Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 6
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அந்த அமாவாசைக்கு முதல் நாள் மாலை பாலு மீண்டும் டில்லிபாபுவைப் போய்ச் சந்தித்தான். இரண்டுபேரும் கடற்கரை மணலில் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனத்துக்குள் கொஞ்சம் பயமும் மேலான சாகச உணர்வும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது இருவருக்குமே.

"சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு பிடிச்சிக்குடுக்கறது நல்லகாரியம் தாண்டா பாலு. ஆனா நாமளோ சின்னப்பசங்க. எசகுபிசகா மாட்டிக்கிட்டா என்ன செய்யறது?" என்றான் டில்லிபாபு.

"பயப்படாத டில்லி! கண்டிப்பா மாட்டிக்க மாட்டோம். நம்ம ப்ளான் என்ன? ரகசியமா நாளைக்கு ராத்திரி பன்றித்தீவுக்குப் போறோம். யார் கண்ணுலயும் படாம ஒளிஞ்சு இருந்து அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கப்போறோம். அவங்களோட சதி என்ன, அந்தப் புதையல் என்னது, அதை எப்படித் தேடி எடுக்கறாங்கன்ற விஷயங்களை கவனமா பார்த்துவெச்சிக்கறோம். முடிஞ்சா கையும் களவுமா அவங்களை மடக்கப் பாக்கறது. அது எப்படி முடியும்னு தெரியலை. ஒரு வேளை முடியலைன்னா, மறுநாள் காலை கடற்படை அதிகாரிகள் கிட்ட விஷயத்தைச் சொல்லிடறது..நாம பார்த்ததுக்கு சாட்சியா போட்டோவேற எடுக்கப்போறோமே!"

"போட்டோவா? நீ என்ன சொல்றே? அது எப்படி முடியும்? ௬ப்ளாஷ் அடிச்சா தெரிஞ்சுடுமே:" என்று கவலைப்பட்டான் டில்லிபாபு.

"ஆமா. கொஞ்சம் ரிஸ்குதான். ஆனாலும் செஞ்சுதான் ஆகணும். இதுபத்தித்தான் இன்னிக்குக் காலைல குடுமிநாதன்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்" என்ற பாலு, சட்டென்று பல்லைக் கடித்துக்கொண்டான்.

"ஓ, அவந்தான் அந்த மூணாவது ஆளா!" என்று அட்டகாசமாகச் சிரித்தான் டில்லிபாபு.

"சே. நாளைக்கு வரைக்கும் உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். நான் ஒரு தவளை!" என்று செல்லமாகத் தன் தலையில் தானே குட்டிக்கொண்டான் பாலு.

"சொன்னதும் ஒரு வகைல நல்லதுதாண்டா. அவனையும் அழைச்சிக்கிட்டு வா. மூணுபேருமே சேர்ந்து பேசி முடிவு பண்ணுவோம்" என்றான் டில்லி.

இருட்டத்தொடங்கிய நேரம் பாலு, குடுமிநாதன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அவனையும் கடற்கரைக்கு அழைத்து வந்தான். டில்லியும் அவனும் சில நிமிடங்கள் பழைய கதைகள் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தார்கள்.

"கேட்டுக்கங்கடா. இதான் ப்ளான். நாளைக்கு நைட் நீங்க ரெண்டுபேரும் வீட்டுல ஏதாவது சொல்லிட்டுக் கிளம்பி வரீங்க. கரெக்டா இந்த மாதாகோயில் பின்புற சுவர்கிட்ட வந்து நிக்கணும். ஒன்பது மணிக்கு நான் வந்துடுவேன். ஒன்பதரைக்கு இங்க வெளிச்சம் சுத்தமா போயிடும். மாதா கோயில் வாசல்ல இருக்கற ஒரே ஒரு பல்பு மட்டும்தான் அப்ப எரியும். யார் கண்ணுலயும் படாம நாம கட்டுமரம் ஏறிடணும். கட்டுமரத்தைக் கடலுக்குள்ள தள்ள எனக்கு குடுமி உதவி பண்ணணும். பாலு, உன்னால முடியாதுன்னு எனக்குத் தெரியும்! நீ உன் உடம்பை பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து கட்டுமரத்துல ஏத்தினாலே பெரிய விஷயம்!" என்று சொல்லிவிட்டு டில்லி சிரித்தான்.

"அது ஒண்ணுதாண்டா எனக்கு பயமா இருக்கு. எனக்கு வேற நீச்சல் தெரியாது!" என்று வருந்தினான் பாலு.

"பத்திரமா போய்ச்சேருவோம். கவலையே படாத. கட்டுமரம் ஏறினா, சரியா அரை மணி நேரத்துல பன்றித்தீவுக்குப் போயிடலாம். காத்து நமக்கு சாதகமா இருக்கணும். அது ஒண்ணுதான் என் கவலை. உன்னை பத்திரமா கொண்டுபோகவேண்டியது என் பொறுப்பு. போதுமா?" என்றான் டில்லிபாபு.

மூவரும் திருப்தியுடன் கலைந்து, அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

மறுநாள் காலையிலிருந்தே பாலு கவனமாகத் தன் அம்மாவிடம், அன்றிரவு குடுமிநாதன் வீட்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். "க்ரூப் ஸ்டடி பண்ணப்போறோம்மா. அரையாண்டுப் பரீட்சை வருதில்ல? அதுக்காக" என்கிற அவனது பொய் அவனுக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு நல்ல காரியத்துக்காகச் சொல்லப்படும் பொய் தவறாகாது என்றும் தன்னையே தேற்றிக்கொண்டான்.

"இத்தனை நாள் இல்லாம இதென்னடா புதுப்பழக்கம்? வேணும்னா அவனை நம்ம வீட்டுக்கு வந்து படிக்கச் சொல்லேன்" என்றாள் பாலுவின் அம்மா.

"ஐயோ அம்மா! கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன். இன்னிக்கு நானும் மத்த சில ௬ப்ரெண்ட்ஸும் அவன் வீட்டுக்குப் போறோம். இன்னொருநாள் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வருவாங்க. சேர்ந்து படிச்சி எல்லாரும் நைண்டி மார்க்ஸுக்கு மேல வாங்கறதா ப்ளான் பண்ணியிருக்கோம்" என்றான் பாலு.

"சரி, நல்லா படிங்க. அதுபோதும்" என்றவள், "போகும்போது ஞாபகப்படுத்து. ராத்திரி பசிச்சா சாப்பிட கொஞ்சம் தின்பண்டங்கள் தரேன்" என்றும் சொன்னாள்.

ஆஹா. கட்டுமரப் பயணத்துக்கு உற்ற தின்பண்டங்களாக அவை இருக்குமோ என்று பாலுவுக்குள் ஒரு குஷி பிறந்தது. அடக்கிக்கொண்டு வழக்கம்போல் பள்ளிக்குப் போய்வந்தான்.

மாலையிலிருந்தே அவனுக்குப் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. குடுமிநாதனும் அவன் வீட்டில் 'க்ரூப் ஸ்டடி'க்காக பாலுவின் வீட்டுக்குப் போவதாகவே சொல்லியிருந்தான். கவனமாக திட்டமிட்டே இருவரும் செயல்பட்டார்கள். டில்லிபாபுவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. கட்டுமரம் எடுத்துக்கொண்டு கடலுக்குள் போவது அவனைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணமானதொரு விஷயம். அதுவும் பொதுவாகவே மாலை வேளையில்தான் அவனும் அவனது அப்பாவும் மீன் பிடிக்கக் கிளம்புவார்கள். மறுநாள் மாலைதான் கரைக்கு வருவார்களாம். டில்லி சொல்லியிருக்கிறான்.

"என்னைப்பத்தி கவலைப்படாதிங்கடா. எனக்குப் பிரச்னையே இல்லை. எப்படியும் கரெக்டா வந்துடுவேன். நீங்க ஒழுங்கா வந்து சேருங்க. அதுபோதும். வரும்போது எடுத்து வரவேண்டிய பொருட்கள் ஞாபகம் இருக்கில்ல?"

"ஓ. ஒரு டார்ச் லைட், சின்ன கேமரா, பேனா கத்தி, ஒரு பெரிய கயிறு.. அப்புறம்..."

"மறந்துட்டியா? கொசு மருந்து அடிக்கற குழாய் சொல்லியிருந்தேனே" என்று நினைவூட்டினான் டில்லி.

"கண்டிப்பா எடுத்துட்டு வரேன். எங்கவீட்டுல ஒரு காலி ஸ்ப்ரே பாட்டில் இருக்கு. உள்ள தண்ணி ஊத்தி அடிச்சி விளையாடியிருக்கேன்." என்றான் பாலு.

"ஆனா, நான் சொன்னது விளையாட அல்ல. ஒரு பாதுகாப்புக்கு. அதுக்குள்ள நான் ஒரு சமாசாரம் ஊத்தி வெக்கறேன். ஒருவேளை உபயோகப்படலாம்" என்றான் டில்லி.

"என்னதுடா?" என்றான் குடுமிநாதன்.

"உஷ்! அதெல்லாம் நாளைக்குப் போகும்போது சொல்லுறேன்." என்று அவன் சொல்லியிருந்தான்.

இரவு ஏழு மணிக்கே அப்பாவின் குட்டி கேமராவை எடுத்து, அதில் பிலிம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் தன் பள்ளிக்கூட நோட்டுப்புத்தகப் பையில் போட்டுக்கொண்டான் பாலு. தான் எடுத்துச் செல்லவேண்டிய பிற பொருட்களையும் ரகசியமாக எடுத்து அதே பையில் திணித்துக்கொண்டு மேலே இரண்டு புத்தகங்களை வைத்து மறைத்துக்கொண்டான். கயிறு மட்டும் குடுமிநாதன் எடுத்து வருவதாகச் சொல்லியிருந்தான். இதெல்லாம் எதற்கு என்று திட்டம் இல்லாவிட்டாலும் ஏதாவது வகையில் உபயோகப்படும் என்று டில்லிபாபுதான் வலியுறுத்திச் சொல்லியிருந்தான்.

கடவுளே! இத்தனை ரகசியமாகத் திட்டமிட்டுப் புறப்படும் காரியம் நல்லபடியாக முடியவேண்டும்! பன்றித்தீவின் மர்மம் என்னவென்று எப்படியாவது தாங்கள் கண்டுபிடித்தே ஆகவேண்டும். கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் சமூக விரோதிகளைப் பிடித்தே தீரவேண்டும் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தான் பாலு.

"ராத்திரி ரொம்பநேரமெல்லாம் கண் விழித்துப் படிக்கவேணாம் பாலு. ஒரு பன்னெண்டு மணீக்குப் படுத்துடணும்" என்றார் பாலுவின் அப்பா.

"சரிப்பா."

"நான் வேணா உன்னை அவங்க வீட்டுவரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்"

திடுக்கிட்ட பாலு, "ஐயோ, அதெல்லாம் வேணாம்பா. நான் என்ன குழந்தையா? பக்கத்துத் தெருவுக்குப் போகத்தெரியாதா?" என்று அவரை அடக்கிவிட்டு அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான்.

"ஏண்டா இன்னிக்கு சரியாவே சாப்பிடலை?" என்றாள் அம்மா.

"இல்லியேம்மா. ஒழுங்காத்தானே சாப்பிட்டேன்?"

"ம்ஹும். என்னவோ சரியில்லை. சாயங்காலத்துலேருந்தே ஒரே பரபரப்பா இருக்கே நீ!"

அவனுக்கு திக்கென்றது. அம்மா எப்படி இப்படி எல்லாவற்றையும் அலட்சியமாகக் கண்டுபிடித்துவிடுகிறாள்! பன்றித்தீவு மர்மத்தைக் கூட அம்மா ஒருத்தியை அனுப்பினால் கண்டுபிடித்து விடுவாளோ.

மனத்துக்குள் வியந்தபடி புறப்பட்டான்.

பாலு கடற்கரை மாதா கோயிலை அடையும்போது மணி சரியாக ஒன்பது. குடுமி வந்திருக்கவில்லை. மிகவும் அமைதியாக இருந்தது சூழ்நிலை. தூரத்தில் கடலின் மெல்லிய இரைச்சல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. தெற்கே இருநூறு அடி தொலைவில் சாலையில் மங்கலான விளக்கு ஒளி தெரிந்தது. அங்கிருந்து யார் பார்த்தாலும் அவன் அங்கே நிற்பது தெரியாது. தப்பித்தவறி மாதா கோயிலுக்கு இந்நேரம் பார்த்து யாரும் வராமல் இருந்தால் போதும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

ஒன்பது பத்துக்குத்தான் குடுமி வந்தான். சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே டில்லிபாபுவும் வந்துவிட்டான்.

"எல்லாரும் தயாரா? கிளம்பலாமா?"

மூவரும் ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டார்கள்.

"நாம சின்னபசங்கதாண்டா. ஆனாலும் ஒரு நல்ல காரியமாத்தான் கிளம்பறோம். கஷ்டமில்லாம நல்லபடியா முடிச்சிட்டு வந்தா பிள்ளையாருக்குக் கண்டிப்பா ஒரு தேங்காய் உடைக்கணும்" என்று பாலு சொன்னான்.

"சரி, கிளம்புவோம்" என்றான் டில்லி.

மூவரும் அடிமேல் அடிவைத்து கடலை நெருங்கினார்கள். பாலுவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. காரணம் விளங்காத பயம் ஒன்று பந்துபோல் மனத்துக்குள் சுழன்றது. டில்லியும் குடுமியும் முனைந்து கட்டுமரத்தை இழுத்துத் தண்ணீரில் விட்டார்கள்.

"வாடா, சீக்கிரம் வந்து ஏறு" என்று கத்தினான் டில்லிபாபு.

பாலு நீரில் இறங்கி கட்டுமரத்தைப் பிடித்து ஏறும்போதே அது ஒரு பக்கமாகச் சரிந்தது.

"டேய்,டேய்! பாத்துடா! நீ ஏறினா கட்டுமரத்துக்கே வலிக்க்குது போலிருக்கே!"

"பயமா இருக்குடா"

"சீ, பயப்படாம ஏறு. எங்க ரெண்டுபேருக்கும் நீச்சல் தெரியும். கவலைப்படாத" என்றான் டில்லி.

ஒரு வழியாக அவன் கட்டுமரத்தில் ஏறி உட்கார்ந்து ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அதிகம் அலையில்லாத கடலில் கட்டுமரம் மிதக்கத் தொடங்கிய அதேவேளை -

பாலுவின் அம்மாவுக்குக் கவலை வந்துவிட்டது. "இந்தப் பையனுக்கு ராத்திரி பசிக்குமே! முறுக்கு எடுத்து வெச்சேன். குடுக்க மறந்துட்டேன். நான் ஒருநிமிஷம் அந்த பத்மநாபன் வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்று பாலுவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவசரமாகப் படியிறங்கினாள்.

தெரு முனையிலேயே குடுமிநாதனின் அம்மா எதிரே வருவதைப் பார்த்தாள்.

"யாரு? பாலு அம்மாவா? எங்க பையன் உங்க வீட்டுக்குத் தானே வந்திருக்கான்? படிக்கப் போறேன்னு சொல்லிட்டு புத்தகத்தை மறந்துட்டுப் போயிட்டான். அதைத்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். நீங்க குடுத்துடறிங்களா?" என்று கேட்டாள்.

"என்னது!" என்று அதிர்ந்து நின்றுவிட்டாள் பாலுவின் அம்மா.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |