Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 4
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

"நீயா?" என்றான் பாலு. அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. அந்தப் பாழடைந்த அலுவலகக் கட்டடத்தின் மாடிப் பகுதியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஏற்கெனவே பயத்திலிருந்தவனுக்கு, சட்டென்று தோளில் கை வைத்து அழைத்தவன் - தன் உயிர் நண்பன் குடுமிநாதன் என்கிற பத்மநாபனே என்று தெரிந்தும் அதிர்ச்சி அத்தனை சீக்கிரம் நீங்கவில்லை.

"நீ எப்படிடா இங்க வந்தே?" என்று ரகசியக் குரலில் கேட்டான் பாலு.

"உன்னைத் தேடித்தான் வந்தேன். சட்டுனு காணாம போயிட்டியே. வாத்தியார் தேடறார்" என்றான் அவன்.

"சரிவா" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே பாய்ந்து, இருபதடி தூரம் ஓடியபின் தான் நின்று மூச்சு விட்டான்.

"என்னடா பண்ணே அங்கே? ஏன் இப்படி பயந்து ஓடிவரே? அங்க யார் இருக்கா? நீ எதைப் பார்த்தே?" என்றான் குடுமி.

"பயங்கரம்டா குடுமி. யாரோ பெரிய கொள்ளைக்காரங்க போலிருக்கு. இந்தத் தீவுல ஒரு பெரிய புதையல் இருக்காம். அடுத்த புதன்கிழமை ராத்திரி அதைத் தேடி எடுக்கப் போறாங்களாம். என்னவோ ப்ளூ ப்ரிண்ட் வேறா வருதாம் - புதையல் இருக்கற இடத்தைக் காட்ட! சினிமா மாதிரி பேசறாங்க. நம்பவே முடியலை"

"என்னடா சொல்றே?" என்று கத்தினான் குடுமி.

"உஷ்! உரக்கப் பேசாதே. நிஜம்தான் சொல்றேன். அவங்க பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். ஆளே இல்லாத இந்தத் தீவுல எதுக்கு மூணு நாலுபேர் அந்தப் பாழடைஞ்ச வீட்டு மாடில உக்காந்து பேசணும்? யாரும் வரமாட்டாங்கன்ற நம்பிக்கைலதான் அவங்க உரக்கப் பேசிட்டிருந்தாங்க. எப்படியோ அது என் காதுல விழுந்துடுச்சி..."

"புதையலா? என்ன புதையல்?"

"தெரியலை. கதை மாதிரி இருக்கில்ல? நாம முத்து காமிக்ஸ்ல படிப்போமே? அந்த மாதிரி போல இருக்கு. ஆனா இது கதை இல்லை. நெஜமாவே பேசிட்டிருந்தாங்க. அடுத்த புதன்கிழமை ராத்திரி இங்க இவங்க திரும்ப வரப்போறாங்க.புதையலைத் தோண்டி எடுக்கப் போறாங்களாம்...."

சிறிதுநேரம் நண்பர்கள் இருவரும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார்கள். நடந்த சம்பவத்தை அவர்கள் இருவராலுமே நம்ப முடியவில்லை. ஆனால் இது கதையல்ல. பாலு கதை விடுபவன் அல்ல என்று குடுமிநாதனுக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவன் முகம் பேயறைந்தது மாதிரி இருண்டு கிடப்பதையும் கவனித்தான். பயங்கரமாக ஏதோ சதி நடக்கப்போவதை பாலு கண்டுபிடித்திருக்கிறான்! இனி என்ன செய்வது?

"பேசாம நம்ம மகாலிங்க வாத்தியார் கிட்ட சொல்லிடலாமாடா?" என்று கேட்டான் குடுமி.

"சேச்சே" என்று சட்டென்று மறுத்துவிட்டான் பாலு. "நீ ஏன் அங்கல்லாம் போனன்னு நம்மை உதைப்பாருடா. பேசாம இரு. நாம கொஞ்சம் யோசிப்போம்" என்று சொன்னான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்தக் கடலோர காவல்படை அதிகாரி மிகவும் நல்லவராகத் தெரிகிறார். பேசாமல் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ன? எப்படியும் அந்தக் கொள்ளைக்காரர்கள் தீவில் தான் இருப்பார்கள், இருட்டும் வரை. பகலில் அவர்கள் படகு ஏறிக் கிளம்பமாட்டார்கள். கிளம்பினால், கடலோரக் காவல் படையிடம் சிக்கிக்கொள்ள நேரும். அதற்குள் அதிகாரியிடம் சொல்லி, இப்போதே அவர்கள் அங்கே போய் பிடித்துக்கொள்ளச் செய்துவிட்டால் என்ன?

குடுமிநாதன் சொன்னான்: "ம்ஹும். அதுவும் கஷ்டம்டா. ஒருவேளை நீ அவர்கிட்ட சொல்லி, அவர் போய் பிடிக்கறதுக்குள்ள அவங்க போயிட்டாங்கன்னா? உன்னைத்தானே திட்டுவாங்க?"

"எப்படிடா போகமுடியும்? இது சின்னத்தீவு தானே?"

"மக்கு. தப்பிக்கத் தெரியாமலா கொள்ளைக்காரங்க இங்க வருவாங்க. உனக்கும் எனக்கும்தான் இந்த இடம் புதுசு. அவங்களுக்கு பழகின இடமா இருக்கும்" என்றான் குடுமி.

ஒரு வகையில் அவன் சொல்லுவதும் சரிதான் என்று பாலுவுக்குத் தோன்றியது. இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ஒருத்தர் மேல் புகார் சொல்லி பிடித்துக்கொடுப்பது என்றால் அவரைப் பற்றிய முழு விவரங்களும் முதலில் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் வேறெதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு, தாம் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால்? எத்தனை அவமானமாகிவிடும்! மேலும் அவர்கள் கொள்ளைக்காரர்களாகவே இருந்து, கடற்படை அதிகாரியிடம் இம்முறை தப்பித்துவிட்டால் நாளைக்கு நம்மை வந்து உதைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? துரத்தினால் ஓடக்கூட முடியாது, இந்த குண்டு உடம்பை வைத்துக்கொண்டு! போட்டு மொத்து மொத்தென்று மொத்தி கடலில் வீசி விட்டால்? ஐயோ!

வேண்டாத வேலைதான் என்று தோன்றியது. "இப்ப வெளில மூச்சு விடவேணாம்டா. கொஞ்சம் யோசிப்போம். அப்புறம் முடிவு பண்ணலாம்" என்று குடுமிநாதனிடம் சொன்னான்.

இருவரும் பேயறைந்தவர்கள் மாதிரி திரும்பி வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சக மாணவர்கள் "எங்கடா போயிட்டிங்க ரெண்டுபேரும்? வாத்தியார் கோபமா இருக்கார்" என்றார்கள்.

இதுவேறு! ஹும். அவரை முதலில் சமாளித்தாக வேண்டும்.

மகாலிங்க வாத்தியார் கடலோரத்தில் கோபமூர்த்தியாக இருந்தார். பாலுவைப் பார்த்ததும் "குண்டா! எங்கடா காணாமப் போன?" என்று கேட்டார்.

"ஒண்ணுமில்ல சார். காடு அழகா இருக்கேன்னு சும்மா கொஞ்சம் சுத்திப்பாக்கப் போனேன். வழி மறந்துபோச்சு" என்றான் சட்டென்று.

மனத்துக்குள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. வாத்தியாரிடம் போய் பொய் சொல்லுவதா? கடவுளே. நான் ஒரு கெட்ட பையன் ஆகிக்கொண்டிருக்கிறேனா என்ன?

"டேய் குண்டா! வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்? பொய்மையும் வாய்மை உடைத்து. எப்பொ? எதாவது நல்லது நடக்கும்னா. நீ இப்ப உண்மைக்காரணத்தை உளறிவெச்சன்னா, ஏகப்பட்ட பிரச்னை வரும். ஒழுங்கா இன்னிக்கி வீடு போய் சேர முடியாது. பின்னால நிதானமா வாத்யார்கிட்டயே விளக்கி சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கலாம். போட்டுக் குழப்பிக்காத" என்று அவன் மனச்சாட்சி சொன்னது.

அன்று பிற்பகல் ஒரு மணி நேரம் தான் சாரணர் வகுப்பு நடந்தது. அதன்பின் மகாலிங்க வாத்தியார், மாணவர்களை அழைத்துக்கொண்டு தீவைக் கொஞ்சம் சுற்றி வந்தார். ரொம்ப உள்ளே போகாமல் ஓரளவு காட்டைச் சுற்றிப் பார்த்து இது என்ன மரம், அது என்ன கொடி, இந்தத் தழையைப் பார், அந்தப் பறவையைப் பார் என்று சொல்லிவிட்டு மீண்டும் கடற்கரைக்கே வந்து அமர்ந்தார்கள். கொஞ்சநேரம் அலையில் நின்று பையன்கள் களித்தார்கள்.

"குண்டா, நீ தண்ணில எவ்ளோதூரம் வேணா நடந்து போகலாம்டா. கடல் அலையால உன்னைத் தள்ளமுடியாது!" என்று வாத்தியார் ஜோக்கடித்தார்.

பாலுவுக்கு மனமெல்லாம் காலை அந்தப் பாழடைந்த வீட்டில் கேட்ட பேச்சுதான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. திரும்பத்திரும்ப அவர்கள் பேசியதை அவன் நினைவு கூர்ந்து பார்த்தான். பேச்சு துல்லியமாகத்தான் மீண்டும் காதுகளில் ஒலித்தது. அடுத்த புதன்கிழமை மீண்டும் வருவோம். அன்று அமாவாசை. அதற்குள் ப்ளூ ப்ரிண்ட் வந்துவிடும். புதையலை எடுத்துக்கொண்டு போய்விடலாம் - இதுதான் அவர்கள் பேசியது. சந்தேகமே இல்லை.

"என்னடா?" என்று கேட்டான் குடுமிநாதன்.

"டேய் குடுமி. எனக்கு சந்தேகமே இல்லடா. நிச்சயம் அவங்க பேசினது ஏதோ திருட்டுக் காரியமாத்தான். பிரமையெல்லாம் இல்லை. தெளிவாவே இருக்கேன். ஏதோ பெரிய சதி பண்றாங்க. அவங்க யாரு? என்ன சதி? இங்க என்ன புதையல் இருக்கு? அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சது? எப்படி கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியாம போச்சு? இவங்க இங்க அடிக்கடி வருவாங்களா? இதையெல்லாம் நாம கண்டுபிடிக்கணும்டா" என்றான் தீவிரமாக.

"என்னடா சொல்ற?" அதிர்ந்தே போனான் குடுமி.

"ஆமாடா. நாமே கண்டுபிடிப்போம். முதல்ல நான் காதால கேட்டதெல்லாம் உண்மைதானான்னு தெரிஞ்சுக்கணும். அவங்க என்ன பண்றாங்க, எப்படிப் பண்றாங்கன்னு ஒளிஞ்சு இருந்து பாக்கணும். நிச்சயமா தப்புகாரியம்தான் பண்றாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வாத்தியார் கிட்ட சொல்லி, கடற்படை ஆபீசர்கிட்ட சொல்லிடுவோம். அப்புறம் அவங்க பாத்துப்பாங்க" என்றான் பாலு.

"அதுசரி. நீ எப்படி கண்டுபிடிப்பே? விளையாடறியா? அடுத்த புதன்கிழமை நீ இங்க வரப்போறியான்ன?" என்றான் குடுமி.

"நான் மட்டும் இல்லே. நீயும் வரே. நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கண்டுபிடிப்போம்!" என்று சொன்னான் பாலு.

குடுமிநாதனுக்கும் அந்த விஷயம் திகிலூட்டும் பரவசமாகத்தான் இருந்தது என்றாலும் எப்படி மீண்டும் பன்றித்தீவுக்கு வரமுடியும்? கடற்படைப் படகு உதவி இல்லாமல், உடன் அதிகாரிகள் வராமல் இங்கு எப்படி வருவது? நீச்சலடித்துக்கூட வரமுடியாதே! ரொம்ப தூரமாச்சே, கரையிலிருந்து? சரி, நீச்சலடித்தே வரலாம் என்றாலும் தன்னால் முடியும். இந்த குண்டனால் எப்படி முடியும்? அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாதே! தண்ணியில் தூக்கிப் போட்டால் உருளைக்கிழங்கு மாதிரி அமுங்கிவிடுவானே.

தன் சந்தேகத்தை அவன் பாலுவிடம் சொன்னபோது அவன் கொஞ்சம் யோசித்தான். பிறகு, "தெரியலைடா. ஏதாவது வழி கண்டுபிடிப்போம். ஆனா நாம கண்டிப்பா அடுத்த புதன்கிழமை இங்க வந்தே ஆகணும். என்னதான் நடக்கப்போகுதுன்னு பார்த்தே தீரணும். ஒரு கொள்ளைக்கூட்டத்தைப் பிடிச்சிக் குடுக்கறதுன்னா சாதாரணமான விஷயமா? நாம அதை செஞ்சே ஆகணும். ஒரு தப்பு நடக்கும்போது பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது. ஏதாவது வழி கண்டுபிடிப்போம்" என்றான்.

மாலை அவர்கள் மீண்டும் கரைக்குத் திரும்ப சரியாக நான்கு மணிக்குக் கடற்படை ஸ்டீம்போட் வந்துவிட்டது. புதிதாக வேறு சில அதிகாரிகள் இம்முறை படகில் வந்தார்கள். மகாலிங்க வாத்தியாருடன் கை குலுக்கி, மாலைவேளைத் தேநீர் அருந்தி, பிஸ்கெட் சாப்பிட்டு, எல்லா மாணவர்களுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கி சின்னதாக ஒரு விழாவே நடத்திவிட்டார்கள்!

போட் புறப்பட்டதும் பாலுவும் குடுமியும் நேரே டிரைவரிடம் போனார்கள். "வணக்கம் சார். என் பேர் பாலு. இவன் என் ௬ப்ரெண்ட் பத்மநாபன். ரெண்டுபேரும் எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கறோம்" என்றான் பாலு.

"அப்படியா?" என்றார் டிரைவர். இவர் காலை அழைத்துவந்த டிரைவர் இல்லை.வேறு ஒருவர்.

"நீங்க இந்தத் தீவுக்கு அடிக்கடி வருவிங்களா டிரைவர் சார்?" என்றான் குடுமி.

"எப்பனாச்சும் வருவோம் தம்பி. இங்கல்லாம் எங்களுக்கு வேலை கிடையாது. இதைத் தாண்டி இன்னும் நாலு மைல் போனா மைனா தீவுன்னு ஒண்ணு இருக்கு. அங்க நம்ம ஆபீஸ் இருக்குது. அங்க அதிகாரிங்க போவாங்க. அப்ப போவறதுதான்" என்றார் டிரைவர்.

"இங்க கூட உங்க ஆபீஸ் ஒண்ணு இருக்கே" என்றான் பாலு.

"இருந்தது. இப்ப இல்ல. ஒரு பில்டிங் இருக்குமே? முன்ன அங்க சிப்பி எடுக்கறவங்க வருவாங்க. அங்கியே மீன் கொள்முதல் பண்றதும் நடக்கும். போன வருசத்துலேருந்து அங்க மீன் வரத்து நின்னுபோச்சி. ஒண்ணும் சரியா கெடைக்கறதில்லை. அதனால எல்லாரும் மைனா தீவு பக்கம் போக ஆரம்பிச்சிட்டாங்க..." என்றார் டிரைவர்.

ஓ என்று கேட்டுக்கொண்டு இருவரும் இஞ்சின் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

"இப்ப என்னடா பண்றது? " என்றான் குடுமி.

"எதுக்கு?"

"நாம அங்க திரும்பப் போகறதுக்கு?"

"அதுவா. அதுக்கு நான் ஏற்கெனவே ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேனே?" என்று குறும்பாகச் சிரித்தான் பாலு.

"என்ன வழி?" உடனே பரபரப்பானான் குடுமிநாதன்.

"சொல்றேன். ஆனா இப்ப இல்ல!" என்று கண்ணடித்தான் பாலு!

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |