடிந்து காரில் ஏறுமுன் ஜனாதிபதி பாலுவை அழைத்தார். "ஒரே ஒரு கேள்வி"

"சொல்லுங்க சார்!"

"கொஞ்சம் கஷ்டமான கேள்வி. பரவால்லையா?"

பாலுவுக்கு முதலில் புரியவில்லை. என்னவாக இருக்குமோ என்று சற்றே சிந்தித்தபடி, "எதுன்னாலும் சொல்லுங்க சார். நாங்க இங்கேருந்து புறப்பட்டு பன்றித்தீவுக்குப் போனதுலேருந்து, திரும்பி வந்ததுவரை நடந்த அத்தனை விஷயங்களையும் ஆபீசர்கிட்ட சொல்லியிருக்கேனே" என்றான்.

"அதெல்லாம் இல்லை. இது ரொம்பக் கஷ்டமான கேள்வி"

"சொல்லுங்க சார். எனக்கு ஆர்வம் அதிகமாகுது."

"கேட்டுடட்டுமா? நிஜமா கேட்டுடுவேன்?"

"சாஆஆஆஆஆஆஆஆஆஅர்..." என்று கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில் அவர் கரங்களைப் பற்றியவன் "சீக்கிரம் கேளுங்க சார்"

"உன் நண்பன் பத்மநாபனுக்குக் குடுமியே இல்லையே? அப்புறம் ஏன் அவனைக் குடுமின்னு கூப்பிடறிங்க?"

பாலுவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

"ஓ, அதுவா! பத்மநாபனுக்கு நீளமா முடி வளர்த்து ஸ்டைலா காத்துல பறக்கவிடணும்னு ஆசை சார். ஆனா அவங்க அப்பா மாதம் ஒருமுறை நல்லா ஒட்ட சதுரவட்டை அடிச்சிடுவார். இயல்புல இல்லாத குடுமியை, பேர்லயாவது வெக்கலாமேன்னுதான் அப்படியொரு பட்டப்பெயர் வெச்சோம்" என்றான்.

ஜனாதிபதி குழந்தைபோல் சிரித்தார். கூடியிருந்த மக்கள் அவரது சிரிப்பில் கலந்துகொண்டார்கள். அந்தக் கடலோர கிராமத்துக் குழந்தைகள் அத்தனைபேரும் பாலுவையும் குடுமியையும் டில்லியையும் பெருமைபொங்கப் பார்த்தார்கள்.

அவர்கள் தேசத்துக்கே பெருமை தேடித்தந்திருப்பவர்கள். ஆனாலும் அந்தப் பெருமையின் பெரும்பகுதியை அவர்களின் விளையாட்டுத் தோழர்கள் சொந்தம் கொண்டாடுவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாதல்லவா?


(முற்றும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |