Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 8
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

பாலுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவினாடி மூளை தன் சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்டதோ என்று கருதும் விதத்தில் உறைந்துபோய்விட்டது. பயத்தில் அவனுக்கு நெஞ்சு வறண்டுபோனது. உடல் உறுப்புகள் எல்லாம் கட்டுப்பாட்டை இழந்து தொளதொளவென்று ஆகி உதற ஆரம்பித்தன. பேச்சு வரமறுத்தது. ஒரு வார்த்தை குரல் கொடுத்துத் தன் நண்பர்களை எழுப்ப நினைத்தான். ம்ஹும். எது செய்யவும் அவனால் முடியவில்லை. காரணம், அவன் கண்ட காட்சி!

சட்டையின் ஈரம் உலர்ந்துவிட்டதா என்று பார்ப்பதற்குத்தான் அவன் தலைமாட்டில் உலர்த்தியிருந்த சட்டையை எடுக்கக் கையை நீட்டித் தலையைத் திருப்பினான். ஆனால் பத்தடி தூரத்தில் எமகாதகன் மாதிரி ஒரு மனிதன் அமைதியாக நின்றுகொண்டு தங்களையே பார்த்துக்கொண்டிருப்பான் என்று அவன் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. யாரைத் தேடி அவன் அந்தத் தீவுக்கு வந்திருந்தானோ, அவர்களுள் ஒருவன்! புதையல் எடுக்கிறேன் பேர்வழி என்று பேசிய கூட்டத்தில் ஒருத்தன். ஏதோ சட்டவிரோதமான காரியத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவன்! அவர்கள் எடுக்கும் புதையல் எது, எப்படி எடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத்தானே அவனே அங்கே வந்திருக்கிறான்! ஆனால் இப்படி அவனிடமே மாட்டிக்கொள்ள நேர்ந்துவிட்டதே என்று அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.

'டேய், டேய்' என்று மெதுவாக டில்லிபாபுவைப் பார்த்துக் குரல் கொடுக்க முயற்சி செய்தான்.

'இருடா. இன்னும் ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்போம். அப்புறம் ௬புல்நைட் வேலை இருக்கில்ல?' என்றான் டில்லிபாபு.

'டேய், பின்னால பாருடா' என்றான் குரலை அடக்கி, ரகசியமாக.

வேண்டாவெறுப்பாகத் தலையைத் தூக்கிப் பார்த்த டில்லியும் மின்சாரம் பாய்ந்தவன் போலச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றான். இருவரும் இப்படி எதைப் பார்த்து மிரள்கிறார்கள் என்ற யோசனையுடன் தானும் எழுந்த குடுமிநாதன், சிறிது தொலைவில் லுங்கியை மடித்துக்கட்டி, கால்களைச் சாய்த்துவைத்து நின்று தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மர்ம மனிதனைக் கண்டதும் 'ஐயோ, அம்மா பயமா இருக்கே' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

அவ்வளவுதான். அதற்குமேல் அந்த மர்ம மனிதன் வெறுமனே கைகட்டி நிற்கவில்லை. மெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் மூவரையும் நெருங்கினான். அருகே வந்த சூட்டிலேயே டில்லிபாபுவின் தலைமுடியை ஒரு கையாலும் பாலுவின் காதை ஒரு கையாலும் இறுகப் பிடித்து 'யார்றா நீங்க?' என்றான் கட்டைக் குரலில்.

ஒருகணம் என்ன பேசுவது என்று தெரியாமல் மூவரும் தடுமாறிப் போனார்கள். ஏதாவது பொருத்தமாகக் கதைவிடலாம் என்று பாலுவுக்குத் தோன்றியது. ஆனால் மூவரும் ஒரே சமயத்தில் வேறு வேறு கதைகளாக விடத்தொடங்கினால் விபரீதமாகப் போய்விடுமே என்றும் கவலையாக இருந்தது. அவன் இவ்வாறு வேகவேகமாக யோசித்துக்கொண்டிருந்ததே தன் 'கதாகாலட்சேபத்தை' குடுமிநாதன் ஆரம்பித்துவிட்டான்!

"இல்லசார்... நாங்க ஸ்கூல் பசங்க சார்... இன்னிக்கி ஸ்டவுட்ஸ் மாணவர்களை இங்க பிக்னிக் மாதிரி சாயங்காலம் கூட்டிக்கிட்டு வந்தாங்க சார்.... மொத்தம் பதினஞ்சு பாய்ஸ் வந்தோம் சார்... எல்லாரும் கரையிலேயே இருந்தாங்க. நாங்க மூணுபேர் மட்டும் தீவை சுத்திப் பாக்கலாம்னிட்டுப் போனோம்.. கால் வலி எடுத்து ஒரு இடத்துல படுத்தோம். அப்படியே தூங்கிட்டோம் சார். எழுந்து பார்த்தா இருட்டிடிச்சி. இங்க எங்க ஸ்கூல் பசங்களைத்தேடி வந்தோம். அவங்கல்லாம் போயிட்டாங்க போலருக்கு" என்று அழுவது போல நடிக்கத் தொடங்கினான் குடுமி.

அந்த மர்மமனிதன் ஒரு வினாடி அவன் சொன்ன கதையை உள்வாங்கி யோசித்தான். ம்ஹும். திருப்தி ஏற்படவில்லை போலிருக்கிறது.

'டேய், என்னடா கதை சொல்றிங்க? மூணு பசங்களை விட்டுட்டு எப்பிடிடா உங்க வாத்திமாருங்க போவாங்க?' என்றான் கோபமாக.

'தெரியலை சார்.. அதான் எங்களுக்கும் கவலையா இருக்கு. இப்ப நாங்க எப்படி வீட்டுக்குப் போவோம்?' என்று பாலு தன் பங்குக்கு அழுவது போல நடிக்க ஆரம்பித்தான்.

இவர்களை என்ன செய்யலாம் என்று அவன் கொஞ்சநேரம் மீண்டும் யோசித்தான். மூவரின் தோள்களையும் பிடித்துத் தள்ளிக்கொண்டு, 'வாங்கடா என்னோட' என்று நடக்க ஆரம்பித்தான்.

இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று மனத்துக்குள் வருந்தியபடி மூவரும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக அவர்கள் வந்த கட்டுமரத்தை டில்லிபாபு அத்தனை சுலபமாகக் கண்ணில் பட்டுவிடாதபடி இழுத்துக்கொண்டுபோய் ஏற்கெனவே ஒரு புதரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு, கட்டுமரத்தை இழுத்து வந்த மண்பாதையில் சுவடு தெரியாத வண்ணம் காலால் மண்ணை எத்தி எத்தி மூடியிருந்தான்.

அந்த மர்ம மனிதன் அவர்களை காட்டுக்கு உள்ளே அழைத்துப் போக ஆரம்பித்திருந்தான். பாலுவுக்கு இனி நடக்கப்போவது என்ன என்பது எளிதில் விளங்கிவிட்டது. எப்படியும் அவன் தங்களைத் தம் குழுவினர் முன் கொண்டுபோய் நிறுத்துவார்கள். நாலுபேரோ, பத்துபேரோ, நாற்பதுபேரோ. நடுராத்திரி இந்தத் தீவில் எப்படி அவர்கள் தனியே வந்து படுத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பார்கள். பதில் திருப்திகரமாக இருந்தால் ஒருவேளை தப்பிக்கலாம். இல்லாவிட்டால் என்ன செய்வார்களோ. இப்படியாகிவிட்டதே என்று பாலு மிகவும் வருந்தினான்.

காட்டுப்பாதை மிகவும் இருட்டாக இருந்தது. ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை எனினும் நன்கு பழகிய பாதை போல அந்த மர்ம மனிதன் அவர்களை வழிநடத்தி இழுத்துப் போய்க்கொண்டே இருந்தான். பாலுவுக்குத் தங்களை அவன் அழைத்துப்போகும் இடம் எதுவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு யூகம் இருந்தது. அந்தத் தீவில் அவன் முந்தைய வாரம் பார்த்தப் பாழடைந்த பங்களா தவிர வேறு கட்டடம் கிடையாது. எப்படியும் அவன் அங்கேதான் போவான் என்று அவன் நினைத்தான். அங்கேதான் அந்த மர்ம கும்பல் தங்கியிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

இருபது நிமிட நடைக்குப் பிறகு அவன் நினைத்தது போலவே அந்த மர்ம பங்களாவை அவர்கள் அடைந்தார்கள்.

'வாங்கடா' என்று மூவரின் தோள்களையும் ஒரே கையால் அணைத்து உள்ளே தள்ளிக்கொண்டுபோனான் அந்த மர்ம மனிதன்.

சத்தம் கேட்டு பங்களாவுக்குள் சில மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வேறு சிலர் உடைந்த சன்னல் வழியே எட்டிப்பார்த்தார்கள்.

தபதபவென்று வேறு சிலர் வெளியே வருவதையும் பாலு பார்த்தான். 'யாரு யாரு' என்றுஅவர்கள் கேட்கவும், அழைத்துவந்த மர்ம மனிதன், குடுமிநாதன் சொன்ன கதையை அவர்களிடம் சொன்னான்.

'உஸ்கோலு பசங்களாம். டூருக்கு வந்திருந்தாங்களாம். இவனுகளை மட்டும் விட்டுட்டுப் பூட்டாங்கன்னு சொல்றாம்பா. என்னால நம்ப முடியல' என்றான் அந்த மர்ம மனிதன்.

'ஆமாப்பா. போனவாரம் கூட இந்தமாதிரி ஒரு ஸ்கூல் பசங்க குரூப்பு இங்க வந்திருந்ததுன்னு நம்ம மாணிக்கம் சொன்னான். கரையோரம் என்னவோ க்ளாஸ் எடுத்தாங்களாமா...' என்றான் இன்னொருவன்.

'டேய், யார்டா நீங்க? உண்மைய சொல்லுங்க?' என்றான் வேறொருவன்.

'சார்.. உண்மையிலேயே நாங்க ஸ்கூல் பசங்க தான்சார். எங்களோட மொத்தம் பதினஞ்சுபேரு வந்தாங்க. நாங்க வழி தவறிப்போய் தீவுக்கு அந்தப்பக்கம் போயிட்டோம் சார்" என்றான் டில்லிபாபு.

"மணி என்னாடா ஆவுது?'' என்றான் புதிதாக அங்கே வந்த இன்னொரு மர்ம மனிதன்.

'பதினொண்ணாவப் போவுது' என்றான் அவர்களை அழைத்துவந்தவன்.

'இவனுகளை விசாரிச்சிட்டிருக்க இப்ப டயம் இல்லை. போட் வந்துடும். பேசாம இவங்களை ரூம்ல போட்டுப் பூட்டுங்க. நம்ம வேலை முடிச்சிட்டு, விடிஞ்சதும் விசாரிச்சிப்பம்' என்றான் அவன்.

'சரி' என்று உடனே அவர்களில் ஆளுக்கொருவர் அவர்கள் மூவரையும் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த பங்களாவின் உள்ளே போனார்கள்.

தடதடவென்று நடந்தால் சத்தமெழுப்பும் மாடிப்படியேறி அழைத்துச் சென்றவர்கள், அங்கே இருந்த நான்கு அறைகளுள் ஒன்றில் அவர்கள் மூவரையும் பிடித்துத் தள்ளி, வெளியே இழுத்துத் தாழ்ப்பாள் போட்டார்கள். 'பசங்களா, பேசாம படுத்துத் தூங்குங்க. இங்கல்லாம் முழிச்சிக்கிட்டு இருக்கக் கூடாது' என்றான் அழைத்து வந்தவர்களுள் ஒருவன்.

'சரிங்க' என்று சமர்த்து போல உள்ளிருந்தபடி குரல் கொடுத்தான் பாலு.

ஐந்து நிமிடங்கள் அவர்கள் பேசக்கூட இல்லை. ஆளுக்கொரு மூலையில் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்கள். இருட்டில் ஒருவர் முகம் கூட அடுத்தவருக்குத் தெரியவில்லை. அந்த அறை எத்தனை நீள அகலம் கொண்டது, ஜன்னல் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. வெளியிலிருந்து அன்றைக்குப் பார்த்தபோது சன்னல், கதவுகள் எதுவுமே இல்லாத பாழடைந்த ஒரு கட்டடமாகத் தென்பட்ட அந்தக் கட்டடத்தில் இப்படியொரு சிறைக்கூடம் இருக்க முடியுமா என்று பாலுவுக்கு வியப்பாக இருந்தது.

தனது பதற்றத்தை முதலில் தணித்துக்கொண்டு அதன்பிறகு நிதானமாக யோசிக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அமைதியாகச் சிலநிமிடங்கள் படுத்து இருந்தான்.

நடந்தது என்ன? எதிர்பாராவிதமாக அவர்களை மர்ம மனிதர்களுள் ஒருவன் கடற்கரையில் பார்த்துவிட்டான். அழைத்துக்கொண்டு வந்து இந்த அறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். ரொம்ப சரி. ஆனால் பாலு எதற்காக அத்தனை பாடுபட்டு அந்தத் தீவுக்கு வந்தான்? அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் புதையலை எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்துக் கண்டுபிடித்து, காவல்துறையில் அவர்களை பிடித்துக் கொடுப்பதற்குத்தானே? இன்றைக்கு விட்டால் மீண்டும் எப்போது அதற்கான சந்தர்ப்பம் வரும்? வாய்ப்பே இல்லை. எப்படியும் அவர்கள் தம் வேலையைப் பன்னிரண்டு மணிக்குப் பிறகுதான் தொடங்குவார்கள். இன்னும் ஒருமணிநேர அவகாசம் இருக்கிறது. அதற்குள் இந்த அறையிலிருந்து வெளியேறி, அவர்களைப் பின் தொடர்ந்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

முடியும்! கண்டிப்பாக முடியும். முடியாது என்று ஒன்று உண்டா என்ன?

அவன் தன் இரு நண்பர்களையும் ரகசியக் குரலில் அருகே அழைத்தான்.

'என்னடா?'

'இதோ பாருங்கடா. நாம ஒரு சங்கடத்துல மாட்டிக்கிட்டிருக்கோம். அதுக்காக மனச்சோர்வு அடைஞ்சிடக் கூடாது. கண்டிப்பா இவங்க யாரு என்னன்னு நாம கண்டுபிடிச்சே தீரணும். நம்ம திட்டத்துல எந்தப் பிசகும் இருக்கக் கூடாது' என்றான் பாலு.

'அதான் எப்படின்னு கேக்கறேன். முதல்ல எப்படி இந்த அறையிலேருந்து வெளிய போறது?' என்றான் குடுமி.

'போறோம். நிச்சயம் வெளிய போகத்தான் போறோம். ரகசியத்தைக் கண்டுபிடிக்கத்தான் போறோம்' என்றான் பாலு மிகுந்த நம்பிக்கையுடன்.

'அட, எவண்டா இவன்! எப்படிப் போகப்போறோம்? அதைச்சொல்லு" என்றான் டில்லிபாபு.

பாலு மர்மமாகப் புன்னகை செய்தான்.

"வழி தோணிடிச்சி. கிட்டவாங்க. உங்க காதுகளை என் வாய்கிட்ட கொண்டுவந்து வைங்க. சொல்றேன்" என்றான்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |